4500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் ஏன்?.. அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்
சென்னை: தமிழகத்தில் மின் தேவை அதிகரித்துள்ளதுடன், மத்திய தொகுப்பில் இருந்து கிடைக்க வேண்டிய மின்சாரமும் முழுமையாக கிடைக்காததால் 4,500 மெகாவாட் மின்சாரத்தை கொள்முதல் செய்யவுள்ளதாக அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். மேலும், வரும் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் மின் தேவை மேலும் அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டுள்ளதால், அதனை சமாளிக்க முன்கூட்டியே நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தவெக ஆட்சியமைத்து 5 மாதங்கள் கடந்துவிட்டன. முதலமைச்சர் விஜயும், அதிகாரிகளும் ஏராளமான சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்கள். சட்டம் ஒழுங்கு பாதிப்பு, தொழில் முதலீடு சொதப்பல் என பல்வேறு பிரச்சனைகள் எழுந்து வருகின்றன. குறிப்பாக, மின்வெட்டு பிரச்சனை தலைதூக்கியுள்ளதால் பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

தலைதூக்கும் மின்வெட்டு
தமிழகம் முழுக்க பல்வேறு இடங்களில் மின்வெட்டு இருந்து வருவதாக மக்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள். அரசியல் தலைவர்கள் பேட்டி கொடுக்கும் இடங்களில் கூட மின்வெட்டு பிரச்சனை இருந்து வருகிறது எனவும் குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில், 4,500 மெகாவாட் மின்சாரத்தை கொள்முதல் செய்யவுள்ளதாக அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். மேலும், வரும் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் மின் தேவை மேலும் அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டுள்ளதால், அதனை சமாளிக்க முன்கூட்டியே நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய தொகுப்பில் இருந்து வர வேண்டிய 3 ஆயிரம் மெகாவாட் தமிழகத்திற்கு கிடைக்கவில்லை. பீக் ஹவர்ஸில் கடந்த ஆண்டை விட 3 ஆயிரம் மெகாவாட் அதிகமாக தேவைப்படுகிறது. நெய்வேலி போன்ற ஒன்றிய தொகுப்பில் இருந்து வர வேண்டிய 3 ஆயிரம் மெகாவாட் மின்சாரமும் நமக்கு கிடைக்கவில்லை. கடந்த காலத்தை விட தேவையும் 3 ஆயிரம் மெகாவாட் அதிகரித்துள்ளது.
அதிகரிக்கும் மின் தேவை
இவை இரண்டையும் கணக்கில் கொண்டு குறுகிய கால டெண்டருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எல் நினோ உள்ளிட்ட பல காரணங்களால் வெப்பம் அதிகரித்துக் காணப்படுவதால் கடந்த ஆண்டு தேவையை விட இந்த ஆண்டு 3 ஆயிரம் மெகாவாட் அதிகமாக தேவைப்படுகிறது. இனி வரும் காலங்களில் அடுத்த ஆண்டு மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் மின் தேவை அதிகரிக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
21 ஆயிரம் மெகாவாட் தேவை
அவை எல்லாவற்றுக்கும் சேர்ந்து தான் வெளியில் இருந்து மின்சாரத்தைக் கொள்முதல் செய்வதற்கான பணிகளை வெவ்வேறு காலங்களில் டெண்டர் விட முடிவு எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான பணிகள் தொடங்கப்படும். அனல் மின் நிலையங்கள் மூலமாக நமது சொந்த உற்பத்தி அதிகமபட்சமாக 4 ஆயிரம் மெகாவாட் செய்ய முடியும்.
உடன்குடி முழுவதும் செயல்பட்டால் 4 ஆயிரம் மெகாவாட் உற்பத்தி செய்ய முடியும். ஆனால், நம் தேவைகள் 21 ஆயிரம் மெகாவாட்டைக் கடந்துள்ளது. அதனால், அனல் மின் நிலையங்கள் முழுமையாக செயல்பட்டாலும் கூட 4 ஆயிரம் மெகாவாட் மட்டுமே அதிகபட்சமாக பூர்த்தி செய்ய முடியும். என்எல்சியில் இருந்து வர வேண்டிய தொகுப்பும் வரவில்லை என்று கூறினார்.


Click it and Unblock the Notifications
