முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு.. ஆ.ராசா மீது எஸ்.பி அலுவலகத்தில் புகார்!
சென்னை: திமுக துணை பொதுச் செயலாளரும், நீலகிரி மக்களவை எம்.பியுமான ஆ. ராசா திருமண நிகழ்ச்சியில் பேசியபோது முதலமைச்சர் விஜய் குறித்து ஒருமையில் பேசியிருந்தார். இதுதொடர்பாக மருத்துவர் ராசா மணிகண்டன் என்பவர் ஆ. ராசாவுக்கு எதிராக பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.
அந்த புகாரில் ஆ.ராசாவின் பேச்சு சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் அமைந்துள்ளதாக அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபையில் பேசிய முதலமைச்சர் ஜோசப் விஜய், "அப்பாவை காணோம்" என குட்டிக்கதை சொல்லி, திமுக தலைவர் ஸ்டாலினை சீண்டிய நிலையில், அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய திமுக எம்.பி ஆ.ராசா, விஜய்யை ஒருமையில் பேசியது சர்ச்சையைக் கிளப்பியது.
திருவாரூரில் நடைபெற்ற முன்னாள் அமைச்சர் மதிவாணன் இல்லத் திருமண விழாவில் பேசிய திமுக எம்.பி ஆ.ராசா, "காமராஜரை தோற்கடித்த விருதுநகர் பெ.சீனிவாசன், அண்ணாவும், ராஜாஜியும் எவ்வளவு பெரிய அறிஞர்கள் என்பதை குறிப்பிடும்போது, "நான் காமராஜரை தோற்கடித்துவிட்டேன், காமராஜரை தோற்கடித்ததற்கு ஒரு பாராட்டு விழா உள்ளது வருகிறீர்களா?" என்று கேட்டாராம்.
அதற்கு அண்ணா, "வின்சென்ட் சர்ச்சிலையும், ரூல்ஸ்வெல்டையும் தெரியுமா என்றார். இரண்டாம் உலகப்போரில் இங்கிலாந்தை மட்டுமல்ல ஐரோப்பியாவை மட்டுமல்ல, இந்த உலகப் பந்தை காப்பாற்றியதில் வின்சென்ட் சர்ச்சிலுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு, அந்த வின்சென்ட் சர்ச்சில் போருக்கு பிறகு பொதுத் தேர்தலில் தோற்றுப் போனார்.
வெற்றி பெற்ற இங்கிலாந்து பிரதமரிடம் வின்சென்ட் சர்ச்சிலேயே தோற்கடித்து விட்டீர்களே என்று கேட்டனர். அதற்கு அவர், உலகத் தலைவராக இருக்கின்ற வின்சென்ட் சர்ச்சிலை ஒரு தோல்வி பாதிக்காது" என்று கூறினாராம். பின்னர் ராஜாஜியிடம் கேட்டபோது, மகாத்மா காந்தியையே இரண்டு இன்ச் உயரம் உள்ள தோட்டா தான் துளைத்தது. அதற்காக அந்த தோட்டாவுக்கு பாராட்டு விழா நடத்த முடியுமா? என்ன முட்டாள்தனம்" என்று கூறினாராம்.
அண்ணாவும், ராஜாஜியும் இருந்த சட்டப்பேரவையில், இன்று நா*ரி தலைவர்கள் எல்லாம் முதலமைச்சராக உள்ளனர். இந்தத் தலைவனை ஒரு தேர்தலை வைத்து எடை போட முடியுமா?" எனப் பேசியிருந்தார் ஆ.ராசா.
ஆ.ராசாவின் பேச்சு பேசுபொருளானது. இந்த நிலையில் அம்மாபாளையம் அரசு மருத்துவமனை மருத்துவர் ராசா மணிகண்டன் என்பவர் ஆ. ராசாவுக்கு எதிராக பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் ஆ.ராசாவின் பேச்சு சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் அமைந்துள்ளதாக அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.














Click it and Unblock the Notifications