மாநிலக் கல்லூரி மாணவர் தற்கொலை-புது பதட்டம்
சென்னை:
சென்னை மாநிலக் கல்லூரி மாணவர் ஆனந்த் தற்கொலை செய்து கொண்டதால் மாணவர்களிடையே பரபரப்பு நிலவுகிறது.
சென்னை மாநிலக் கல்லூரியைச் சேர்ந்த இரு மாணவர்களுக்கும், பச்சையப்பன் கல்லூரி மாணவர் ஒருவருக்கும் இடையே பேருந்தில் வந்தபோது தகராறு ஏற்பட்டது.
இதில் பச்சையப்பன் கல்லூரி மாணவரை மாநிலக் கல்லூரி மாணவர்கள் தாக்கினர். இதையடுத்து அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். இதைக் கண்டித்தும், கல்லூரியில் நீண்ட காலமாக நிலவி வரும் பல்வேறு பிரச்சினைகளை வலியுறுத்தியும் மாணவர்கள் சாலை மறியல் செய்தனர்.
இதையடுத்து போலீஸார் அவர்களை அடித்து விரட்டினர். பின்னர் மாணவர்கள், போலீஸார் மீது கற்களை வீசித் தாக்கினர், கல்லூரிக்குள்ளும் ரகளையில் இறங்கினர்.
இதையடுத்து போலீஸார் கல்லூரிக்குள் புகுந்து மாணவர்களை விரட்டியடித்தனர். கல்லூரி காலவரையின்றி மூடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மநிலக் கல்லூரியில் படித்து வந்த ஆனந்த் என்ற மாணவர் நேற்று தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் ராயப்பேட்டை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.
இந்த சம்பவத்தால் மாநிலக் கல்லூரி மாணவர்களிடையே புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மாணவர்கள் போராட்டம்:
இதற்கிடையே, மாநிலக் கல்லூரி மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடியைக் கண்டித்து சென்னையில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
நந்தனம் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் கல்லூரி முன்பு கூடி போராட்டம் நடத்தினர். கொடும்பாவியையும் அவர்கள் எரித்தனர்.
வட சென்னையில் உள்ள தியாகராஜர் கல்லூரி மாணவர்களும் வகுப்புகளைப் புறக்கணித்துப் போராட்டம் நடத்தினர்.
திருச்சி சட்டக் கல்லூரி, துவாக்குடி அரசு கல்லூரி, கோவை அரசு சட்டக் கல்லூரி, காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களும் வகுப்புகளைப் புறக்கணித்துப் போராட்டம் நடத்தினர்.












Click it and Unblock the Notifications