For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இலங்கை மீனவர் சுட்டுக் கொலை; நீதி விசாரணைக்கு அரசு உத்தரவு!

By Staff
Google Oneindia Tamil News


மதுரை:

மதுரை மத்திய சிறை வாசலில் இலங்கையைச் சேர்ந்த மீனவர் சங்கத் தலைவர் வர்ணகுல சூரிய கனிசியஸ் பெர்னாண்டோ, சிறைக் காவலரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து நீதி விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்கள் நான்கு பேரைப் பார்ப்பதற்காக கொழும்பிலிருந்து மீனவர் சங்கத் தலைவர் வர்ணகுல சூரிய கனிசியஸ் பெர்னாண்டோ மதுரைக்கு வந்திருந்தார்.

மதுரை சிறைக்கு வெள்ளிக்கிழமை மாலை அவர் வந்தார். சிறையில் பார்வையாளர்கள் நுழையும் பகுதி வழியாக செல்வதற்குப் பதிலாக, மெயின் கேட் வழியாக செல்ல அவர் முயன்றார்.

அவரை சிறைக் காவலர் தேவராஜன் என்பவர் தடுத்துள்ளார். ஆனால் அதையும் மீறி பெர்னாண்டோ உள்ளே செல்ல முயன்றுள்ளார். மேலும், தேவராஜன் வைத்திருந்த துப்பாக்கியையும் பறிக்க முயன்றுள்ளார்.

இதையடுத்து தற்காப்புக்காக தேவராஜன் பெர்னாண்டோவை சுட்டுள்ளார். இதில் குண்டு பாய்ந்து பெர்னாண்டோ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து வருவாய் கோட்டாட்சியர் (ஆர்.டி.ஓ) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. விசாரணை நடந்து வருகிறது. இன்னும் விசாரணை அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்படவில்லை.

இந்த நிலையில், தற்போது நீதி விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சுட்டுக் கொல்லப்பட்டவர் வெளிநாட்டுக்காரர் என்பதால் முழு அளவிலான விசாரணை தேவைப்படுகிறது என்பதால் நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தமிழக அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதி விசாரணை அறிக்கையின் பேரில் சிறைக் காவலர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்த முதல் கட்ட அறிக்கையை மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அரசுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இந்த நிலையில், சுட்டுக் கொல்லப்பட்ட பெர்னாண்டோவின் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ. 1லட்சம் இழப்பீடு தர வேண்டும் என எவிடென்ஸ் என்ற மனித உரிமை அமைப்பு கோரியுள்ளது.

இதேபோல, பீப்பிள்ஸ் வாட்ச் என்ற அமைப்பு, மதுரை மத்திய சிறைக் கண்காணிப்பாளர் மற்றும் காவலர் தேவராஜன், சம்பவ நாளன்று பணியில் இருந்த பிற அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், தேவராஜன் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று கோரியுள்ளது.

தற்போது மதுரை மத்திய சிறையைச் சுற்றிலும் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. மெயின் கேட்டில் கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். கண்காணிப்புக் கோபுரங்களில் தானியங்கித் துப்பாக்கிளுடன் போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

சகோதரர் மதுரை வருகை:

இதற்கிடையே, சுட்டுக் கொல்லப்பட்ட பெர்னாண்டோவின் சகோதரர் ஜூட் பெர்னாண்டோ மற்றும் இலங்கை மீனவர் சங்கத் தலைவர் ஆகியோர் இன்று மதுரை வந்தனர்.

பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்ட பின்னர் பெர்னாண்டோவின் உடல் அவர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

இதையடுத்து திருச்சியிலிருந்து கொழும்புக்கு பெர்னாண்டோவின் உடல் விமானம் மூலம் கொண்டு செல்லப்படவுள்ளது.

கைதிகள் உண்ணாவிரதம்

பெர்னாண்டோ சுட்டுக் கொல்லப்பட்டதற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில், மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 1800 கைதிகளும் நேற்று அடையாள உண்ணாவிரதம் இருந்தனர்.

இதேபோல கடலூர் மத்திய சிறையிலும் பெர்னாண்டோ கொலையைக் கண்டித்து கைதிகள் உண்ணாவிரதம் இருந்தனர்.

இதேபோல, தென்காசியில் 6 பேர் கடந்த ஆகஸ்ட் மாதம் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைதாகி இதே சிறையில் அடைக்கப்பட்டுள்ள சக்திப் பாண்டியன் உள்ளிட்ட 17 பேர், சக்திப் பாண்டியனின் சகோதரர் குமார் பாண்டியனைக் கொலை செய்த வழக்கில் முஸ்தபா கமல், ரகுமான் பாஷா ஆகியோரைக் கைது செய்யக் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டதாக சிறைக் கண்காணிப்பாளர் முருகேசன் தெரிவித்தார்.

இதற்கிடையே, பெர்னாண்டோ சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்திலிருந்து காசிம் என்ற அதிகாரி மதுரை வந்து நடந்த சம்பவம் குறித்து ஆர்.டி.ஓ.விடம் கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழக அரசு உரிய முறையில் விசாரணை நடத்தி வருகிறது. அதிகாரிகள் எங்களுக்கு உரிய ஒத்துழைப்பை அளித்துள்ளனர்.

ஆர்.டி.ஓ. விசாரணை அறிக்கைக்காக நாங்களும் காத்திருக்கிறோம். அதன் பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்வோம் என்றார் காசிம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X