உண்மையிலேயே ‘சோ’ சாணக்கியர் தான்.. ஒருநாள் அதிமுக - திமுக சேரும்! 30 ஆண்டுகளுக்கு முன் சொன்ன வார்த்தை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சேராமல் இருப்பது கிழக்கும் மேற்கும் என்பார்கள். அப்படி தமிழக அரசியலில் எதிர் துருவங்களாக இருந்த திமுகவும் அதிமுகவும் கூட்டணி அமைக்க தயாராக இருந்தன என்ற தகவல் தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பியது. நடக்கவே நடக்காது என எதிர்பார்த்த ஒன்று நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் தென்பட்டது. இந்த நிலையில் திமுகவும் அதிமுகவும் ஒரு காலத்தில் கூட்டணி அமைக்கும் என துக்ளக் ஆசிரியரும் அரசியல் நிபுணருமான சோ ராமசாமி கூறியது தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.

2026 தேர்தலை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்து விட மாட்டார்கள். 60 ஆண்டுகளுக்கும் மேலாக திராவிட கட்சிகளின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வந்த தேர்தல் 2026 தமிழக சட்டசபை தேர்தல். திமுக ஆளும் கட்சி என்றால் அதிமுக எதிர்க்கட்சி அதிமுக ஆளும்கட்சி என்றால் திமுக எதிர்க்கட்சி என்ற தான் இருந்தது.

Cho Ramaswamy

இந்த நிலையை மாற்றி இரண்டு கட்சிகளையும் எதிர்க்கட்சி வரிசையில் உட்கார வைத்தது. தமிழக வெற்றிக் கழகம். 2024 ஆம் ஆண்டு தான் தமிழக வெற்றிக்கழகம் தொடங்கப்பட்டாலும், இரண்டு ஆண்டுகளிலேயே ஆட்சியைப் பிடித்திருக்கிறது.

இது தமிழக அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய மாற்றம் என்றால் அது மிகையல்ல.. சொல்லப்போனால் திமுகவின் ஆதிக்கத்தை முடித்து எம்ஜிஆர் ஆட்சியை பிடித்ததை விட விஜய் செய்தது பெரிய விஷயம் தான். காரணம், கூட்டணி அரசியல் அனுபவம் இல்லாமல் முதல் தேர்தலில் இந்த மகத்தான சாதனையை விஜய் செய்திருக்கிறார். 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தமிழக வெற்றி கழகம் தனிப்பெரும் கட்சியாக இருந்தது. அதே நேரத்தில் தனிப் பெரும்பான்மை பெறவில்லை.

இதை அடுத்து காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தந்த நிலையில் முதல்வராக பதவி ஏற்றர். ஆனால் வெற்றி பெற்றதும் விஜய் எளிதாக முதலமைச்சராக பதவி ஏற்கவில்லை. நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு இது சாத்தியமானது. தேர்தல் முடிவுகள் வெளியான உடனே முதல் கட்சியாக காங்கிரஸ் விஜய்க்கு ஆதரவு தந்தது. பின்னர் தான் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் ஆதரவு தந்தன.

இடையில் திருமாவை முதல்வராக அதிமுகவும் திமுகவும் திட்டம் போட்டதாகவும், திமுக ஆதரவுடன் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்க திட்டமிட்டதாக சொல்லப்பட்டது. இதில், அரசியல் அரங்கை பரபரப்பாகியது, 50 ஆண்டுகளுக்கு மேலாக பரம எதிரிகளாக இருந்த திமுகவும் அதிமுகவும் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியை தடுக்க கூட்டணி அமைக்க முயன்றதாக சொல்லப்பட்டது தான்.

தேர்தல் பிரச்சாரத்தின் போது அதிமுகவை அடிமை கட்சி என்றும், திமுகவை தீய சக்தி என்றும் முழங்கிய ஸ்டாலினும் எடப்பாடி பழனிசாமியும் தேர்தலுக்குப் பிறகு ஒன்றிணைந்தார்கள் என்ற தகவலே தமிழக அரசியலை உச்சபட்ச கொதி நிலைக்கு கொண்டு சென்றது. முதலில் இவை எல்லாம் வதந்தி தான் என கூறினாலும், எடப்பாடி பழனிச்சாமி மீது அதிருப்தி அடைந்த அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் அதிமுக திமுக இடையே கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடந்தது என பேசியது பரபரப்பை கிளப்பியது.

அதற்குப் பிறகு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், கம்யூனிஸ்டு கட்சியினர் என அடுத்தடுத்து அப்படி நடந்தது உண்மைதான் என பேசியது அதிமுக திமுக தொண்டர்களையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால் இது குறித்து திமுக தரப்போ அதிமுக தலைமையோ வாய் திறக்கவில்லை.

பல ஆண்டுகளாக எதிர் எதிர் துருவங்களாக இருந்த திமுகவும் அதிமுகவும் ஒரே அணியில் இணைய முடிவது எப்படி சாத்தியம் என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியிலும் எழுந்தது. ஆனால் இது போன்ற ஒரு சூழல் உருவாகும் என துக்ளக் ஆசிரியரும் அரசியல் நிபுணரும் நடிகர் 'சோ' ராமசாமி 30 ஆண்டுகளுக்கு முன்பே கூறிய நிலையில் தற்போது அது மீண்டும் பேசுபொருளாக மாறி இருக்கிறது.

அரசியல் விமர்சனத்தோடு துக்ளக் வார இதழை நடத்தி வந்திருந்தார் சோ ராமசாமி. தற்போது வரை அது வெளிவந்து கொண்டு இருக்கிறது. குறிப்பாக துக்ளக் வார இதழில் வாசகர்களின் கேள்விகளுக்கு சோ பதில் அளிப்பது வழக்கம். நக்கலும் நையாண்டியும் அதில் கலந்து இருக்கும் அப்படித்தான். 1990 கலீல் வெளியான துக்ளக் வார இதழின் வாசகர்களின் கேள்விகளுக்கு சோ பதில் எழுதிக் கொண்டிருந்தார். அப்போது திமுகவும் அதிமுகவும் எதிர்காலத்தில் கூட்டணி அமைப்பார்களா என்று ஒரு வாசகர் கேள்வி எழுப்பி இருந்தார்.

அதற்கு மிகவும் சுருக்கமாகவும் அதே நேரத்தில் தெளிவாகவும் பதில் அளித்து இருந்தார் சோ. "எதிர்காலத்தில் இருந்து இந்த இரண்டு கட்சிகளும் தனித்தனியாக வெற்றி பெற முடியாத சூழ்நிலை உருவாகும் ..அப்போது அவர்கள் கூட்டணி அமைப்பார்கள்" என பதில் அளித்து இருந்தார். அப்போதைக்கு அந்த பதிலை பார்த்த பலரும் இதெல்லாம் நடக்கிற காரியமா? என சாதாரணமாகவே கடந்து சென்றனர்.

ஏனென்றால் தற்போது திமுகவும் அதிமுகவும் மோதலின் உச்சகட்டத்தில் இருந்த காலம் அது. ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்துக் கொண்டிருந்த நிலையில் இந்த இரு கட்சிகளும் இனிமேல் சேரவே சேராது என்று தான் பலரும் கூறிக் கொண்டிருந்தனர். அதனால் சோவின் கருத்தை அவர்கள் பொருட்படுத்தவில்லை. ஆனால் காலம் மாறியது. கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக வெற்றிக் கழகம் தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கியது.

திமுகவும் அதிமுகவும் தனி பெரும்பான்மை பெறாத நிலையில் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைக்க திட்டமிட்டதாக வெளியான தகவல் 'சோ' கூறிய கணிப்பை மீண்டும் மெய்ப்பித்திருக்கிறது. திமுக அதிமுக அதிகாரப்பூர்வமாக கூட்டணி அமைக்கவில்லை என்றாலும் அதற்கான வாய்ப்பு ஏற்படும் என சோ கணித்ததை வைத்து அரசியல் நிகழ்வுகளை முன்கூட்டியே கணித்த நிச்சயம் ஒரு அரசியல் சாணக்கியர் தான் என அவரது ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+