ராணுவ மோதலில் 23 விடுதலைப் புலிகள் பலி
கொழும்பு: வன்னிப் பகுதியில் நடந்த சண்டைகளில் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த 23 பேரும், ராணுவ வீரர் ஒருவரும் கொல்லப்பட்டதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பாதுகாப்புத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், வன்னிப் பகுதியில் உள்ள நாவல்குளம், குடுருவிட்டான்குளம், நரிக்குளம், விளாத்திக்குளம், உமயசரசகுளம் ஆகிய பகுதிகளில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே கடும் சண்டை நடந்தது.
இந்த மோதல்களில் விடுதலைப் புலிகள் தரப்பில் 23 பேர் கொல்லப்பட்டதாக தெரிய வந்துள்ளது. இந்த சண்டையில் ராணுவத் தரப்பில் ஒரு வீரர் பலியானார் என்று தெரிவிக்கப்பட்டது.
ஓடிப் போன வீரர்களுக்கு அழைப்பு:
இதற்கிடையே, விடுதலைப்புலிகளின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் ராணுவத்திலிருந்து ஓடிய ராணுவ வீரர்களுக்கு பொது மன்னிப்பு கொடுத்து அவர்களை மீண்டும் ராணுவத்தில் சேர வருமாறு இலங்கை அரசு அழைப்பு விடுத்துள்ளது.
விடுதலைப்புலிகளின் தாக்குதல்களை சமாளிக்க முடியாமல் இதுவரை 1,000க்கும் மேற்பட்ட இலங்கை ராணுவ வீரர்கள் உயிருக்கு பயந்து தப்பி ஓடிவிட்டனர்.
சில தினங்களுக்கு முன்பு விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன் உட்பட 6 பேரை சிங்கள ராணுவம் விமானம் மூலம் குண்டு வீசி கொன்றது.
இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற விடுதலைப்புலிகள் இதற்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக, கடந்த 3 தினங்களுக்கு முன்னர் நடத்திய அதிரடி தாக்குதலில் ராணுவத்தை சேர்ந்த 80 பேரை ஒரே நேரத்தில் கொன்றனர்.
விடுதலைப்புலிகளின் இந்த உக்கிர தாக்குதலை கண்டு அதிர்ந்த ராணுவம், தற்போது ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து ராணுவ செய்தி தொடர்பாளர் உதய நானயகரா கூறுகையில், கடந்த 2004ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதிக்குப் பின்னர் ராணுவத்தை விட்டு ஓடிப்போனவர்கள், அதிகாரிகளிடம் முறையாக விடுமுறைக்கான அனுமதி பெறாமல் சென்று ராணுவத்துக்கு இன்னமும் திரும்பாமல் இருப்பவர்கள், பயிற்சி காலத்தின் போது முகாம்களை விட்டு ஓடிப்போனவர்கள் அனைவரும் உடனடியாக திரும்பி வரும்படி கேட்டுக் கொள்கிறேன்.
ராணுவத்திற்கு திரும்பும் அனைவரும் பொதுமன்னிப்பு வழங்கப்படும். எந்தவித தண்டனையும் அளிக்கப்பட மாட்டாது. ஆனால் அவர்கள் இந்த 3 ஆண்டு காலத்தில் எந்தவித குற்றச் செயல்களிலும் ஈடுபட்டிருக்கக் கூடாது. அப்படி ஏதாவது குற்றச் செயல்களில் அவர்கள் ஈடுபட்டிருப்பது தெரியவந்தால் அவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டார்கள்.
இதற்காக அவர்களின் ஆவணங்கள் போலீசாரின் ஆய்வுக்கு அனுப்பப்படும். அறிக்கையில் அவர்கள் எந்தவித குற்ற நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்று தெரிந்த பின்னர்தான் அவர்கள் முறைப்படி சம்பந்தப்பட்ட படைப் பிரிவில் அல்லது பயிற்சி முகாமில் சேர்த்து கொள்ளப்படுவார்கள்.
அவர்கள் வெளியில் சென்றபோது எந்த பதவியில் இருந்தார்களோ அதே பதவியில் தொடர்ந்து நீடிக்கலாம். அவர்கள் தங்களது அடையாள அட்டையை சேரும்போது சமர்ப்பிக்க வேண்டும். வருகின்ற 12ம் தேதி முதல் 25ம் தேதிக்குள் அவர்கள் ராணுவத்துக்கு திரும்பி வர வேண்டும். அதன் பின்னர் வந்தால் சேர்த்து கொள்ள மாட்டார்கள். திரும்பி வராதவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு கடும் தண்டனை கொடுக்கப்படும் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications