படு அமைதியான தேர்தல்: ஹேட்ஸ் ஆப் டூ ராவ் !
சென்னை:
சட்டசபை இடைத் தேர்தல் ஒரு வன்முறைச் சம்பவமோ, முறைகேடுகளோ இல்லாமல் படு அமைதியாக நடந்து முடிந்துள்ளது.இதற்கு முக்கியக் காரணம் சிறப்பு தேர்தல் பார்வையாளர் கே.ஜே.ராவும், வரலாறு காணாத வகையில் செய்யப்பட்டிருந்தபாதுகாப்பு ஏற்பாடுகளும் தான்.
தமிழகம் முழுவதும் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி இடைத் தேர்தல் யாருமே எதிர்பாராதவகையில் படு அமைதியாக நடந்து முடிந்துள்ளது. ராவ் என்ற தனி நபரும், பாதுகாப்பு ஏற்பாடுகளுமே இதற்கு முக்கியக்காரணம்.
இந் நிலையில் தான் வந்தார் கே.ஜே.ராவ். சட்டத்திற்கு சற்றும் கட்டுப்படாத பீகாரிலேயே அரசியல்வாதிகள் கண்ணில் விரலைவிட்டு ஆட்டியவர் கே.ஜே.ராவ். சட்டத்தைத் தவிர வேறு யாருக்கும், எதற்கும் பயப்படாத ராவ், வந்த பின் தான் தேர்தல் களம்சூடுபிடித்தது. அரசியல் கட்சிகளின் பிரசாரத்தை விட, ராவ் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளும், திடீர் சோதனைகளும்தான்மக்களை அதிகம் கவர்ந்தன.
தொகுதிகளுக்கு வந்த நாள் முதல் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று விதிமீறலை கண்டுபிடித்து, யார் என்ற பாரபட்சமும் பாராமல்அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டார் ராவ். கொடிகள்,பேனர்கள், கட் அவுட்டுகள், வரவேற்பு வளைவுகள் எல்லாம் தூக்கிஎறியப்பட்டன. அனுமதி பாஸ் இல்லாமல் தொகுதிக்குள் நுழைந்த கார்கள் பறிமுதல் ஆயின.
பறிதல் செய்யச் சொன்னதோடு நிற்காமல், உண்மையிலேயே அவை பறிமுதல் செய்யப்பட்டனவா என்பதை ரீ செக் செய்துஅதிகாரிகள் வயிற்றில் புளியைக் கரைத்தார் ராவ்.
ராவின் கிடுக்கிப் பிடி காரணமாக திமுக, அதிமுக போன்ற முக்கியக் கட்சிகள் போட்டிருந்த பல "முக்கிய திட்டங்கள்" தவிடுபொடியாகின. அதிமுக, திமுக என்ற பாரபட்சம் பாராமல் அனைவரையும் போட்டு விரட்டு விரட்டென்று விரட்டிய ராவினால்,தேர்தல் களத்தில் பிரமாண்டம் இல்லாமல் போயிற்று.
ராவ் கேட்ட கேள்விகளுக்குப் பதில் அளிக்க முடியாமல் அதிகாரிகளும், காவல்துறை அதிகாரிகளும் விழி பிதுங்கியதை பலநேரங்களில் பார்க்க முடிந்தது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பல்லாயிரக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள், கொத்து கொத்தாக நீக்கப்பட்டிருந்தன.இதை அதிகாரிகளிடம் எடுத்துக் கூறி பொதுமக்கள் முறையிட்டபோதும் அவர்களது குமுறல் கேட்கப்படாமல் போனது.
ஆனால் இடைத் தேர்தலில் அது நடைபெறவில்லை. ஓட்டுப் போட போன அத்தனை பேரும் தங்களது ஓட்டைப் பதிவு செய்துவிட்டே வந்தனர். ஒரு வாக்குச் சாவடியில் கூட முறைகேடு நடந்ததாக, புகார் ஏதும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ராவ் மற்றும் அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கைகளே இதற்குக் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல, இதுவரைஇல்லாத வரலாறு காணாத அளவுக்கு மிக பலத்த பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
உள்ளூர் போலீஸார் தவிர துணை ராணுவப் படையினரும் தொகுதிகள் முழுவதும் குவிக்கப்பட்டு, சமூக விரோதிகள், கள்ளஓட்டுப் போட வந்தவர்களுக்கு ஆப்பு வைக்கப்பட்டது.
தமிழகத்தில் ஒருபோதும் இதுபோல அமைதியான முறையில் சட்டசபைத் தேர்தல் நடந்திருக்காது என்று கூறும் அளவுக்கு மிக மிகஅமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது இடைத் தேர்தல். இதே பாணியிலான அணுகுமுறை, எதிர்காலத்தில் நடைபெறும்தேர்தல்களிலும் தொடர்ந்தால், முறைகேடுகள் மூலம் குளிர்காய நினைக்கும் அரசியல்வாதிகள் அடிபட்டுப் போவார்கள் என்பதில்சந்தேகமில்லை. அதிகாரிகள் மனம் வைப்பார்களா?












Click it and Unblock the Notifications