பிளாஷ்பேக் குட்டி ஸ்டோரி.. ரசிகர் பெருமை பற்றி பேசி கொம்பு சீவிய சிவகார்த்திகேயன்! வெளியான வீடியோ
சென்னை: உனக்கு ரசிகர்கள் எல்லாம் வந்துட்டாங்களா? என்று சினிமாவுக்கு வந்த புதிதில் தன்னிடம் ஒரு தயாரிப்பாளர் கேட்டதாக சிவகார்த்திகேயன் பேசியிருக்கும் வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது. அதற்கு அப்போதே தான் கொடுத்த பதில் என்ன என்பதையும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மற்றும் நிர்வாகிகள் சந்திப்பை கூட்டத்தில் பேசி இருக்கிறார். ஆனால் இந்தப் பேச்சு வேறு ஒரு கோணத்திலும் பார்க்கப்படுகிறது.
சில நாட்களுக்கு முன்பு சென்னையில் சிவகார்த்திகேயன் தனது நற்பணி இயக்க நிர்வாகிகளை சந்தித்திருந்தார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் 2,000-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகினஈ. ஒரே மாதிரியான வெள்ளைச் சட்டையில் ரசிகர்கள் திரண்டதும், நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விதமும் சமூக வலைதளங்களில் அரசியல் மாநாட்டை நினைவுபடுத்துவதாக பலரும் பேசினர்.

இந்த நிலையில், அந்த சந்திப்பில் சிவகார்த்திகேயன் பேசிய சில விஷயங்கள் தொடர்பான வீடியோக்கள் தற்போது அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. அதில் அவர் தனது ஆரம்ப காலத்தை நினைவுபடுத்தி பேசும் ஒரு பகுதி ரசிகர்களிடையே அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
சிவகார்த்திகேயன் பேச்சு
சிவகார்த்திகேயன் பேசியதாவது, நான் சினிமாக்கு வந்த புதிதில் 2, 3 படங்கள் பண்ணியிருந்தேன். அப்போ ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போது சில ரசிகர்கள் என்னைப் பார்க்க வந்திருந்தார்கள். அவர்களைப் பார்த்துவிட்டு நான் திரும்பி வந்தபோது அங்கே ஒரு புரொடியூசர்கள் இருந்தார். அவங்க என்கிட்ட, என்ன சிவா யாரு வந்திருக்கா? என்று கேட்டார். நான் சார் என்னுடைய ரசிகர்கள் கொஞ்ச பேர் வந்திருக்காங்க அதான் அவங்கள போய் பாத்துட்டு வரேன் என்று சொன்னேன்.
தயாரிப்பாளர் சொன்ன விஷயம்
அதற்கு அவர், உனக்கு ரசிகர்கள் எல்லாம் வந்துட்டாங்களா? என்று கேட்டார். நான் ஃபேன்ஸ் நிறைய பேர் வந்து பார்க்குறாங்க சார் என்று சொன்னேன். அதற்கு அவர், 'ஃபேன்ஸ் எல்லாம் இப்போ பிகினிங்ல இருப்பாங்க. அதை எல்லாம் பார்த்துட்டு இருக்காதீங்க உங்க வேலையைப் பாருங்க என்று சொன்னார். அப்போதுகூட நான் உறுதியாக, சார் அவங்க என் கூட கடைசி வரைக்கும் வருவாங்க என்று சொன்னேன். நான் 2, 3தடவை அவருடைய பேச்சுக்கு எதிர்த்து பேசியதால் அவருக்கு கொஞ்சம் கடுப்பாகி, 'ஃபேன்ஸ் இருப்பாங்க... நீங்க இண்டஸ்ட்ரியில இருப்பீங்களா?' என்று கேட்டார்.
ரசிகர்களின் வளர்ச்சி
ஆனால், 2026-ல் நான் இண்டஸ்ட்ரியில் இருக்கிறேன். இப்போ ரசிகர்கள் மன்ற நிர்வாகிகளுடன் கலந்து உரையாடிக் கொண்டிருக்கிறேன் என்று சிவகார்த்திகேயன் சொல்லச் சொல்ல அரங்கில் இருந்த ரசிகர்கள் ஆரவாரம் செய்து தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். சிவகார்த்திகேயன் சொன்ன இந்த சம்பவத்தில் ஒரு சின்ன விஷயம் இருக்கிறது.
ஆரம்பத்தில் தன்னைப் பார்க்க வந்த ரசிகர்களை பார்த்து, "இவங்க எல்லாம் ஆரம்பத்துலதான் இருப்பாங்க" என்று ஒருவர் சொன்னபோது, அதற்கு அப்போதே கடைசி வரை வருவாங்க என்று அவர் நம்பிக்கையுடன் பதில் சொன்னதாக கூறுகிறார். இன்று அந்த நம்பிக்கையை அவரே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு தனது ரசிகர் கூட்டம் வளர்ந்திருக்கிறது. அதனால்தான் இந்த பேச்சுக்கு ரசிகர்கள் மத்தியில் இவ்வளவு வரவேற்பு கிடைத்திருக்கிறது.
நெட்டிசங்களின் விமர்சனம்
ஆனால், சமூக வலைதளங்களில் இப்போது இன்னொரு கேள்வியும் சேர்ந்து வருகிறது. சிவகார்த்திகேயன் தனது ரசிகர்களின் பலத்தை இவ்வளவு வெளிப்படையாகப் பேசுவதற்கு காரணம் என்ன என்பதுதான் அந்த கேள்வி. ஏற்கனவே விஜய் இதுபோல தனது ரசிகர்கள் பலத்தை பற்றி பெருமையாக பேசிப் பேசி இப்போ முதலமைச்சர் ஆகி இருப்பாதால் அதேபோல தனக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டத்தையும் கொம்பு சீவி தனக்கு ஆதரவாக மாற்றிக் கொண்டிருக்கிறாரா சிவகார்த்திகேயன்? என்ற விமர்சனமும் வருகிறது.
ரசிகர்கள் கருத்து
ஏனென்றால் இது சாதாரண ரசிகர்கள் சந்திப்பு மட்டும் இல்லை. மாநிலம், மாவட்டம், நகரம், ஒன்றியம், பகுதி என நிர்வாகிகள் மட்டத்திலேயே ரசிகர்களை ஒருங்கிணைத்து சந்தித்திருக்கிறார். அதிலும் ஆயிரக்கணக்கானோர் ஒரே மாதிரியான வெள்ளைச் சட்டையில் கலந்து கொண்டிருக்கிறார்கள். இந்த ஏற்பாடுகள் எல்லாமே அரசியல் கூட்டங்களை நினைவுபடுத்துவதாக சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதிலும் முக்கியமாக, தமிழக அரசியலில் நடிகர்களின் ரசிகர் மன்றங்கள் பின்னாளில் அரசியல் அமைப்புகளாக மாறிய அனுபவம் இருப்பதால், சிவகார்த்திகேயனின் ரசிகர் அமைப்பு குறித்த ஒவ்வொரு நடவடிக்கையும் இப்போது கூடுதல் கவனத்தைப் பெறுகிறது.


Click it and Unblock the Notifications
