விஜய்காந்துக்கு மாஜி அதிமுக அமைச்சர் தூது!
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் வெள்ளக்கோவில் முன்னாள் எம்.எல்.ஏவும், முன்னாள் அதிமுக அமைச்சருமான துரை ராமசாமி, விஜயகாந்த்தின் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தில் சேர தூது விட்டுள்ளார்.
வெள்ளக்கோவில் தொகுதியில் தனிப்பட்ட முறையில் செல்வாக்கு படைத்தவர் துரை ராமசாமி. முன்பு காங்கிரஸில் இருந்த அவர் பின்னர் அதிமுகவில் இணைந்தார். அதன் பின்னர் அங்கிருந்து விலகி மீண்டும் காங்கிரஸில் ஐக்கியமானார்.வெள்ளக்கோவில் தொகுதியில் இதுவரை நடந்துள்ள 10 தேர்தல்களில் ஐந்து முறை வெற்றி பெற்ற பெருமைக்குரியவர் துரை ராமசாமி. கடந்த 1977ம் ஆண்டு முதல் 1991ம் ஆண்டு வரை தொடர்ந்து இத்தொகுதியின் எம்.எல்.ஏவாக இருந்து சாதனை படைத்தவர். கடந்த ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சராகவும் இருந்தவர்.
இப்போது வெள்ளக்கோவில் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் திமுகவைச் சேர்ந்த சாமிநாதன். கடந்த இரண்டு தேர்தல்களில் இத்தொகுதியில் திமுகதான் வெற்றி பெற்றது. எனவே இம்முறையும் திமுகவே இங்கு போட்டியிடும் எனத் தெரிகிறது.
இதை அறிந்த துரை ராமசாமி, தனக்காக இத்தொகுதியை திமுகவிடம் கோரிப் பெறும்படி ஜி.கே.வாசன் மூலம் யன்றார். ஆனால் அவரது முயற்சிக்குப் பலன் கிடைக்கவில்லை. திமுகவிடம் காங்கிரஸ் கட்சி கொடுக்கவுள்ள தொகுதிப் பட்டியலில் வெள்ளக்கோவில் இடம்பெறப் போவதில்லை எனத் தெரிகிறது.
இதனால்கோபமடைந்துள்ள துரை ராமசாமி, தனக்கு சீட் கொடுக்கப்படாவிட்டால் ஏதாவது ஒரு கட்சியில் சேர்ந்து போட்டியிட முடிவு செய்துள்ளார்.
மீண்டும் அதிமுகவில் சேர முயற்சித்துப் பார்த்தார். ஆனால் ஜெயலலிதாவின் வெறுப்பு லிஸ்ட்டில் முக்கிய இடத்தில் இருப்பதால் இவருக்கு மீண்டும் சேர வாய்ப்பில்லாமல் போய் விட்டது.
இதனால் தற்போது விஜயகாந்த்தின் கட்சியில் சேர துரை ராமசாமி முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. துரை ராமசாமிக்கு வெள்ளக்கோவிலில் தனி செல்வாக்கு உண்டு.
கடந்த 2001ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் வெள்ளக்கோவிலில் துரை ராமசாமிக்கு அதிமுக சீட் கொடுக்கவில்லை.
ஆனாலும் சுயேச்சையாகப் போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் வி.பி.பெரியசாமி வெறும் 740 வாக்குகளில் தான் திமுக வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார்.
சுயேச்சையாகப் போட்டியிட்ட துரை ராமசாமி, 32,056 வாக்குகளைப் பெற்றார். இதனால் அதிமுக வேட்பாளரின் தோல்விக்கு முழு முதல் காரணமாக இருந்தார் துரை ராமசாமி.
இதனால் அவர் ஜெயலலிதாவின் முழு வெறுப்பையும் சம்பாதித்துக் கொண்டார்.
எந்த அரசியல் கட்சியின் சார்பாக துரை ராமசாமி போட்டியிட்டாலும் வெற்றி நிச்சயம் என்கிறது வெள்ளக்கோவிலின் கடந்த கால வரலாறு.
இந் நிலையில், தனக்கு காங்கிரஸ் கட்சியில் சீட் கிடைக்காது என்பதைத் தெரிந்து கொண்ட துரை ராமசாமி மீண்டும் கட்சி மாறத் தயாராகி விட்டார்.
இப்போது விஜயகாந்த்தின் கட்சியில் சேர முடிவு செய்து அவருக்கு தூது அனுப்பியுள்ளார் என்கிறது அவரது வட்டாரம்.












Click it and Unblock the Notifications