துபாய் போலீஸின் மின்னல் வேகம்
துபாய்: துபாயில், ஏடிஎம் மையத்தில் உள்ள எந்திரத்தில் பணத்தை நிரப்புவதற்காகக் கொண்டு செல்லப்பட்ட பத்து லட்சம் திர்ஹாம் பணத்தைத் திருடிய 2 பேரை 6 மணி நேரத்தில் துபாய் போலீஸார் வளைத்துப் பிடித்துக் கைது செய்தனர்.
சம்பந்தப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். கருவியில் பணம் தீர்ந்து விட்டதால் அந்த வங்கியின் ஊழியர்கள் பத்து லட்சம் திர்ஹாம் பணத்துடன் ஏடிஎம் மையத்திற்குச் சென்றனர்.
அப்போது இரண்டு பேர் வங்கி ஊழியர்களிடமிருந்து பணத்தைப் பறித்துக் கொண்டு ஓடினர். இதையடுத்து மின்னல் வேகத்தில் செயல்பட்ட துபாய் போலீஸார் அந்த இருவரையும் 6 மணி நேரத்தில் வளைத்துப் பிடித்து விட்டனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் கனடா பாஸ்போர்ட் வைத்திருந்தனர். ஓமன் நாட்டு காவல்துறை உதவியுடன் கொள்ளையர்களை கைது செய்ததாக துபாய் காவல்துறை தெரிவித்துள்ளது.
துபாயில் பூகோள கிராமம்:
துபாயில் பூகோள கிராமம் ( Global Village ) டிசம்பர் 13ம் தேதி திறக்கப்பட்டது. உலகெங்கிலும் இருந்து துபாய் வருகை தரும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது இந்த பூகோள கிராமம்.
1996ம் ஆண்டு சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்டு ஐந்து இலட்சம் பார்வையாளர்களைக் கவர்ந்த இந்த கிராமம் இன்று 50 லட்சம் பார்வையாளர்களைக் கவர்ந்து வருகிறது.
இதில் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், வளைகுடா நாடுகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தங்களது நாடுகளின் சிறப்புகளை விளக்கும் வண்ணம் அரங்குகளை அமைத்துள்ளன.
பொதுமக்கள் தங்களது நேரத்தை மகிழ்வுடன் போக்கிடும் வண்ணம் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், பொழுது போக்கு அம்சங்களைக் கொண்டதாக இந்த கிராமம் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நுழைவுக் கட்டணமாக ஐந்து திர்ஹம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications