சென்னையில் இருந்து சிங்கப்பூர்.. "சுமார் ரூ.1,438 கோடியில்.." கடலுக்கு அடியில் அமையும் பிரம்மாண்டம்!
சிங்கப்பூர்: இந்தியா - சிங்கப்பூர் நாடுகள் பல்வேறு துறைகளில் இணைந்து செயல்பட்டு வருகின்றன. இதற்கிடையே டாடா நிறுவனம் இப்போது மிக முக்கியமான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடலுக்கு அடியில் சென்னையும் சிங்கப்பூரையும் இணைக்கும் வகையில் புதிய கேபிளை அமைக்கவுள்ளது. இதன் மூலம் இரு நாடுகளுக்குமே பல நன்மைகள் இருக்கும் எனச் சொல்லப்படுகிறது.
நமது நாட்டில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை முக்கியமான டெலிகாம் ஆப்ரேடர்களில் ஒன்றாக இருந்தது டாடா கம்யூனிகேஷன்ஸ். இவர்களின் டோகோமோ நிறுவனத்திற்குக் கணிசமான யூசர்கள் இருந்தனர். ஆனால், ஜியோ வந்த பிறகு டோகோமோ காணாமல் போனது. டெலிகாம் சந்தையில் இருந்து போனாலும் கூட டாடா கம்யூனிகேஷன்ஸ் வேறு சில பிஸ்னஸ்களை தொடர்ந்து செய்தே வருகிறது

டாடா
இதற்கிடையே டாடா நிறுவனம் மிக முக்கியமான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது இந்தியா- சிங்கப்பூர் இடையேயான ஃபைபர் கட்டமைப்பை விரிவுபடுத்த, கடலுக்கு அடியில் அமைக்கப்படும் கேபிள் உள்கட்டமைப்பில் புதிய முதலீடுகளை மேற்கொள்வதாக டாடா கம்யூனிகேஷன்ஸ் அறிவித்துள்ளது. ஆசியா முழுவதும் கிளவுட் சேவைகள், டேட்டா சென்டர் மற்றும் ஏஐ சேவைகளுக்கான டேட்டா தேவை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது. $152 மில்லியன் டாலர் அதாவது 1,438.77 கோடி ரூபாய் செலவில் இந்த திட்டம் அமையவுள்ளது.
இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ஏஐ தொழில்நுட்ப மையங்களாக இருக்கும் மும்பை மற்றும் சென்னை நகரங்களையும், ஆசியாவின் முக்கிய கிளவுட் மற்றும் ஏஐ தொழில்நுட்ப மையமாக இருக்கும் சிங்கப்பூரையும் இணைக்கும் வகையில் இந்த முதலீடுகள் உள்ளன. இதன் மூலம் இந்த முக்கிய நகரங்களுக்கு இடையேயான இணைய இணைப்பு மேலும் வலுவடையும்!
சென்னை டூ சிங்கப்பூர்
இந்த திட்டத்தின்படி மும்பை மற்றும் சிங்கப்பூர் இடையே கடலுக்கு அடியில் ஒரு புதிய கேபிள் அமைப்பை டாடா கம்யூனிகேஷன்ஸ் அமைக்கும். அத்துடன் கடலுக்கு அடியில் சென்னையைச் சிங்கப்பூருடன் இணைக்கும் புதிய கேபிள் திட்டத்திலும் டாடா நிறுவனம் முதலீடு செய்யவுள்ளது. சென்னை மற்றும் சிங்கப்பூரை இணைக்கும் இந்த அதிநவீன கேபிள் அமைப்பு வரும் 2029ம் ஆண்டு பயன்பாட்டிற்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையேயான இந்த கேபிள் நெட்வொர்க் கிளவுட் சேவைகள் மற்றும் ஹைப்பர்ஸ்கேலர் டேட்டா பரிமாற்றத்திற்கு முக்கியமானதாக இருக்கும். இது கிளவுட் மற்றும் டேட்டா சென்டர்களை வைத்திருக்கும் நிறுவனங்களுக்கு உதவிகரமாக இருக்கும். இந்த புதிய கேபிள் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையேயான இணைய வேகம் மிக வேகமாக இருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏன் முக்கியம்
கடலுக்கு அடியில் புதிதாக அமைக்கப்படவுள்ள இந்த கேபிள் அமைப்புகள் இந்தியாவில் ஏற்கனவே உள்ள நிலத்தடி ஃபைபர் நெட்வொர்க்குடன் நேரடியாக இணைக்கப்படும் என்று டாடா நிறுவனம் தெரிவித்துள்ளது. நாடு முழுக்க இப்போது பல புதிய டேட்டா சென்டர்கள் அமைக்கப்பட்டு வரும் நிலையில், இந்த கேபிள்கள் டேட்டா வேகத்தை மேம்படுத்தி, இணைப்பை உறுதி செய்யும்!
டாடா சாம்ராஜ்யம்
டாடா நிறுவனத்திடம் சர்வதேச அளவில் பல பகுதிகளில் இதுபோல கேபிள் நெட்வொர்க் இருக்கிறது. அந்த டாடா குளோபல் நெட்வொர்க் உடன் இந்த கேபிள் அமைப்பும் இணைக்கப்படும். மேலும், நிறுவனத்தின் ஐஇஸட்ஓ இணைப்பு சேவைகளுடனும் ஒருங்கிணைக்கப்படும்.
தற்போது டாடா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்திடம் சர்வதேச அளவில் சுமார் ஐந்து லட்சம் கிலோமீட்டருக்கும் அதிகமான கடலடி ஆப்டிகல் ஃபைபர் கட்டமைப்பையும், இரண்டு லட்சம் கிலோமீட்டருக்கும் அதிகமான நிலத்தடி ஃபைபர் கட்டமைப்பையும் இருப்பது குறிப்பிடத்தக்கது.














Click it and Unblock the Notifications