1 கிராம் தங்கம் ₹13,090.. ஆனால் பட்ஜெட்டில் ₹17,000 ஒதுக்கீடு? தாய்மாமன் திட்ட டெண்டர் ரகசியம் இதோ!
சென்னை: விஜய் தலைமையிலான தமிழக அரசு, தனது முக்கிய தேர்தல் வாக்குறுதியான "தாய்மாமன் தங்க மோதிரத் திட்டத்தை" செயல்படுத்துவதற்கான முதற்கட்டப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் அரசு சார்பில் 1 கிராம் எடையுள்ள, 22 கேரட் (916 ஹால்மார்க்) தங்க மோதிரம் வழங்கப்படும் என்பது இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
சமீபத்தில் தமிழ்நாடு மருத்துவச் சேவைகள் கழகம் (TNMSC) இத்திட்டத்திற்கான அதிகாரப்பூர்வ டெண்டரை வெளியிட்டது. இந்த டெண்டர் அறிவிப்பு வெளியானதில் இருந்து, பொதுமக்கள் மற்றும் பொருளாதார வல்லுநர்கள் மத்தியில் ஒரு சுவாரசியமான குழப்பமும், விவாதமும் எழுந்துள்ளது.

தற்போது சென்னையில் 1 கிராம் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை தோராயமாக ரூ13,090 என்ற உச்சத்தில் இருக்கும்போது, அரசு வெளியிட்ட அரசாணையில் மொத்தமாக 4,41,667 பிரசவங்களுக்கு ரூ755.83 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது, ஒரு குழந்தைக்கு தோராயமாக ரூ.17,000 வரை நிதி கணக்கிடப்பட்டுள்ளது.
பலரும் குறிப்பிட்டது போல வெறும் ரூ.5,725 அல்ல, மாறாக நடப்பு சந்தை விலையை விடக் கூடுதலாகவே நிதி பாதுகாப்பாக ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தில் 8 காரட் தங்கம் பயன்படுத்தப்படுகிறதோ என்ற சந்தேகம் பலருக்கும் எழுந்துள்ளது.
8 காரட் தங்கமா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி
டெண்டர் அறிவிப்பு வெளியானவுடன், தங்கம் விலை இவ்வளவு அதிகமாக இருக்கும்போது அரசு எப்படி 1 கிராம் தங்கம் வழங்கும், ஒருவேளை மாற்று உலோகங்களோ அல்லது குறைந்த கேரட் அதாவது 8 காரட் அல்லது 14 காரட் தங்கமோ பயன்படுத்தப்படுமா என்ற அச்சம் பலருக்கு எழுந்தது. ஆனால், தமிழ்நாடு மருத்துவச் சேவைகள் கழகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ டெண்டர் ஆவணத்தில் இது மிகத் தெளிவாக மறுக்கப்பட்டுள்ளது.
அரசு கொள்முதல் செய்யவிருக்கும் மோதிரங்கள் அனைத்தும் 22 காரட் (916 ஹால்மார்க்) தரம் கொண்டதாக மட்டுமே இருக்க வேண்டும் என்று மிகக் கடுமையான நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு மோதிரமும் BIS ஹால்மார்க் அங்கீகாரம் மற்றும் தனித்துவமான கண்காணிப்புக் குறியீடு (HUID) கொண்ட கார்டுகளில் பேக் செய்யப்பட்டு வழங்கப்படும்.
எனவே, இதில் தரக் குறைபாட்டிற்கோ அல்லது கேரட் குறைப்பிற்கோ எள்ளளவும் இடமில்லை.
பட்ஜெட் கணக்கீடு: ரூ17,000 ஒதுக்கீடு செய்யப்பட்டது ஏன்?
ஆண்டுக்கு சுமார் 4.41 லட்சம் குழந்தைகளுக்கு 1 கிராம் மோதிரம் வழங்க மொத்த பட்ஜெட் ரூ755.83 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதை ஒரு மோதிரத்திற்கு என்று கணக்கிட்டால் சுமார் ரூ17,000 வருகிறது. தற்போதைய தங்கம் விலை ரூ13,090- ஆக இருக்கும்போது, கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டதன் பின்னணியில் மூன்று முக்கிய காரணங்கள் உள்ளன:
தங்கம் விலை ஏற்ற இறக்கம்
சர்வதேச சந்தை நிலவரப்படி தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறிக்கொண்டே செல்கிறது. டெண்டர் ஆவணத்தின்படி, அடிப்படை விலையாக 1 கிராம் 22 காரட் தங்கம் ரூ13,000 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் தங்கம் விலை மேலும் அதிகரித்தால் திட்டத்திற்குத் தட்டுப்பாடு வரக்கூடாது என்பதற்காக, அரசு முன்கூட்டியே கூடுதல் நிதியை சேர்த்து ஒதுக்கியுள்ளது.
வழங்கும் தேதியின் தினசரி சந்தை விலை
டெண்டர் விதிகளின்படி, ஒப்பந்ததாரர்களுக்கு மொத்தமாக ஒரே விலையில் பணம் வழங்கப்படாது. எந்தத் தேதியில் மருத்துவமனைகளுக்கு மோதிரங்கள் சப்ளை செய்ய ஆர்டர் வழங்கப்படுகிறதோ, அன்றைய தினத்தின் அதிகாரப்பூர்வ சந்தை விலையின் அடிப்படையிலேயே அரசு பணம் செலுத்தும். இதனால் அரசுக்கு நீண்ட கால விலை மாற்றங்களால் ஏற்படும் நஷ்டம் தவிர்க்கப்படுகிறது.
உற்பத்தி மற்றும் பேக்கேஜிங் செலவுகள்
1 கிராம் தங்கத்தின் விலையோடு சேர்த்து, அதன் செய்கூலி, சேதாரம் செலவு, தனித்துவமான வரிசை எண் கொண்ட பாதுகாப்பு பாலி-கார்பனேட் பேக்கேஜிங் செலவு மற்றும் ஒவ்வொரு மாவட்ட மருத்துவமனைக்கும் பாதுகாப்பாகக் கொண்டு சேர்க்கும் போக்குவரத்துச் செலவுகள் ஆகிய அனைத்தும் இந்த ஒட்டுமொத்த பட்ஜெட்டுக்குள்ளேயே அடங்கும். நிர்வாகச் செலவுகளுக்காகத் தனியாக ரூ5 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
திட்டத்தின் தற்போதைய நிலை
இத்திட்டத்திற்கான டெண்டர் சமர்ப்பிக்க ஆகஸ்ட் 17, 2026 வரை நிறுவனங்களுக்குக் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் சராசரியாக ரூ750 கோடி விற்பனை மேற்கொண்ட பெரிய நிறுவனங்கள் மட்டுமே இதில் பங்கேற்க முடியும் என்பதால் தரம் உறுதி செய்யப்படுகிறது.
முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15, 2026 அன்று இத்திட்டம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்படவுள்ளது.














Click it and Unblock the Notifications