பி.எம்.ஸ்ரீ ரூ.3500 கோடி நிதி விவகாரம்! மத்திய அரசின் அழுத்தத்திற்கு அடிபணியுமா தவெக? வைகோ வார்னிங்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பி.எம்.ஸ்ரீ (PM SHRI) திட்டம் தமிழ்நாட்டில் கல்வித் துறையில் தற்போது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.. மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின் (NEP 2020) ஒரு பகுதியாக, மும்மொழிக் கொள்கையை வலியுறுத்தும் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு தமிழ்நாடு அரசுக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. இதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அந்தவகையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

முந்தைய திமுக ஆட்சியில் இந்த திட்டத்தை கடுமையாக எதிர்த்ததால், சுமார் ரூ. 3,500 கோடி "சமக்ர சிக்ஷா அபியான்" நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்திருந்தது. இப்போது விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், நிறுத்தி வைக்கப்பட்ட நிதியைப் பெற புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு மத்திய அரசு மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளது. இந்தச் சூழல் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது..

PM SHRI Scheme Vaiko TVK Vijay Education Policy Central Government Tamil Nadu Politics NEP Issue

தவெக ராஜ்மோகன் தந்த உறுதி

இது குறித்து சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், தமிழக அரசின் நிலைப்பாட்டை மிகத் தெளிவாகப் பதிவு செய்திருந்தார். மாணவர்களின் வருகை மற்றும் எண்ணிக்கையை உயர்த்துவது அரசின் முன்னுரிமை என்றும், அதே நேரத்தில் இருமொழிக் கொள்கையில் எவ்வித சமரசமும் கிடையாது என்றும் அவர் திட்டவட்டமாக கூறியிருந்தார்.

கொள்கை அளவில் சமரசம் செய்து கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை என்று குறிப்பிட்ட ராஜ்மோகன், மத்திய அரசின் எந்தவிதமான அழுத்தத்திற்கும் தமிழக அரசு அடிபணிய மாட்டோம் என்று உறுதியாகத் தெரிவித்திருந்தார்.. அமைச்சரின் இந்த அதிரடிப் பேச்சு, தமிழகத்தில் ஆளும் தவெக அரசின் உறுதிப்பாட்டைப் பறைசாற்றுவதாக அமைந்துள்ளது என்றாலும், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான தமிழிசை சவுந்தராஜன், இத்திட்டம் குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

பி.எம்.ஸ்ரீ திட்டம் மற்றும் புதிய கல்விக் கொள்கை

பி.எம்.ஸ்ரீ திட்டம் மற்றும் புதிய கல்விக் கொள்கை ஆகியவை லட்சக்கணக்கான கல்வியாளர்களின் ஆலோசனையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவை என்றும், இவை நடைமுறையில் உள்ள மாநிலங்களில் கல்வித் தரம் உயர்ந்துள்ளதாகவும் தமிழிசை சுட்டிக்காட்டுகிறார்.

சிங்கப்பூரை எடுத்துக்காட்டாக அமைச்சர் குறிப்பிட்டிருந்த நிலையில், அங்கு தமிழ் மொழி அதிகாரப்பூர்வ மொழியாகச் செயல்படுவதையும் அவர் நினைவுகூர்ந்துள்ளார். புதிய அமைச்சர்கள் திட்டங்களை முழுமையாக ஆய்வு செய்யாமல் கருத்து தெரிவிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும், இவிஷயத்தில் முதல்வர் விஜய் தனி கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்..

ஆனால், தமிழகத்தின் அடிநாதமான மொழி உணர்வுகளும், சமூகநீதிப் பார்வையும் இத்திட்டத்திற்கு எதிராகவே வலுவாக இருக்கின்றன. திமுக ஆட்சியில் இந்தத் திட்டம் கடுமையாக எதிர்க்கப்பட்டதைப் போலவே, இப்போதைய தவெக அரசும் அதே நிலைப்பாட்டைப் பின்பற்ற வேண்டும் என்பதே பெரும்பாலான அரசியல் கட்சிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

விசிக திருமாவளவன்

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோர் இத்திட்டத்தை நீண்டகாலமாக எதிர்த்து வருகிறார்கள்.. அந்த வரிசையில், இப்போது மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் முதலமைச்சர் விஜய்க்கு முக்கிய வேண்டுகோள் விடுத்துள்ளார். சமூகநீதி, மதச்சார்பின்மை, ஜனநாயகம் மற்றும் பெண்கள் பாதுகாப்பு என அனைத்து அம்சங்களிலும் தமிழக அரசு சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்று வாழ்த்திய வைகோ, பி.எம்.ஸ்ரீ திட்டத்தின் மூலம் மீண்டும் இந்தி திணிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளார்..

"உங்கள் அரசு மக்கள் அரசாக பரிணமிக்க வேண்டுமானால் பி.எம்.ஸ்ரீ திட்டத்தை நீங்கள் ஒருபோதும் ஏற்கவே கூடாது. அத்தகைய முடிவெடுக்கும் உங்கள் அரசுக்கு தமிழ் உணர்வாளர்கள் அரணாக தோள் கொடுப்பார்கள்" என்றும் மூத்த தலைவர் வைகோ தவெக அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.

விஜய் எப்படி எதிர்கொள்ள போகிறார்?

ஆக, முந்தைய அரசு இந்தத் திட்டத்தை ஏற்றுக்கொள்ளாமல் இருந்ததைப் போலவே, தவெக அரசும் உறுதியான முடிவை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் ஒருமித்த கருத்தாக உள்ளது.

மத்திய அரசின் நிதி நெருக்கடிகள் அல்லது அழுத்தங்களுக்குப் பணிந்து, மாநிலத்தின் உரிமைகளையும் கல்வித் தன்னாட்சியையும் விட்டுக்கொடுக்கக் கூடாது என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

தமிழகத்தின் இருமொழிக் கொள்கையைச் சிதைக்க வரும் எந்தவொரு முயற்சியையும் தவெக அரசு முறியடிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. மத்திய அரசின் இந்த அழுத்தத்தை முதல்வர் விஜய் எப்படி எதிர்கொள்ளப்போகிறார் என்பதே தற்போதைய தமிழக அரசியல் களத்தின் மிக முக்கியமான கேள்வியாக மாறியுள்ளது. மக்கள் நலனை முன்னிறுத்தி அரசு எடுக்கும் முடிவுகளே தமிழகத்தின் எதிர்காலக் கல்விச் சூழலைத் தீர்மானிக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+