மகாராஷ்டிரா, ம.பியில் நிலநடுக்கம்
டெல்லி:
மராட்டிய மாநிலத்தில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதே போல நாகலாந்து மற்றும் மத்திய பிரதேசத்தில் நேற்று இரவுநிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.
கடந்த டிசம்பர் மாதம் கோரத் தாண்டவமாடிய சுனாமிக்குப் பிறகு பல பகுதிகளில் திடீர், திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுவருகிறது. சமீபத்தில் தமிழ்நாட்டில் சேலம், தர்மபுரி உட்பட சில மாவட்டங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது தவிர கர்நாடகம், ஒரிசா, மராட்டியம் உட்பட பல மாநிலங்களிலும் அடிக்கடி ஏற்படும் நிலநடுக்கம் பீதியை ஏற்படுத்திவருகிறது.
இந்நிலையில் மராட்டிய மாநிலத்தில் இன்று காலை மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இங்குள்ள சாத்ரா மாவட்டத்தில் காலை6.27 மணியளவில் தாக்கிய இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவாகியிருந்தது.
இதனால் கட்டிடங்கள் மற்றும் வீடுகள் அதிர்ந்தபோதும் உயிர்ச் சேதம் ஏற்பட்டதாக தகவல் இல்லை.
இதே போல நாகலாந்து மற்றும் மத்திய பிரதேசத்தில் நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. நாகலாந்து மாநிலத்தில் இந்திய-மியான்மர் எல்லைப் பகுதியில் நேற்று இரவு 7 மணியளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.
ரிக்டர் அளவு கோலில் இது 5.2 ஆக பதிவாகியிருந்தது. நாகலாந்தை தாக்கிய சிறிது நேரத்தில் மத்திய பிரதேசத்திலும் நிலநடுக்கம்ஏற்பட்டது. இங்குள்ள ஹோ சங்காபாத் மற்றும் பீத்தல் ஆகிய மாவட்டங்களில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.
அடுத்தடுத்து ஏற்படும் இந்த நிலநடுக்கத்தால் இப்பகுதியைச் சேர்ந்த மக்கள் பீதியில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications