ராமதாஸ் நாளை அவசர ஆலோசனை;திமுக கூட்டணியிலிருந்து விலகுமா பாமக?
சென்னை:அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் காட்டமான பேச்சால் அதிருப்தி அடைந்துள்ள பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நாளை தைலாபுரம் தோட்டத்தில் கட்சி நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோரின் அவசரக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார். இதனால் திமுக கூட்டணியிலிருந்து பாமக விலகுமா என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் அதிகரித்துள்ளது.
திமுக, பாமக இடையிலான உரசல் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எப்போது உடையுமோ என்ற அளவுக்கு நிலைமை படு மோசமாக உள்ளது.
இந்த நிலையில் சென்னையில் நேற்று நடந்த திமுக நிகழ்ச்சியில், அமைச்சர் ஆற்காடு வீராசாமி பேசியுள்ள பேச்சு பாமகவினரிடையே பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கூட இருந்தே தொல்லை கொடுக்கும் கட்சிகள் நமக்குத் தேவையில்லை. திமுக தனித்தே நின்று ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு திறமை வாய்ந்தது என்று காட்டமாக பேசியிருந்தார் ஆற்காடு வீராசாமி.
பாமக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளைத்தான் மறைமுகமாக இவ்வாறு விமர்சித்திருந்தார் வீராசாமி. இதனால் பாமகவினர் கடும் கோபமடைந்துள்ளனர்.
மேலும் பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று மாலை வெளியிட்ட இன்னொரு அறிக்கையில் மணல் திருட்டு தொடர்பாக பாமகவை கடுமையாக தாக்கிப் பேசியிருந்தார். இவரும் மறைமுகத்தான் பேசியிருந்தார். இருந்தாலும் இதுவும் பாமகவை வர்ணித்தே, விமர்சித்தே வெளியிடப்பட்ட அறிக்கை என்பது தெள்ளத் தெளிவாக எல்லோருக்கும் புரியும்.
இப்படி முக்கிய அமைச்சர்கள் இருவர் காட்டமாக பாமகவை விமர்சித்துள்ளதால் அக்கட்சியினர் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில், நாளை தனது தைலாபுரம் தோட்ட இல்லத்தில் கட்சி நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், வன்னியர் சங்கப் பிரதிநிதிகள் எம்.பி, எம்.எல்.ஏக்கள் ஆகியோரின் ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார் டாக்டர் ராமதாஸ்.
இதுதொடர்பாக பாமக தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில், பாமக தலைமை செயற்குழுக் கூட்டம், நாளை மாலை 4 மணிக்கு திண்டிவனத்தை அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில், பாமக அரசியல் பயிலரங்க வளாகத்தில் நடைபெறவுள்ளது.
கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் முன்னிலை வகிக்கிறார். கட்சித் தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்குகிறார்.
பாமக எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களுக்குட்பட்ட மாநில பொறுப்பாளர்கள், மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள் கலந்து கொள்கின்றனர்.
இக்கூட்டத்தில் கட்சி வளர்ச்சி பற்றியும், அரசியல் பயிலரங்கத்தில் பயிற்சி பெறுவது குறித்தும் ஆலோசிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
இந்தக் கூட்டத்தில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் திமுகவுடன் கூட்டணியைத் தொடருவதா, இல்லையா என்பது குறித்து முக்கியமாக விவாதம் நடைபெறும் எனத் தெரிகிறது.
பாமகவின் இந்த திடீர் கூட்டத்தால் தமிழக அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திமுக கூட்டணியிலிருந்து பாமக விலகக் கூடும் என்ற பரபரப்பும் கூடியுள்ளது.












Click it and Unblock the Notifications