தொழில்போட்டியால் முருகனைக் கொன்றோம்- திமுக கவுன்சிலர், குண்டுபாலா ஒப்புதல்
சிவகங்கை: தொழில் போட்டி மற்றும் முன்விரோதம் காரணமாக நான்தான் சிவகங்கை நகராட்சித் தலைவர் முருகனைக் கொன்றதாக என்ஜீனியர் பாலா மற்றும் திமுக கவுன்சிலர் மந்தக்காளை ஆகியோர் கூறியுள்ளனர்.
சிவகங்கையில் கடந்த 29-ம் தேதி நகரசபைத் தலைவர் முருகன் காரில் குண்டு வைத்து கொல்லப்பட்டார். இது தொடர்பாக திமுக கவுன்சிலர் மந்தக்காளை மற்றும் வெடிகுண்டை ரிமோட் மூலம் வெடிக்க வைத்த என்ஜீனியர் பாலா ஆகியோர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
அவர்களை போலீஸார் காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது பாலா ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார். மந்தக்காளை மற்றும் பாலாவிடம் தென்மண்டல ஐ.ஜி.சஞ்சீவ்குமார், உளவுத்துறை ஐ.ஜி.ஜாபர்சேட் மற்றும் எஸ்.பி.கண்ணன் ஆகியோர் விசாரணை நடத்தினர்.
அப்போது தாங்கள்தான் முருகனை குண்டு வைத்துக் கொன்றதாக இருவரும் ஒப்புக் கொண்டனராம்.
இது குறித்து ஐ.ஜி.சஞ்சீவ்குமார் கூறுகையில், தாங்கள் நடத்தும் கேபிள் டி.வி. தொழிலில் ஏற்பட்ட போட்டியால்தான் முருகனைக் கொன்றோம் என இருவரும் ஒத்துக் கொண்டனர். இவர்களுக்கு தீவிரவாத கும்பலுடன் தொடர்பு இருப்பதாக தெரியவில்லை.
போலீஸ் விசாரணையில், பாலா இந்த குண்டு வெடிப்பு நிகழ்த்துவதற்கு முன்பு ஆள் நடமாட்டமே இல்லாத காட்டுப் பகுதியான வாஸ்தாபட்டி என்னும் இடத்தில் குண்டை வெடித்துச் சோதித்துள்ளார்.
குண்டுவெடிப்பு நிகழ்த்த 3 இடங்களில் வெடிபொருள் வாங்கியுள்ளார். அதுகுறித்தும் விசாரணை நடந்து வருகிறது. பாலா இதற்கு முன்பு வேறொரு குற்றத்துக்காக சிறையில் இருக்கும்போது, கம்பத்தை சேர்ந்த ஒரு பெரிய ரவுடியிடம் இச்சம்பவத்தை அரங்கேற்ற யோசனை கேட்டுள்ளான்.
தற்போது அந்த ரவுடி குறித்தும் விசாரித்து வருகிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications