பராசக்தி படத்திற்கு சொன்ன சம்பளத்தை தரல.. கோர்ட்டுக்கு போன சுதா கொங்கரா.. 'இதயம் முரளி' ரிலீஸுக்கே வந்த சிக்கல்
சென்னை: தமிழ் சினிமாவில் கடந்த சில மாதங்களாக படங்களின் வசூல், ஓடிடி உரிமை, தயாரிப்பாளர்களின் நிதி பிரச்சனை என்று அடுத்தடுத்து பல விவகாரங்கள் பேசப்பட்டு வரும் நிலையில், இப்போது இயக்குநர் சுதா கொங்கரா எடுத்திருக்கும் ஒரு முடிவு கோலிவுட்டையே பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது.
சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்த 'பராசக்தி' திரைப்படத்தை இயக்கிய சுதா கொங்கரா, அந்த படத்தை தயாரித்த டான் பிக்சர்ஸ் (Dawn Pictures) நிறுவனம் தனக்கு வழங்க வேண்டிய ₹8.39 கோடி சம்பள பாக்கியை இன்னும் கொடுக்கவில்லை என்று கூறி சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியிருக்கிறார்.
சுதா கொங்கரா வழக்கு
சுதா கொங்கரா தாக்கல் செய்துள்ள மனுவில், பராசக்தி படத்திற்காக தனக்கு மொத்தமாக ₹15 கோடி சம்பளம் பேசப்பட்டது. ஜிஎஸ்டியுடன் சேர்த்து மொத்த தொகை ₹17.70 கோடியாகும். ஆனால் இதுவரை ₹9.31 கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இன்னும் ₹8.39 கோடி பாக்கியாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.
அதுமட்டுமல்ல, படத்திற்கான அனைத்து அறிவுசார் உரிமைகளையும் ஒப்பந்தப்படி தயாரிப்பு நிறுவனத்துக்கு ஒப்படைத்த பிறகும், சம்பள பாக்கியை மட்டும் வழங்காமல் இழுத்தடிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியிருக்கிறார்.

நீதிமன்ற உத்தரவு
இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து, ஜூலை 8 வரை 'பராசக்தி' படத்தின் சாட்டிலைட் வெளியீடு தொடர்பாக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதோடு விஷயம் முடிந்துவிடவில்லை. இதே தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ள 'இதயம் முரளி' திரைப்படம் ஜூலை 10-ஆம் தேதி வெளியாக உள்ளது. சம்பள பாக்கியை தராமல் அடுத்த படத்தை வெளியிட முயற்சிக்கிறார்கள் என்று கூறிய சுதா கொங்கரா, அந்த படத்தின் வெளியீட்டுக்கும் தடை விதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்திருக்கிறார்.
இதயம் முரளி பட பிரச்சனை
இதனால், 'இதயம் முரளி' திட்டமிட்ட தேதியில் வெளியாகுமா? இல்லை சட்ட சிக்கலில் சிக்குமா? என்ற கேள்வி இப்போது சினிமா வட்டாரத்தில் அதிகமாக பேசப்படுகிறது.
இந்த வழக்கில் தயாரிப்பு தரப்பு பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜூலை 8-ஆம் தேதி மீண்டும் விசாரணை நடைபெற உள்ளது. அந்த நாளில்தான் சாட்டிலைட் உரிமை, சம்பள பாக்கி, இதயம் முரளி ரிலீஸ் ஆகிய மூன்று விஷயங்களுக்கும் முக்கியமான திருப்பம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சம்பவம் இன்னொரு பெரிய விவாதத்தையும் கிளப்பியுள்ளது. சமீப காலமாக பெரிய நடிகர்கள் மட்டுமல்ல, இயக்குநர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், எழுத்தாளர்கள் என பலரும் சம்பள பாக்கி குறித்து வெளிப்படையாக பேச ஆரம்பித்திருக்கிறார்கள். படம் வெற்றி பெற்றதாக அறிவிப்புகள் வெளியானாலும், அதில் பணியாற்றிய அனைவருக்கும் அக்ரீமெண்ட் படி பணம் சரியான நேரத்தில் கிடைக்கிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
அதனால்தான் சுதா கொங்கராவின் இந்த சட்ட நடவடிக்கையை பலரும் சாதாரண சம்பள பிரச்சினையாக மட்டும் பார்க்கவில்லை. " அக்ரீமெண்ட் போட்டால் அதை மதிக்க வேண்டும். படம் ஹிட் ஆன பிறகும் சம்பளம் வாங்க நீதிமன்றம் போக வேண்டிய நிலை வரக்கூடாது" என்று சினிமா வட்டாரத்தில் பலரும் பேசத் தொடங்கியுள்ளனர்.
ஜூலை 8-ஆம் தேதி நடைபெறும் விசாரணையில் என்ன முடிவு வருகிறது என்பதையும், 'இதயம் முரளி' திட்டமிட்டபடி ஜூலை 10-ஆம் தேதி வெளியாகிறதா என்பதையும் கோலிவுட் மட்டுமல்ல, ரசிகர்களும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications
