50 ரூபாய்க்கு 30 சானல்கள்!: 'சன்'னுக்கு மதுரை ஆபரேட்டர்கள் சவால்!!
மதுரை:
மதுரை மக்களுக்கு 50 ரூபாய்க்கு குறைந்தது 30 சானல்களை தர முடிவு செய்துள்ளதாக மதுரை மாவட்ட கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்கம் அதிரடியாக அறிவித்துள்ளது. இந்த பேக்கேஜில் சன் குழுமச் சானல்கள் எதுவும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
சன் டிவிக்கும், கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்குமான போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது சன் குழுமச் சானல்களை ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கும் நிலையை நோக்கி கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சென்று கொண்டுள்ளனர்.
இத்தனை குழப்பத்திற்கும் காரணம், சன் குழுமம் அறிமுகப்படுத்திய சன் டைரக்ட் டிடிஎச் சேவைதான். இதற்கு முன்பு டாடா ஸ்கை டிடிஎச் உள்ளிட்ட டிடிஎச் வந்தபோதெல்லாம் அதை ஏற்காத கேபிள் டிவி ஆபரேட்டர்கள், சன் டிவி நிறுவனம் டிடிஎச் சேவையில் இறங்கியதும் மட்டும் கொந்தளித்தனர். (காரணம் என்னவோ?!)
தங்களது பிழைப்பில் மண்ணைப் போடும் செயல் இது என குமுறிய அவர்கள் போராட்டத்தில் குதித்தனர். இதனால் கடந்த சில நாட்களாக தமிழக மக்கள் சன் குழுமச் சானல்களை சரியாகப் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது.
குறிப்பாக ஞாயிற்றுக்கிழமையான நேற்று தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் எந்த சானல்களையும் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் காட்டவில்லை. அதேசமயம், திமுக சார்பிலான கலைஞர் மற்றும் அதிமுக சார்பு ஜெயா டிவியை மட்டும் காட்டினார்கள். மற்ற சானல்களை கிடப்பில் போட்டு விட்டனர்.
இதனால் ஞாயிற்றுக்கிழமையும் அதுவுமாக, மக்கள் பெரும் அவதிக்குள்ளாக நேரிட்டது. முதல்வர் கருணாநிதியின் உத்தரவாதத்தையடுத்து தற்போது போராட்டத்தை கேபிள் டிவி ஆபரேட்டர்கள் விலக்கிக் கொண்டுள்ளனர். இருப்பினும் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் என பல்வேறு ஊர்களில் இன்றும் போராட்டம் நடந்து வருகிறது.
இந் நிலையில் அழகிரியின் செல்வாக்கு நிறைந்த மதுரையில் 50 ரூபாய்க்கு குறைந்தது 30 சானல்களைத் தரப் போவதாக மதுரை மாவட்ட கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து சங்கத் தலைவர் பாண்டி மற்றும் நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் கூறுகையில், தற்போது நாங்கள் தரும் அனைத்து சானல்களையும் வழங்கி, மாதம் ரூ 75 கட்டணத்தை மட்டுமே வசூலிக்க சன் குழுமம் முன்வருமா என்பதை விளக்க வேண்டும்.
அரசு கேபிள் கழகத்தை தமிழக அரசு தொடங்கி, குறைந்த கட்டணத்தில் டிவி சானல்களை ஒளிபரப்பவுள்ள நிலையில் அதை சீர்குலைக்கும் வகையில் சன் குழுமம் தனது டிடிஎச் சேவையை தொடங்கியுள்ளது.
சன் குழுமத்தின் அறிவிப்பு மோசடியானதாகும், மக்களை ஏமாற்றும் செயலாகும்.
மதுரையில் நாங்கள் சன் குழுமச் சானல்கள் தவிர குறைந்தது 30 இலவச சானல்களை வெறும் 50 ரூபாய்க்கு வழங்கத் திட்டமிட்டுள்ளோம். மதுரையில் கேபிள் வயர்களை வெட்டியது யார் என்று எங்களுக்குத் தெரியாது. அவற்றையெல்லாம் சரி செய்து விரைவில் சீரான ஒளிபரப்பை வழங்கவுள்ளோம் என்று அவர்கள் கூறினர்.
டிடிஎச் வந்தால் மட்டுமே கேபிள் டிவிக்காரர்களின் பிடியில் இருந்து மக்கள் விடுபட முடியும் என்பது மட்டும் நிச்சயமான உண்மை.












Click it and Unblock the Notifications