3வது அணியிலிருந்து கழற்றி விடப்பட்டார் ஜெ!!
டெல்லி:
3வது அணியான ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணியின் தலைவராக முலாயம் சிங் யாதவும், ஒருங்கிணைப்பாளராக சந்திரபாபு நாயுடுவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு எந்தப் பதவியும் வழங்கப்படவில்லை. இதன் மூலம் அவர் 3வது அணியிலிருந்து கழற்றி விடப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.
சந்திரபாபு நாயுடு, முலாயம் சிங் யாதவுடன் இணைந்து 3வது அணியை உருவாக்கிய முக்கிய தலைவர் ஜெயலலிதா. குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு முன்பாக இந்த கூட்டணி உருவானது. ஆனால் குடியரசுத் தலைவர் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பதில் அவர்களுக்குள் குழப்பம் ஏற்பட்டது.
இறுதியில் யாருக்கும் வாக்களிக்காமல் தேர்தலைப் புறக்கணிக்க தீர்மானித்தனர். ஆனால் யாரும் எதிர்பாராத வகையில், தேர்தல் நாளன்று, பாஜக ஆதரவு பெற்ற பைரான் சிங் ஷெகாவத்துக்கு அதிமுக எம்.பிக்கள் வாக்களித்து அதிர்ச்சியூட்டினர். இதனால் 3வது அணியில் இனியும் ஜெயலலிதா நீடிப்பாரா என்ற கேள்வி எழுந்தது.
அதற்கேற்ப மூன்றாவது அணியின் ஆலோசனைக் கூட்டத்தில் ஜெயலலிதா கலந்து கொள்ளவில்லை. 3வது அணி நடத்திய போராட்டத்திலும் அவர் பங்கேற்கவில்லை.
3வது அணித் தலைவர்களும் ஜெயலலிதாவின் போக்கை புரிந்து கொண்டு அவரைக் கண்டு கொள்ளவில்லை.
இந்த நிலையில் பாஜக பக்கம் ஜெயலலிதா படு தீவிரமாக நெருங்க ஆரம்பித்தார். பாஜக செய்தித் தொடர்பாளர் ரவி சங்கர் பிரசாத் சென்னை வந்து ஜெயலலிதாவை சந்தித்தார். அத்வானியும் சந்திப்பதாக இருந்தது. அந்த நேரம் பார்த்து திமுக அரசு கோடநாடு பிரச்சினையை தீவிரமாக குடைய தீர்மானித்ததால் சென்னையிலிருந்து கிளம்பி கோடநாட்டில் முகாமிட்டார் ஜெயலலிதா.
இந்த நிலையில் ராமர் பால விவகாரத்தில் ஜெயலலிதாவும், பாஜகவும் கிட்டத்தட்ட இணைந்து செயல்பட்டு வருகிறார்கள். இருவரும் சேர்ந்து செயல்படாதது ஒன்று மட்டுமே பாக்கி. எனவே ஜெயலலிதா பாஜகவுடன் கூட்டணி அமைப்பார் என்ற எதிர்பார்ப்பு வலுத்து வருகிறது.
இதை உறுதி செய்வது போல சுப்ரமணியம் சுவாமி ஜெயலலிதாவை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
இந்தச் சூழ்நிலையில் நேற்று ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணியின் நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டனர். அதில் தலைவராக முலாயம் சிங் யாதவும், ஒருங்கிணைப்பாளராக சந்திரபாபு நாயுடுவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஜெயலலிதாவுக்கு எந்தப் பொறுப்பும் தரப்படவில்லை. இதன் மூலம் முறைப்படி ஜெயலலிதாவை கூட்டணியிலிருந்து 3வது அணி கழற்றி விட்டுள்ளதாக கருதப்படுகிறது.
டெல்லியில் உள்ள ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் செளதாலா வீட்டில் 3வது அணித் தலைவர்கள் நேற்று கூடி ஆலோசனை நடத்தினர். இந்தக் கூட்டத்தில் தலைவர், ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ேடார் தேர்வு செய்யப்பட்டனர்.
3வது அணியின் செய்தித் தொடர்பாளராக அமர்சிங் செயல்படுவார். தெலுங்கு தேச தலைவர் எர்ரன் நாயுடு, 3வது அணியின் செயலக தலைவராக செயல்படுவார்.
பின்னர் தலைவர்கள் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்ேபாது 3வது அணியில் அதிமுக நீடிக்கிறதா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, செளதாலா பதிலளிக்கையில், ஜெயலலிதாவைத் தொடர்பு கொள்ள முயற்சித்தோம். முடியவில்லை. தொடர்ந்து முயற்சித்து வருகிறோம். இன்றைய கூட்டத்திற்கு வர வேண்டும் என்று நான் அழைப்பு விடுத்திருந்தேன் என்றார்.
முலாயம் சிங் பதிலளிக்கையில், அதிமுக வரவில்லை என்ன செய்வது என்று மறைமுகமாக, கூட்டணியில் அதிமுக இல்லை என்பதை வெளிப்படுத்தினார்.
இடதுசாரிகளுடன் இணைந்து செயல்பட முடிவு:
இதற்கிடையே அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக இடதுசாரிகளுடன் இணைந்து 3வது அணி செயல்படும் என சந்திரபாபு நாயுடுவும், முலாயம் சிங் யாதவும் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக நேற்று காலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத், முலாயம் சிங் யாதவ், சந்திரபாபு நாயுடுவை சந்தித்துப் பேசினார் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications