குறை சொல்வது சரியல்ல-விஜய்காந்த்துக்கு கருணாநிதி பதில்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை
கடந்த 2006ம் ஆண்டு பொறுப்பேற்ற திமுக அரசு சார்பில் கடந்த 2 வருட காலமாக கலர் டிவி இல்லாத குடும்பங்களுக்கு இலவசமாக அவற்றை தொடர்ந்து வழங்கி வருகிறோம்.
ஆனால் இந்த திட்டத்தைப் பற்றி ஏற்கனவே ஆட்சியிலே இருந்தவர்களும், புதிதாக ஆட்சிக்கு வரத் துடிப்பவர்களும் தொடர்ந்து பல குற்றச்சாட்டுகளைக் கூறி வருகிறார்கள். அவர்களுக்கு இந்த திட்டத்தைப் பற்றி விளக்கமளிக்க வேண்டியது அரசின் கடமையாகும்.
இந்த திட்டத்திற்காக சட்டமன்ற கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழு, பயனாளிகளை தேர்வு செய்ய குழுக்கள், டிவி குறியீடுகளை மேற்கொள்ள நிபுணர் குழு ஆகியவை அமைக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, பயனாளிகளைக் கண்டறிய 2006ம் ஆண்டு ஜூன் 20ம் தேதியன்று ஒவ்வொரு ஊராட்சியிலும் ஊராட்சி மன்றத் தலைவர், கிராம நிர்வாக அலுவலர், பள்ளித் தலைமை ஆசிரியர், மக்கள் நலப் பணியாளர் ஆகியோர் அடங்கிய குழு அமைக்க ஆணையிடப்பட்டது.
மாநகராட்சி, நகராட்சி, சிறப்பு ஊராட்சி ஆகியவற்றில் வார்டு உறுப்பினரைத் தலைவராகவும், அப்பகுதியைச் சேர்ந்த பள்ளி தலைமை ஆசிரியர், வரி வசூலிப்பவர் ஆகியோரை உறுப்பினராகவும் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
எனது தலைமையில் மாநில அளவில் சட்டமன்ற கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய கலர் டிவி வழங்கும் குழு 2006ம் ஆண்டு ஜூன் 22ம் தேதி அமைக்கப்பட்டது. அதிமுக, மதிமுக கட்சி உறுப்பினர்கள் அந்த குழுவில் இடம் பெற மறுத்துவிட்டனர்.
இப்போது இந்த திட்டத்திற்கு பல எதிர்ப்புகளைக் காட்டிவரும் தேமுதிக தலைவர் விஜயகாந்த், கட்சிப் பணிகள் காரணமாக சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருப்பதால் அக்குழுவில் இடம்பெற இயலாது என அப்போது தெரிவித்தார்.
இவர் அந்தக் குழுவில் இடம்பெற ஒப்புக் கொண்டிருந்தால் தற்போது அந்த எதிர்ப்புகளை தெரிவிக்க வேண்டிய சிரமம் அவருக்கு வந்திருக்காது.
சட்டமன்ற கட்சிப் பிரதிநிதிகள் அடங்கிய குழுவின் முதல் கூட்டம் கடந்த வருடம் ஜூன் 27ம் தேதியில் நடந்தது. இதற்காக முதலில் 30,000 கலர் டிவிக்கள் வாங்க, இந்தியளவில் டெண்டர் கோரி முடிவு செய்வது என்றும் 2ம் கட்டமாக வழங்குவதற்கு உலகளாவிய டெண்டர் கோரி பெறுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
30,000 கலர் டிவிகளை கொள்முதல் செய்ய எல்காட் நிறுவனம் தேசிய அளவிலான ஒப்பந்தப் புள்ளிகளை கடந்த ஜூலை 27ம் தேதியன்று பெற்று ஆய்வு செய்யப்பட்டன. சட்டமன்ற கட்சி பிரதிநிதிகள் குழுவின் 2ம் கூட்டம் என் தலைமையில் 2007 ஜூலை 27ல் நடந்தது.
டெல்லியில் உள்ள வீடியோகான இண்டஸ்ட்ரீஸ் ரூ.2,965 விலையில் 15,000 கலர் டிவிகளையும், மும்பையில் உள்ள கிச்சன் அப்ளையன்சஸ் நிறுவனம், ரூ.2,965 விலையில் 7,500 கலர் டிவிகளையும், நொய்டாவில் உள்ள டிக்சன் நிறுவனம் 7,500 டிவிகளையும் குறிப்பிட்ட காலத்திற்குள் வழங்க முன்வந்தன. இந்த முடிவுகளை சட்டமன்ற பிரதிநிதிகள் குழு ஒருமனதாக ஏற்றுக் கொண்டது.
இலவச கலர் டிவியுடன் ஒற்றை விளக்கு எரிக்க இலவச மின்சாரம் பெறும் குடிசை வாழ் மக்களுக்கு மின்சார கட்டணமும் இலவசமாக அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
அண்ணா பிறந்த நாளாகிய கடந்த வருடம் செப்டம்பர் 15ம் தேதியன்று காஞ்சிபுரம் படப்பை கிராமத்தில் இந்த திட்டத்தை துவக்கி வைத்தேன். அப்போது கரசங்கால் பெரியார் சமத்துவபுரம் குடியிருப்பில் வாழும் 100 குடும்பங்களுக்கும் இலவச கலர் டிவி வழங்கப்பட்டன. இதே போன்று அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சர்கள் இலவச கலர் டிவியை வழங்கினர்.
2ம் கட்டமாக ரூ.750 கோடியில் வழங்கிட என் தலைமையில் கடந்த வருடம் நவம்பர் 22ம் தேதியன்று சட்டமன்ற கட்சி பிரதிநிதிகள் கூட்டம் நடந்தது.
அதில் 25 லட்சம் கலர் டிவி கொள்முதல் செய்ய உலகளாவிய 9 நிறுவனங்களிடமிருந்து வரப்பெற்ற விலைப் புள்ளிகள் திறக்கப்பட்டன. குறைந்த விலைப் புள்ளியை குறிப்பிட்ட டிக்சன் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
குறைந்தபட்ச விலை ரூ.2,740 எனத் தெரிவித்த டிக்சன் டெக்னாலஜிஸ் நிறுவனத்திடமிருந்து 9 லட்சம் டி.வி. பெட்டிகளும், ஏர்விஷன் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து 2 லட்சம் டி.வி. பெட்டிகளும் கொள்முதல் செய்வதென்றும் அந்த நிறுவனம் 3 மாத காலத்திற்குள் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் பட்சத்தில் கூடுதலாக 3 லட்சம் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை கொள்முதல் செய்வதென்றும், எல்.பி. எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திடமிருந்து 2 லட்சம் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளைக் கொள்முதல் செய்வதென்றும், வீடியோகான் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்திடமிருந்து 6 லட்சம், கிச்சன் அப்ளையன்சஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்திடமிருந்து 3 லட்சம் என கலர் டி.வி. பெட்டிகளை கொள்முதல் செய்வதென்றும் ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி, இரண்டாம் கட்டமாகத் தமிழகம் முழுவதும் ரூ.885 கோடி செலவில் கொள்முதலாகும் 25 லட்சம் கலர் டி.வி. பெட்டிகளை பொதுமக்களுக்கு வழங்கும் பணிகள் கடந்த பிப்ரவரி 15ம் தேதியன்று திருவள்ளூர் மாவட்டம் பம்மதுகுளம் கிராமத்தில் என்னால் தொடங்கி வைக்கப்பட்டது.
தமிழகம் முழுவதிலுமுள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும், ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் 10,000 கலர் டி.வி. பெட்டிகள் வழங்கத் திட்டமிடப்பட்டு, கடந்த 13ம் தேதி வரை 24 லட்சத்து 48 ஆயிரத்து 698 இலவச கலர் டி.வி. பெட்டிகள் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.
அடுத்த 2007-08ம் ஆண்டுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ரூ.750 கோடி மூலம், மேலும் 30 லட்சம் இலவச கலர் டி.வி. பெட்டிகளை கொள்முதல் செய்வதற்காக சர்வதேச அளவில் விலைப்புள்ளிகள் கோரப்பட்டு, வரப்பெற்ற 22 ஒப்பந்தப் புள்ளிகளும் கடந்த அக்டோபர் 25ம் தேதியன்று முறைப்படி பத்திரிகையாளர்கள் முன்னிலையிலும், குழுவினர் முன்னிலையிலும் ஒளிவுமறைவின்றி வெளிப்படையாகத் திறக்கப்பட்டன.
இந்த 22 நிறுவனங்களில், தொழில் மதிப்பீட்டில் ஒப்பந்தப்புள்ளி முழுவதும் நிறைவு செய்த 17 நிறுவனங்கள் அடுத்த கட்டமான விலைப்புள்ளிகளைத் திறக்கும் கட்டத்திற்குத் தகுதி பெற்றன. ஒப்பந்தப்புள்ளி நிபந்தனைகளை நிறைவு செய்யாத நிறுவனங்கள் நிராகரிக்கப்பட்டன.
கடந்த செப்டம்பர் 18ம் தேதியன்று என்னுடைய தலைமையில், சட்டமன்ற பிரதிநிதிகள் குழு தலைமைச் செயலகத்தில் கூடியது. 17 ஒப்பந்ததாரர்களின் விலைப்புள்ளிகள் திறக்கப்பட்டதில், குறைந்தபட்ச விலைப்புள்ளியான ரூ.2,197-ஐ அளித்த வீடியோகான் நிறுவனத்தின் பிரதிநிதிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, டி.வி. பெட்டிக்கான இறுதி விலையை நிர்ணயம் செய்தபின், மற்ற ஒப்பந்ததாரர்களிடம் இறுதி விலைப்புள்ளிக்கு டி.வி. பெட்டிகளை வழங்க ஒப்புதல் பெற்று எந்தெந்த நிறுவனங்களிடமிருந்து எவ்வளவு கொள்முதல் செய்யலாம் என்பது குறித்து செப்டம்பர் 19ம் தேதியன்று கூட்டம் நடத்தி அதில் முடிவு செய்யலாம் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி, செப்டம்பர் 19ம் தேதியன்று அன்று நடைபெற்ற கூட்டத்தில் இவ்வாண்டு கலர் டி.வி. பெட்டிக்காகப் பெறப்பட்ட விலைப்புள்ளிகள் கடந்த ஆண்டைவிட குறைவாக இருந்ததால் அரசுக்கு ரூ.162.90 கோடி சேமிப்பு ஏற்பட்டது. அந்த சேமிப்பையும் பயன்படுத்தி மொத்தம் 34 லட்சத்து 25 ஆயிரம் கலர் டி.வி. பெட்டிகளை ஒன்று ரூ.2,197 விலையில் கொள்முதல் செய்திட ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.
அந்த முடிவின்படி, வீடியோகான் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து 20 லட்சம், கிச்சன் அப்ளையன்சஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்திடமிருந்து 3 லட்சத்து 25 ஆயிரம், டிக்சன் டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து 3 லட்சத்து 25 ஆயிரம், ஏர்விஷன் இந்தியா (பி) லிமிடெட் நிறுவனத்திடமிருந்து 3 லட்சத்து 25 ஆயிரம்,
எல்.பி. எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து 1 லட்சம், டிரென்ட் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திடமிருந்து 50,000, ஜீனஸ் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து 50,000, பெல்டெக் இந்தியா (பி) லிமிடெட் நிறுவனத்திடமிருந்து 50,000, பாரதி எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து 50,000,
எம்.ஐ.சி. எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திடமிருந்து 50,000, மல்கோத்ரா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திடமிருந்து 50,000, ஈஸ்ட் இந்தியா பேக்கேஜிங் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து 50,000 என்ற எண்ணிக்கையில் மொத்தம் 34 லட்சத்து 25 ஆயிரம் கலர் டி.வி. பெட்டிகளை கொள்முதல் செய்வதற்கு ஆணைகள் வழங்கப்பட்டு கொள்முதல் செய்யும் பணி நடைபெறுகிறது.
இத்தகைய தொடர்ச்சியான நடவடிக்கைகள் மூலம் தமிழகத்தில் கலர் டி.வி. பெட்டி இல்லாத எல்லாக் குடும்பங்களுக்கும், கலர் டி.வி. பெட்டிகள் இலவசமாக வழங்கும் பணிகள் முழுமையாக நிறைவேற்றப்படும்.
இவ்வாறு வழங்கப்படும் டி.வி. பெட்டிகளை சிலர் விற்றுவிடுவதாக புகார்கள் வந்ததின் பேரில் அதுபற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்க காவல்துறை பணிக்கப்பட்டு, அவர்களும் அவ்வாறே தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இது குறித்து தமிழகம் முழுவதும் சோதனை நடத்தும்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு டி.ஜி.பி. ராஜேந்திரன் உத்தரவிட்டார்.
சென்னையில், போலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரன் உத்தரவுப்படி, இணை கமிஷனர்கள் ரவி, பாலசுப்பிரமணியன் ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் வண்ணாரப்பேட்டை, எழும்பூர், சிந்தாதிரிப்பேட்டை ஆகிய இடங்களில் அதிரடி சோதனைகள் நடத்தினர். வண்ணாரப்பேட்டை, அசோக்நகர், செரியன் நகர் ஆகிய இடங்களில் 6 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 7 இலவச கலர் டி.வி. பெட்டிகளும், ஒரு ஆம்னி வேனும் பறிமுதல் செய்யப்பட்டன.
எழும்பூரை சேர்ந்த இருவரிடமிருந்து 4 கலர் டி.வி. பெட்டிகளும், ஆட்டோ ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டன. ரிச்சி தெருவில் சிலரிடமிருந்து 9 இலவச கலர் டி.வி. பெட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னை போலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரன், பொது மக்களிடமிருந்து அவர்களை ஏமாற்றி ஆசை காட்டி, இலவச கலர் டி.வி. பெட்டிகளை யாராவது வாங்கினால் அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுப்பது பற்றி ஆலோசிக்கப்படுகிறது என்று தெரிவித்திருக்கிறார்.
லட்சக்கணக்கான இலவச கலர் டி.வி. பெட்டிகளை ஏழைகளின் நலன் கருதி அரசு வாங்கி, இவ்வாறு குழுக்களை அமைத்து விநியோகிக்கும் நிலையில் ஒன்றிரண்டு இடங்களில் தவறுகள் ஏற்படுவதை எடுத்துக்காட்டி திட்டமே சரியில்லை என்று எடுத்து வைக்கும் வாதம் சரியானதல்ல என்பதை எடுத்து கூறுவதற்காகத்தான் இத்தனை விளக்கங்களையும் தெரிவித்திருக்கின்றேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.
-
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி












Click it and Unblock the Notifications