ராமதாஸ் பேச்சு உறவைக் கெடுக்கும்-கருணாநிதி
சென்னை:தோழமைக் கட்சிகளுக்கிடையிலான நல்லுறவைக் கெடுக்கும் வகையில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் பேச்சு அமைந்துள்ளதாக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
நேற்றைய தினம் உயர் கல்வித்துறையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் ஒன்றையும் நடத்தி, அதில் கலந்து கொண்டு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தெரிவித்திருந்த கருத்துக்கள், எனது கவனத்திற்கு வந்ததைத் தொடர்ந்து சட்டமன்ற பாமக தலைவர் ஜி.கே.மணியைத் தொடர்பு கொண்டு நான் கேட்டபோது, ராமதாஸ் தெரிவித்த கருத்துக்களை முழுமையாக வெளியிடாமல் திரித்தும், குறைத்தும் ஏடுகளில் வெளியிட்டிருப்பதாகவும், அவர் தெரிவித்த கருத்துக்கள் பற்றி விளக்கமாக அறிக்கையாக பத்திரிக்கைகளுக்குத் தரப் போவதாகவும் தெரிவித்தார்.
ஆனால் இன்று காலையில், நேற்று மாலைப் பத்திரிக்கைகளில் வந்த அதே செய்திகள் வந்திருப்பதோடு, ஜி.கே.மணி வெளியிட்ட அறிக்கையிலும், முழுமையாக விபரங்கள் தெரிவிக்கப்படாததாலும், தோழமைக் கட்சியினருக்கும், பொதுமக்களுக்கும் விளக்கம் அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக பாமக நிறுவனர் ராமதாஸ், கழக அரசைப் பற்றியும், குறிப்பாக உயர் கல்வித்துறை பற்றியும், தொடர்ந்து அறிக்கை விடுவதும், அதற்கு அந்தத் துறைகளின் அமைச்சர்கள் விளக்கம் அளிப்பதும், தோழமைக் கட்சிகளிடையேயான நல்லுறவைக் கெடுப்பதாக அமைந்து விடுமோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுயநிதிக் கல்லூரிகள் அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து கடந்த ஆட்சியில் 20 முறை போராட்டம் நடத்தியதாகவும், தற்போது 27வது முறையாக போராட்டம் நடத்துவதாகவும் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
அதிக கட்டணம் வாங்குகிறார்கள் என்றால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆதாரம் வேண்டுமல்லவா என்றுதான் அந்தத் துறை அமைச்சர் பொன்முடி திரும்பத் திரும்பக் கேட்கிறார்.
டாக்டர் அவர்கள் தானே இதற்கான முயற்சிகளை எடுத்துக் கொண்டு, உரிய ஆதாரத்தைக் கொடுப்பாரேயானால், அதற்கு சட்டப்படி மாநில அரசினால் என்ன நடவடிக்கை எடுக்க முடியுமோ, அதை எடுக்க நான் தயாராக இருக்கிறேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த அரசு மாணவர்களின் நலனைக் காப்பதில் யாருக்கும் சளைத்தது இல்லை. மாணவர்களின் நலனை விட சுயநிதிக் கல்லூரி உரிமையாளர்களின் சொந்த நலனைப் பற்றி இந்த அரசு கவலைப்பட்டது கிடையாது.
அமைச்சர் பொன்முடி தவறே நடக்கவில்லை என்று கூறுவதாக ராமதாஸ் கூறியுள்ளார். தவறே நடக்கவில்லை என்று எப்போதும் அமைச்சர் கூறவில்லை. நடப்பதற்கான ஆதாரத்தையும், புகாரையும் பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்தால்தானே நடவடிக்கை எடுக்க முடியும் என்றுதான் சொல்லி வருகிறார்.
சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் கொள்ளை அடிப்பதாகவும் ராமதாஸ் கூறியுள்ளார். அப்படிப்பட்ட கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் அமைச்சர் அன்புமணியின் பொறுப்பிலே உள்ள இந்திய மருத்துவக் கவுன்சிலிடம்தான் உள்ளது. அங்கீகாரத்தை அவர் ரத்து செய்ய முடியும் என்றாலும் புகார் கொடுத்தால்தானே அவராலும் நடவடிக்கை எடுக்க முடியும்.
தோழமையுடன் இருக்கும் நாம் இந்த ஆட்சியிலும் போராட வேண்டியிருக்கிறதே என்று கேட்டுள்ளார் ராமதாஸ். இதைத்தான் நானும் கேட்கிறேன். ஜெயலலிதா ஆட்சியை விட இந்த ஆட்சியில் உயர் கல்வித்துறை மோசமாக இருக்கிறது என்று அவர் அறிக்கை விடுத்தால், அதையும் கேட்டுக் கொண்டு தோழமைக் கட்சி கூறுகிறது என்பதற்காக விளக்கம் சொல்லாமல் இருக்க வேண்டுமா?
சென்னையில் ஜூலை முதல் தேதி நடைபெற்ற மகளிர் பேரணியை பற்றி நிருபர்களிடம் அவர் பேசுகையில், டாக்டர் ராமதாஸ் அவர்களுக்கும் மற்றும் கூட்டணி தலைவர்களுக்கும் தரையில் மேடை அமைத்து அமர வைத்ததாகவும், அதற்கு அருகில் உயர்ந்த மேடையில் மற்றவர்கள் அமர்ந்ததாகவும் குறை கூறியிருக்கிறார். உயர்ந்த மேடை என்று கூறுவது பிரதீபா பாட்டீலும், நானும் அமர்ந்த இடத்தை தான் குறிப்பிடுகிறார்.
குடியரசு தலைவர் போன்ற பெரும் பொறுப்புக்கு வரக்கூடியவரை ஏராளமானவர்களுக்கு மத்தியில் உட்கார வைக்க கூடாது என்பது பாதுகாப்புத் துறையின் கண்டிப்பான ஆணையாகும். பதவிக்கு வரும் முன்பே குடியரசு தலைவருக்கான பாதுகாப்பா என டாக்டர் கேட்டிருக்கிறார்.
அது எங்களிடம் கேட்க வேண்டிய கேள்வியல்ல. பாமகவும் அங்கம் வகிக்கும் மத்திய அரசிடம் கேட்க வேண்டிய கேள்வி.
அனைத்து தோழமை கட்சிகள் சார்பில் பேரணி நடத்தப்பட்டும், அதை நானும் பிரதீபா பாட்டீலும் பார்வையிடுக்கிறோம் என்று தான் அறிவித்திருந்தோம். மற்ற கட்சிகளின் தலைவர்கள் வந்தால் அமருவதற்காகவே மற்றொரு மேடையும் அருகிலேயே அமைக்கப்பட்டு அந்த மேடையில் தான் கழக பொது செயலாளரும் என்னை விட வயதில் மூத்தவருமான பேராசிரியர், காங்கிரஸ், பாமக, சிபிஎம், சிபிஐ, விடுதலைச் சிறுத்தைகள், முஸ்லீம் லீக், உழவர் உழைப்பாளர் கட்சி, சமூக நீதி இயக்கம் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் அமர்ந்திருந்தனர்.
சொல்லப் போனால் தலைவர்கள் அமர்ந்திருந்த இடத்தில் என் மனைவியும், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் சுதர்சனம், பீட்டர் அல்போன்ஸ், மத்திய அமைச்சர் பாலு, ஸ்டாலின், துரைமுருகன், பொன்முடி, தங்கம் தென்னரசு ஆகியோர் நின்று கொண்டிருந்தனர்.
பிரதீபா பாட்டீல் உரை முடித்து சென்றவுடன் நான் அமர்ந்திருந்த இடத்திற்கு அனைத்து தலைவர்களையும் அழைத்து அமர செய்தேன். எதிர் வெயில் அடித்ததாக டாக்டர் குறைப்பட்டுக் கொண்டார். அதே வெயில் என் மீதும், பிரதீபா பாட்டீல் மீதும், மற்ற கட்சி தலைவர்கள் மீதும் அடித்துக் கொண்டுதான் இருந்தது.
இந்த பேரணியே தேவையில்லாத ஒன்று என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். தேவையில்லாத பேரணிக்கு வந்துவிட்டு, அதை பற்றி இத்தனை குறைகளையும் கூறுவது என்பது மனதுக்கு வேதனை தரக்கூடிய ஒன்றல்லவா என்பதை டாக்டர் எண்ணிப் பார்க்க வேண்டும்.
தென்னக மகளிரே திரண்டு வந்தது போல் பேரணியை, தென் சென்னை மாவட்ட கழகத்தின் சார்பில் மட்டுமே நடைபெற்ற பேரணி என்பது போல டாக்டர் குறிப்பிட்டிருப்பது, பேரணியில் கலந்து கொண்ட அனைத்து மகளிரையும் வருத்தப்பட வைத்திருக்கிறது.
தொடர்ந்து பாமக நிறுவனர் ஆளுங்கட்சியினர் மீது ஏதாவது குற்றசாட்டு கூறுவதும், அமைச்சர் மீதே குறிப்பிட்டு புகார்கள் சொல்வதும், அதற்கு பதிலளிக்க மற்ற தோழமை கட்சியினரும், கழக்கத்திலே உள்ள அமைச்சர்களும் என்னிடம் அனுமதி கேட்பதும் நான் அதற்கு அணை போட்டு வைப்பதும், ஒரு சில சந்தர்ப்பங்களில் எனக்கு தெரியாமல் ஒரு சிலர் விளக்கங்களை அளிப்பது என்பதும் ஒரு நல்ல நீடித்து நிலைக்கு இருக்க வேண்டிய தோழமைக்கு உகந்த செயலாக இருக்க முடியாது.
டாக்டர் அவர்களுக்கு இந்த அரசின் செயல்முறைகளில் ஏதாவது குறை இருக்குமேயானால் என்னிடம் நேரிடையாகவோ அல்லது தொலைபேசியிலோ அவற்றை விளக்கலாம். அதை விடுத்து நேரடியாக பத்திரிகைகளுக்கு சென்று அறிக்கை விடுவது, அதற்கு பதிலளிப்பது இரண்டுமே நல்லதல்ல.
ஏனென்றால் இரண்டு கட்சிகளை சேர்ந்த கீழ்மட்டத் தோழர்களிடம் இத்தகைய அறிக்கைகளால் அதிருப்தி வெறுப்பும் சில நேரங்களில் பகையுணர்ச்சியும் தோன்றி விடுமேயானால் பின்னர் இரு தரப்பினரிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவது என்பது சிரமமான செயலாக மாறிவிடும். இனியாவது இதை தவிர்ப்பது நல்லது என்று கூறியுள்ளார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications