காஞ்சி திரும்பினார் இளையவர்: மடாதிபதியாகிறார்?
காஞ்சிபுரம்:
சங்கர மடத்தின் இளைய மடாதிபதி விஜயேந்திரர் இன்று காலை காஞ்சிபுரம் வந்து சேர்ந்தார். அவருக்கு மிகச் சிறப்பானவரவேற்பு அளிக்கப்பட்டது.
அவரது வருகையைத் தொடர்ந்து மடத்தின் வழக்கமான பூஜைகள் நடக்க ஆரம்பித்துள்ளன. பசு கொண்டு வரப்பட்டு கோமாதாபூஜையும் நடந்தது.
இந்தக் கொலை வழக்கில் இளையவருக்கு எந்தத் தொடர்பும் இருப்பதாகத் தெரியவில்லை என போலீசார் கூறியுள்ள நிலையில்,கைதான சங்கராச்சாரியாரிடம் இருந்து மடத்தின் பொறுப்புக்கள் விரைவில் அவரது கைக்கு மாற்றிவிட முக்கிய பிரமுகர்கள்முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
இன்று காலை மடத்துக்குத் திரும்பிய விஜயேந்திரர், முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.என். சேஷன் மற்றும் கொலைவழக்கில் முக்கிய குற்றம் சாட்டப்பட்டுள்ள தனது தம்பி ரகு ஆகியோரை அருகில் வைத்துக் கொண்டு நிருபர்களிடம் பேசுகையில்,நடந்த சம்பவங்களால் மிகவும் புண்பட்டுப் போயிருப்பதாகத் தெரிவித்தார்.
காஞ்சி மடாதிபதிகள் ஜெயேந்திரரும், விஜயேந்திரரும் மெகபூப் நகரில் முகாமிட்டிருந்தபோது தான் சங்கரராமன் கொலைவழக்கில் ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து விஜயேந்திரரும் கைதாகலாம் என்று கூறப்பட்டது. இதனால் அவர்காஞ்சிபுரம் வருவதைத் தவிர்த்து வந்தார்.
அவருக்கு ஆந்திர போலீசார் கமாண்டோ போலீஸ் பாதுகாப்பு அளித்தனர். ஜெயேந்திரரின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை அறிந்தபின்னரே காஞ்சி வருவது குறித்து முடிவு செய்வேன் என்று அறிவித்திருந்தார். இந்த மனு நாளை உச்ச நீதிமன்றத்தில்விசாரிக்கப்படவுள்ளது.
இந் நிலையில் ஜெயேந்திரரின் கைதால் காஞ்சி மடத்தின் அன்றாட பூஜைகள், நடவடிக்கைகள் முழுமையாக தடைபட்டுப்போயின. இதனால் விஜயேந்திரர் உடனே வந்து மடத்தின் அன்றாட சம்பிரதாயங்களை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்றகோரிக்கை வலுத்தது.
மேலும் இக் கொலையில் விஜயேந்திரரின் தம்பி ரகுவுக்கே அதிக தொடர்புள்ளதும், விஜயேந்திருக்கு இதில் சம்பந்தம்இருப்பதற்கான ஆதாரம் ஏதும் இல்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதனால் அவரிடம் தேவைப்பட்டால் விசாரணை மட்டுமே நடத்துவோமே தவிர, கைது செய்யும் திட்டமேஇல்லை எனபோலீசார் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.
இந் நிலையில் மடத்தின் பொறுப்பை அவர் வசம் கொண்டு வர இந்து ஆசிரியர் ராம் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் முயற்சிமேற்கொண்டுள்ளனர்.
மடத்தின் அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருப்பதால் கவலை கொண்டுள்ள ராம், இது தொடர்பாக விஜயேந்திரரிடம்பேசியதாகவும் தெரிகிறது.
மடத்தை அப்படியே விட்டால் அதை போலீஸ் தனது கட்டுப்பாட்டில் எடுக்கவும் வாய்ப்புள்ளதாகவும் மடத்தின் நிர்வாகிகள்விஜயேந்திரரிடம் தெரிவித்துள்ளனர். இதனால் அவரை உடனே திரும்புமாறு ஆர்.எஸ்.எஸ். தலைவர் ராம் மாதவும் நேரில்கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து மெகபூப் நகரில் இருந்து அவர் நேற்றிரவு அவசரமாக காஞ்சிபுரம் நோக்கி பயணத்தைத் தொடங்கினார்.காமகோடிபீட வாகனத்தில் வந்த அவருக்கு ஆந்திர போலீசாரின் 20 வாகனங்களும் கமாண்டோ படையினரும் பாதுகாப்புஅளித்து அழைத்து வந்தனர்.
ஆந்திர-தமிழக எல்லையான பொன்பாடியில் அவரை என்.ராம் வரவேற்றார். அவரை தனது காரில் ஏற்றிக் கொண்டு சென்னைவந்தார் ராம். மெகபூப் நகரில் இருந்து பாதுகாப்புடன் விஜயேந்திரரை அழைத்து வந்த ஆந்திர போலீசார், தமிழககாவல்துறையின் பாதுகாப்பில் அவரை ஒப்படைத்துவிட்டுத் திரும்பினர்.
காஞ்சி எல்லையில் சர்வ தீர்த்தம் குளக்கரையில் அவருக்கு வெண்கொற்றக் குடை வரவேற்பு அளிக்கப்பட்டது. காமாட்சிஅம்மன் ஆலய பிரசாதமும் தரப்பட்டது.
மடத்தின் நிர்வாகிகள் அவருக்கு மாலை அணிவித்து பூர்ண கும்ப மரியாதையுன் வரவேற்பளித்தனர். சங்கராச்சாரியின் மிகத்தீவிர ஆதரவாளர்களாகக் கருதப்படும் சில நிர்வாகிகளும் இதில் அடங்குவர்.
இன்று காலை 8.30 மணிக்கு அவர் காஞ்சிபுரம் வந்து சேர்ந்தார். வேனில் இருந்து இறங்கிய அவரை நிருபர்கள் மொய்த்தனர்.ஆனால், அவர் யாருடனும் பேசவில்லை. நேரடியாக மடத்துக்குள் சென்றுவிட்டார். பத்திரிக்கையாளர்களுடம் பேச இளையவர்விரும்பவில்லை என மடத்தின் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
இதனால் கடுப்புடன் காத்திருந்த நிருபர்களை நோக்கி 9.10 மணியளவில் அந்த நிர்வாகி ஓடி வந்தார். உங்களை இளையவர்சந்திக்க அழைக்கிறார் என்றார். உடனே நிருபர்கள் உள்ளே ஓடினர்.
அவர்களிடம் பேசிய விஜயேந்திரர், நடந்த சம்பவங்களால் நான் மிகவும் புண்பட்டுள்ளேன். பிரச்சனை தீர பக்தர்கள்அனைவரும் இறைவனை வழிபட வேண்டும் என்றார். இதற்கு மேல் பேச அவர் மறுத்துவிட்டார்.
அருகில் சட்டை அணியாமல் நின்றிருந்த சேஷன் அவருக்கு ஆலோசனைகள் தந்து கொண்டிருந்தார். அவருடன் ரகு, வி.எச்.பி.மாநிலத் தலைவர் வேலாயுதம் ஆகியோரும் இருந்தனர்.
இளையவர் திரும்பிவிட்டார் என்று அறிந்த மடத்தின் விசுவாசிகள் குடும்பங்களுடன் ஏராளமான அளவில் அங்கு திரண்டுவருகின்றனர். அங்கு வழக்கமான பூஜைகளும் பஜனைகளும் நடக்க ஆரம்பித்துள்ளன. இன்று முழுவதும் டி.என்.சேஷனும்மடத்திலேயே இருந்தார்.
சங்கராச்சாரியாரிடம் இருந்து மடத்தின் பொறுப்புக்களை விஜயேந்திரர் ஏற்றுக் கொள்ள வேண்டும் என மடத்தின் மீது மிகுந்தமரியாதை கொண்ட பலரும் கூறியுள்ளனர். இதற்கு சங்கராச்சாரியாரின் கோஷ்டி எதிர்ப்பு தெரிவித்தாலும் விரைவில் மடத்தின்பொறுப்புக்களை விஜயேந்திரரே ஏற்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications