இட ஒதுக்கீட்டுக்கு கலாம் ஆதரவு
டெல்லி:நாட்டின் வளர்ச்சிக்காக என்ன பொறுப்பு கொடுத்தாலும் செய்யக் காத்திருக்கிறேன் என்று குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூறியுள்ளார்.
பிரான்ஸ், கிரீஸ் நாட்டில் நான்கு நாள் பயணமாக நேற்று பிரான்ஸ் புறப்பட்டுச் சென்றார் கலாம்.
விமானத்தில் அவர் செய்தியாளர்களுக்கு சிறப்புப் பேட்டி அளித்தார். அப்போது 2வது முறையாக குடியரசுத் தலைவர் பதவி வழங்கப்பட்டால் ஏற்றுக் கொள்வீர்களா என்று நிருபர்கள் கேட்டனர்.
அதற்குப் பதில் அளித்த கலாம், யார் அடுத்த குடியரசுத் தலைவர் என்பதை விட நாடே முக்கியமானது, பிரதானமானது. இந்த நாட்டின் வளர்ச்சிக்காக என்ன பொறுப்பு கிடைத்தாலும் நான் செய்யக் காத்திருக்கிறேன் என்றார் கலாம். இதன் மூலம் மீண்டும் குடியரசுத் தலைவர் பதவி கிடைத்தால் அதை ஏற்கத் தயாராக இருப்பதையே கலாம் உணர்த்தியுள்ளாக கருதப்படுகிறது.
நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் அப்சல் குருவின் கருணை மனு மீதான நடவடிக்கை குறித்து கேட்டபோது, அதுகுறித்து சட்ட நிபுணர்களின் ஆலோசனையைக் கோரியுள்ளேன். அது வந்ததும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் கலாம்.
பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு பிரச்சினை குறித்து கேட்டபோது, அனைத்துத் தரப்பு மாணவர்களையும் பாதிக்காத வகையில் இட ஒதுக்கீடு வழங்கலாம். மாணவர் இடங்ளை அதிகரிப்பதன் மூலம் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும்.
மருத்துவக் கல்லூரிகளிலும், பொறியியல் கல்லூரிகளிலும் அதிக அளவில் மாணவர் இடங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றார் கலாம்.












Click it and Unblock the Notifications