சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது வங்கதேசம்
போர்ட் ஆப் ஸ்பெயின்:பெர்முடா அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்கதேசம் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது.
உலகக் கோப்பைப் போட்டியின் லீக் போட்டிகள் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. கடைசிப் போட்டியில் இந்தியர்கள் அதிகம் எதிர்பார்த்த பெர்முடா, வங்கதேச அணிகள் மோதின. இதில் பெர்முடா வெற்றி பெற்றால் இந்தியா சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் கடைசி வாய்ப்பு தொக்கி நின்றிருந்தது.
இதனால் குட்டி அணியான ெபர்முடா வெல்லுமா என்ற நப்பாசையில் இந்திய ரசிகர்கள் இருந்தனர். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இப்போட்டி நேற்று நடந்தது.
மழை காரணமாக போட்டி நான்கு முறை தடைபட்டது. ஆட்டம் தொடங்கவே இரண்டரை மணி நேரம் தாமதம் ஆனது. இதனால் 35 ஓவர்களைக் கொண்டதாக போட்டி சுருக்கப்பட்டது.
டாஸ் வென்ற வங்கதேச அணி, பெர்முடாவை பேட் செய்யப் பணித்தது. வங்கதேச பந்துவீச்சாளர்களின் அணல் பறக்கும் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் பெர்முடா வீரர்கள் தடுமாறினர். அவர்கள் தடுமாறியதைப் பார்த்து மைதானத்தில் கூடியிருந்த கணிசமான இந்திய ரசிகர்கள் பதறினர்.
ஒருபக்கம் பெர்முடா வீரர்கள் ஆட்டமிழந்த நிலையில், 21 ஓவர்களில் பெர்முடாவின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. கடுமையாகப் போராடி 95 ரன்களை மட்டுமே எடுத்தது பெர்முடா.
பின்னர் ஆடத் தொடங்கிய வங்கதேசம் படு சிறப்பாக ஆடி, பெர்முடா பந்துவீச்சை நொறுக்கி, 17.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 96 ரன்களை எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி ெபற்றது.
இந்த வெற்றியின் மூலம் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது வங்கதேசம். மூன்றாவது முறையாக உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்றுள்ள வங்கதேச அணி, முதல் முறையாக 2வது சுற்றுக்கு இப்போதுதான் முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
வங்கதேச அணியின் இந்த சாதனை முன்னேற்றம் அந்த நாட்டு கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தையும், கொண்டாட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேசத்தின் இந்த வெற்றியால் இந்தியாவின் சூப்பர் 8 நப்பாசை தகர்ந்தது. மூட்டை முடிச்சோடு நாடு திரும்புகிறது இந்தியா.












Click it and Unblock the Notifications