சீனி என நினைத்து விஷப் பொடி சாப்பிட்ட 3 குழந்தைகள் உயிர் ஊசல்
தூத்துக்குடி:
தூத்துக்குடி அருகே சீனி என நினைத்து விஷப் பொடியை சாப்பிட்ட 3 குழந்தைகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அய்யனார் காலனியைச் சேர்ந்தவர் மகாராஜா. ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன்கள் இசக்கித்துரை (8), சுரேஷ் (3). பக்கத்து வீட்டைச் சேர்ந்த ராஜமாரியப்பன் மகள் சிவலட்சுமி ஆகியோர் அங்குள்ள அரசு பள்ளியில் 3 மற்றும் 2-ம் வகுப்பு படித்து வருகின்றனர். சுரேஷ் மட்டும் வீட்டில் இருந்து வருகிறான்.
நேற்று காந்தி ஜெயந்தி விடுமுறை என்பதால் இவர்கள் 3 பேரும் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டு அருகில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது சற்று தொலைவில் குப்பையில் 2 பார்சல்கள் கிடந்தது. இதனை பார்த்த சிறுவர்கள் மூவரும் அதனை எடுத்து வந்து அருகில் உள்ள மரத்தின் அடியில் வைத்து பிரித்து பார்த்தனர்.
அதில், சீனியைப் போல சிவப்பு நிறத்தில் பவுடர் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இசக்கிதுரை அதில் சிறிதளவு எடுதது தனது வாயில் போட்டான். அப்போது அது இனித்தது. உடனே அவன் தனது தம்பி சுரேஷ் மற்றும் சிவலட்சுமியிடம் இதுபற்றி தெரிவித்தான்.
அவர்களும் அதனை சிறிது எடுத்து வாயில் போட்டனர். இனிப்பு சுவை நன்றாக இருக்கவே மூன்று பேரும் அதனை மாறி மாறி எடுத்து சாப்பிட்டனர்.
இதில் இசக்கிதுரை மட்டும் அதிகளவு எடுத்து சாப்பிட்டான். பின்னர் அனைவரும் வீட்டுக்கு வந்தனர். அப்போது அவர்களுக்கு தலை சுற்றல் ஏற்பட்டது. இதனால் தள்ளாடியபடியே வீட்டுக்கு சென்றனர். இதைக் கண்ட மகாராஜா அவர்களிடம் இதுகுறித்து கேட்டார். அதற்கு அவர்கள் இருவரும் எங்கள் தொண்டை கரகரப்பாக இருக்கிறது. தலை சுற்றுவது போன்று உள்ளது என்று கூறினர்.
உடனே பதறிதுடித்த மகாராஜா அவர்களிடம் உங்களுக்கு யாராவது எதாவது சாப்பிட கொடுத்தார்களா அல்லது நீங்கள் எந்த வீட்டிலாவது சென்று சாப்பிட்டீர்களா, என்று கேட்டார். இதையடுத்து இசக்கிதுரை நடந்த சம்பவங்களை தனது தந்தையிடம் கூறினான்.
இதேபோல் சிவலட்சுமியும் தனது தந்தை ராஜமாரியப்பனிடம் குப்பையில் கிடந்த பார்சலை பிரித்து சாப்பிட்டதை கூறினாள். இதைத் தொடர்ந்து சிறுவர்கள் கூறிய இடத்திற்கு சென்று பொற்றோர்கள் பார்த்தனர்.
அப்போது ஈயை விரட்ட பயன்படுத்தப்படும் காலாவதியான மருந்தை யாரோ குப்பையில் தூக்கி வீசியிருப்பதும், அதனை சிறுவர்கள் சீனி என நினைத்து தின்றிருப்பதும் தெரியவந்தது.
உடனே அவர்கள் இசக்கிதுரை உள்ளிட்ட 3 பேரையும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் இசக்கிதுரையின் நிலைமை மிகவும் கவலைகிடமாக உள்ளது.












Click it and Unblock the Notifications