கூட்டு ரோந்து கூடவே கூடாது: கருணாநிதி வலியுறுத்தல்
சென்னை:தமிழக மீனவர்களை பாதுகாக்க இலங்கை தெரிவித்துள்ள கூட்டு ரோந்து யோசனையை ஏற்கக் கூடாது என பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் கருணாநிதி மீண்டும் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையின் கூட்டு ரோந்து யோசனையை நிராகரிக்க கோரி மார்ச் 30ம் தேதி முதல்வர் கருணாநிதி பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில் மத்திய வெளியுறவு செயலாளர் சிவசங்கர மேனன் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், பாக் ஜலசந்திப் பகுதியில், இந்திய, இலங்கை கடற்படையினர் கூட்டு ரோந்து மேற்கொள்வது குறித்து தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வருவதாக தெரிவித்திருந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் கருணாநிதி பிரதமருக்கு மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த கூட்டு ரோந்து பிரச்சனையை தீர்க்காது, நிலைமையை மேலும் சிக்கலாகிவிடும். எனவே இந்த கூட்டு ரோந்து வேண்டாம்.
அதற்குப் பதில், கூடுதல் ஆட்களுடன் நவீன படகுகள் மற்றும் விமானங்களுடன் தீவிர கடல் மற்றும் வான்ழி ரோந்து பணியை அதிகரித்தல், கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரை ரோந்து பணியை ஒரே தலைமையில் அமைத்தல் போன்ற நடவடிக்கைகளை எடுக்கலாம்.
மேலும் மன்னார் வளைகுடா, இந்திய பெருங்கடல் பகுதிகளில் ஹெலிகாப்டருடன் கூடிய கடல் ரோந்து கப்பல் ஒன்றை நிறுத்த வேண்டும். தூத்துக்குடி விமான நிலையத்தில் எரிபொருளை நிரப்பிக் கொள்ள அனுமதிக்க வேண்டும்.
கன்னியாகுமரியில் நவீன சாதனங்களுடன் கூடிய ரோந்து மற்றும் விரைவு படகுகளுடன் கூடிய காவல்நிலையத்தை ஏற்படுத்த வேண்டும். தமிழக கடற்கரை முழுவதும் கடலோர காவல்படையின் தலைமையின் கொண்டு வருவது அவசியமாகும்.
கடலோர காவல்படையை வலுப்படுத்துதல் மற்றும் இலங்கை கடற்படை தாக்குதலை தவிர்க்குமாறு வலியுறுத்தல் மட்டுமே இப்பிரச்சனையை தீர்க்க ஒரே வழி. இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications
