பழனி மலையடிவாரத்தில் ரூ 100 கோடி முறைகேடு! எல்லாத்தையும் முருகன் பார்த்துப்பார்! அனிதா ராதாகிருஷ்ணன்
தூத்துக்குடி: பழனி மலையடிவாரத்தில் ரூ 100 கோடி மதிப்பிலான இடம் முறைகேடு குறித்து நான் தலையிட விரும்பவில்லை என்றும் எல்லாவற்றையும் முருகன் பார்த்துக் கொள்வார் என்றும் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் பகுதியில் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் தமிழக முதல்வர் விஜய் குறித்து முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவதூறு கருத்தை பதிவிட்டார்.

இந்த நிலையில் அவர் அது தொடர்பாக எழுந்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
இந்த நிலையில் அவர் பத்து நாள் தினமும் ஆத்தூர் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி பத்தாவது நாளான இன்று அவர் ஆத்தூர் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார். இதையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பழனி முருகன் கோவில் இடம் 100 கோடி ரூபாய் முறைகேடு புகார் குறித்த கேள்விக்கு "நான் கோவில் விவகாரங்களில் தலையிட விரும்பவில்லை. "முருகன் பார்த்துக் கொள்வார்" எனவும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும் இது குறித்து அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பு வழக்கறிஞர் பாரிக்கண்ணன் கூறுகையில், முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது சுமத்தப்பட்ட புகார் தொடர்பாக காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்ட நிலையில் நீதிமன்றம் அவரை சொந்த ஜாமீனில் விடுவித்தது.
இந்த நிலையில் 10 நாள் காவல் நிலையத்தில் கையெழுத்திட நிபந்தனை விதித்த நிலையில் இன்று பத்தாவது நாளாக அவர் கையெழுத்திட்டார். மேலும் இது தொடர்பான குற்றப்பத்திரிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் தொடர்ந்து இது குறித்த விசாரணை தூத்துக்குடி ஜேஎம் 1 நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
ரூ 100 கோடி முறைகேடு குறித்து திமுக ஐடி விங் தனது ட்விட்டரில் கூறியிருப்பதாவது: பழநி ஆண்டவருக்கே மொட்டை போடும் தவெக ரியல் எஸ்டேட் அரசு!
பழநி ஆண்டவன் பூங்கா சாலையில், கடந்த கால சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு திமுக ஆட்சியில் 2025-ம் ஆண்டு மீட்கப்பட்டு, பக்தர்களின் வாகன நிறுத்தமாக மாற்றப்பட்ட ரூ.100 கோடி மதிப்பிலான 1.40 ஏக்கர் கோயில் நிலத்தை, வெறும் ரூ.2 கோடிக்குத் தாரை வார்த்திருக்கிறது தவெக அரசு!
கடந்த ஜூலை 6-ம் தேதி, பழநி இணை சார்பதிவாளர் பணி மாறுதலான அந்த ஒருநாள் இடைவெளியைத் தந்திரமாகப் பயன்படுத்தி, நீதிமன்ற உத்தரவுகளையும் மீறி இந்த இமாலய முறைகேடு அரங்கேற்றப்பட்டுள்ளது; இது தவெக அரசின் நிர்வாகச் சீர்கேட்டை அப்பட்டமாகக் காட்டுகிறது.
நிலப் பதிவு முடிந்த அடுத்த நொடியே, அந்த அதிகாரிக்குப் பதவி உயர்வு வழங்கி வெகுமதி அளிக்கப்பட்டிருப்பது, இது அரசின் நேரடித் துணையோடு திட்டமிட்டு நடத்தப்பட்ட 'கொள்ளை' என்பதை உறுதிப்படுத்துகிறது.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் அவர்களே! கேமரா முன்னால் கோயில் ஆய்வுகளை ரீல்ஸாகப் படம்பிடித்து நாடகமாடும் நீங்கள், திரைக்குப் பின்னால் நிலத் தரகராகச் செயல்பட உங்களுக்கு வெட்கமாக இல்லையா?
முந்தைய ஆட்சியில் சுமார் ரூ.1,316 கோடி மதிப்பிலான கோயில் சொத்துகள் மீட்கப்பட்ட நிலையில், இன்று நீங்கள் ஒரு ரியல் எஸ்டேட் ஏஜென்ட் போலக் கோயில் நிலங்களைத் தனிநபர்களுக்குத் தாரை வார்த்துக் கொடுப்பது எந்த வகையில் நியாயம்?
பொறுப்பேற்ற இரண்டே மாதத்தில் பழநி ஆண்டவருக்கே மொட்டை போடும் உங்கள் இந்த அட்ராசிட்டியை ஆன்மீக பக்தர்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அமைச்சர் ரமேஷுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில்தான் அவர் அதை மறுத்துள்ளார். அவர் கூறுகையில், எனது உறவினர் பெயரில் பழனி அடிவாரத்தில் ரூ 100 கோடி மதிப்பிலான சொத்து சட்டவிரோதமாக பதிவு செய்யப்பட்டதாக சமூகவலைதளத்தில் எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் பொய்யானவை என தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
