கெடுத்த கெளடா- ஒருமைப்பாட்டுக்காகஅமைதி காக்கிறேன்: கருணாநிதி
சென்னை:நதி நீர் இணைப்பு தொடர்பாக பிரதமருடன் பேச்சு நடத்த விரைவில் டெல்லி செல்லவுள்ளதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் நேற்று முதல்வர் கருணாநிதி பல்வேறு உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்துப் பேசுகையில்,
மூக்கு இருக்கும் வரையில் சளியும் இருக்கும் என்று கூறுவதைப் போல, தமிழகத்தைச் சுற்றியுள்ள மாநிலங்கள் உயரே இருக்கும் காரணத்தால், தாழ்வான பகுதியில் இருக்கும் நம்மை எந்த வகையிலும் கொடுமைப்படுத்தலாம் என்ற வகையில் கொடுமைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
எத்தனை முறைதான் பேச்சு என்று நமக்கே அலுத்து விட்டது. 1968ம் ஆண்டு பேசத் தொடங்கி இதுவரை பேசிக் கொண்டிருக்கிறோம். இப்போது வந்துள்ள இறுதியான தீர்ப்பு கூட இறுதியான தீர்ப்புதானா என்ற கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் இருக்கிறோம்.
இந்தியாவின் ஒருமைப்பாட்டில் தமிழகத்தைச் சுற்றிலும் உள்ள 3 மாநிலங்களுக்கும் நம்பிக்கை இருக்க வேண்டும். ஒருமைப்பாட்டில் நாம் வைத்துள்ள நம்பிக்கை வெற்றி பெற்ற மற்ற மாநிலங்களும் ஒத்துழைக்க வேண்டும்.
அதனால்தான் முதல்வர்கள் மாநாட்டில் நான் பேசுகையில், நதிகளை இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன்.
பொன்விழா நிகழ்ச்சியின்போது கூட பிரமதருக்கும், சோனியா காந்திக்கும் நேரடியாகவே கோரிக்கை விடுத்தேன். நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு விடைபெறுவதற்கு முன்பு கூட பிரதமரிடம் இதுகுறித்துப் பேசினேன்.
அதற்கு பேசலாம், விரிவாகப் பேசலாம் என்றார். எனவே இதற்காக விரைவில் டெல்லி செல்லப் போகிறேன். இந்த மாதத்திலே நிச்சயமாக டெல்லி செல்லவுள்ளேன். அப்போது இதுகுறித்து வலியுறுத்திப் பேசுவேன்.
ஆங்காங்கு இருக்கும் நதிகளை இணைத்தாலே போதும் நம் தாகம் நீங்கும். நமது தண்ணீத் தேவை தீரும் என்பது மிக உண்மையான செய்தி. அதற்காகத்தான் நாம் பாடுபட வேண்டும்.
தேவ கெளடா பிதரமராக இருந்தபோதே இது தீர்வு காணப்பட்டிருக்கப்பட வேண்டிய விஷயம். அப்போது, நான், துரைமுருகன், ஆற்காடு வீராசாமி ஆகியோர் டெல்லி சென்றிருந்தோம். தேவெ கெளடாவும் டெல்லியில்தான் இருந்தார். கர்நாடக முதல்வர் பாட்டீலும் வந்திருந்தார்.
அப்போது கர்நாடக பவனுக்குச் சென்று நாங்கள் பேசினோம். பேச்சுவார்த்தை முறிந்து விட்டால் பேசாமல் திரும்பி விடுவது என்ற எண்ணத்துடன்தான் சென்றோம். ஆனால் எதிர்பார்த்ததற்கு மேலாக பேச்சுவார்த்தை நல்லகோணத்தில் சென்று கையெழுத்திடும் நிலையை எட்டி விட்டது.
அப்போது பிரதமர் அழைக்கிறார் என்று செய்தி வந்தது. எங்களுக்கு திடுக் என்றாகி விட்டது. நாங்கள் நினைத்தது போலேவ, புதிய திட்டம் ஒன்றைச் சொன்னார் கெளடா.
இதனால் கையெழுத்துப் போடுவது தள்ளிப் போனது. இன்று வரை எந்த உடன்பாடும் ஏற்படவில்லை.
இதே நிலையில்தான் முல்லைப் பெரியாறும், பாலாறு பிரச்சினையும் இருக்கின்றன. இவையெல்லாம் பார்க்கும்போது பேச்சுவார்த்தையை நடத்துவதில் எந்தப் பலனும் இருப்பது போலத் தெரியவில்லை.
இந்திய ஒருமைப்பாட்டுக்கு கேடு வரக் கூடாது என்று கருதும் நாம், அதைச் செய்ய துணியவில்லை. ஆனால் அதைத் தவிர வேறு வழியில்லை என்றால், இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கிடையே போர் எழக் கூடிய சூழ்நிலை வரக் கூடாது என்று கருதுகிறேன்.
இதை உணர்ந்து கொண்டு, ஆந்திராவானாலும், கேரளாவானாலும், கர்நாடகமானாலும் அவர்கள் இந்தியாவின் ஒருமைப்பாடு, ஒற்றுமைக்காக தியாகம் செய்ய முன்வர வேண்டும்.
அதை விடுத்து நாங்கள் மேலே இருப்பவர்கள், கீழே இருப்பவர்களுக்குத் தர முடியாது என்ற வர்ணாசிரமக் கொள்கையை கடைப்பிடித்தால் எதிர்காலம்தான் பதில் சொல்லும் என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications