புலிகளுக்கு ஆதரவு: திமுக மீது சு.சுவாமி புகார்
திருநெல்வேலி:திமுக ஆட்சி, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான ஆட்சியாக உள்ளதாக ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியன் சுவாமி குற்றம் சாட்டியுள்ளார்.
நெல்லையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இருப்பவர்களைக் கைது செய்வோம் என முதல்வர்கருணாநிதி கூறுகிறார். ஆனால் இதுவரை அப்படி யாரையும் கைது செய்யவவில்லை.
ராஜீவ் காந்தி கொலைக்குக் காரணமான விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை கைது செய்ய வேண்டும் என்றோ, அவருக்குத்தண்டனை அளிக்க வேண்டும் என்றோ கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கோராமல் உள்ளது. இது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.
திமுக ஆட்சி விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான ஆட்சியாக உள்ளதையே இது எடுத்துக் காட்டுகிறது.
ப.சிதம்பரம் தாக்கல் செய்துள்ள பட்ஜெட் படு மோசமான பட்ஜெட். இதனால் விலைவாசி கடுமையாக உயரும். மக்களுக்குப் பாதிப்பு ஏற்படும்.நாட்டையும், பொருளாதார அமைப்புகளையும் பாதுகாக்க வேண்டுமானால், உடனடியாக ப.சிதம்பரத்தை பதவியிலிருந்து டிஸ்மிஸ் செய்யவேண்டும்.
கல்வி நிதிக்கான துணை வரி மூலம் கடந்த ஆண்டு மத்திய அரசுக்கு ரூ. 20 ஆயிரம் கோடி நிதி வசூலாகியுள்ளது. ஆனால் இதில் கல்விக்காகவெறும் 2000 கோடியை மட்டுமே செலவு செய்துள்ளனர். மீதப் பணத்தை மற்ற செலவுகளுக்காக பயன்படுத்தியுள்ளனர்.
சேது சமுத்திரத் திட்டத்தின் காரணமாக ராமர் பாலம் எனப்படும் ஆதம் பாலத்தை இடிக்கும் முயற்சி நடக்கிறது. இதன் மூலம் நமது பண்பாடுமற்றும் வரலாற்று அடையாளத்தை அழிக்க நினைக்கிறார்கள். ராமர் பாலத்தை இடிக்காமல், சேதுக் கால்வாய் திட்டத்தை மாற்றி அமைக்கவேண்டும். இதுதொடர்பாக பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளேன் என்றார் சுவாமி.












Click it and Unblock the Notifications