மதுரையில் வென்றது பணநாயகம்: வைகோ
சென்னை:
மதுரை மேற்கு இடைத் தேர்தலில் பண நாயகம்தான் வென்றுள்ளது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், மதுரை இடைத் தேர்தலில் ஜனநாயகம் தோற்கடிக்கப்பட்டுள்ளது, பண நாயகம் வெற்றி பெற்றுள்ளது.
தமிழக அரசியல் வரலாற்றிலேயே,. ஏன் இந்திய வரலாற்றிலேயே ஒரு ஓட்டுக்கு 1500 ரூபாய் கொடுத்து, வாக்குச் சீட்டுக்கள் விற்கப்பட்டு வாங்கப்பட்ட அநீதி இதுபோல நடைபெற்றதில்லை.
1965ம் ஆண்டு நடந்த மொழிப் போராட்டத்தில், எண்ணற்ற தமிழர்களைக் கொன்று குவித்த காங்கிரஸ் கட்சி, அதனை அடுத்து நடைபெற்ற தர்மபுரி இடைத் தேர்தலில் அண்ணாவின் திமுகவை தோற்கடித்து வெற்றி பெற்றது.
ஆனால் சில மாதங்களில் வந்த பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை மக்கள் விரட்டியடித்தனர். அதே வரலாறு மீண்டும் திரும்பும் என்று கூறியுள்ளார் வைகோ.
விழுப்புரத்தில் மதிமுக மண்டல மாநாடு:
இதற்கிடையே விழுப்புரத்தில் இன்று மதிமுக மண்டல மாநாடு தொடங்கியது.
சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் முத்தாம்பாளையத்தில் இன்று காலை அபுபக்கர் குழுவினரின் இன்னிசையுடன் மாநாடு தொடங்கியது. மாநாட்டையொட்டி பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டு முகப்பு தோற்றம் கோட்டை போல் உருவாக்கப்பட்டுள்ளது.
மாநாட்டிற்கு மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா தலைமை தாங்கினார். மாநாட்டில் திராவிட இயக்க தலைவர்கள் படங்களும், தீக்குளித்த தியாகிகள் படங்களும் திறந்து வைக்கப்பட்டன.
தாயகம் மறுமலர்ச்சி காண அவசர தேவை அரசியல் மாற்றமா, சமுதாய மாற்றமா என்ற பட்டிமன்றமும் நடந்தது.
மாநாட்டு மலரை திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் ஆரணி ராஜா வெளியிட்டார். மாநில கலைத்துறை செயலாளர் கலைப்புலி தாணு அதை பெற்றுக் கொண்டார்.
மாநாட்டில் முடிவில் வைகோ உரையாற்றுகிறார். இதில் அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன், முன்னாள் அமைச்சர் சண்முகம் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications