பஸ்சில் தவித்த 3 வயது சிறுவன் தாயிடம் ஒப்படைப்பு
நாகர்கோவில்: பஸ்சில் தவித்த 3 வயது சிறுவன் வெகுநேர போராட்டத்திற்கு பின்னர் அவனது தாயிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டான்.
மதுரையில் இருந்து மார்த்தாண்டம் செல்லும் அரசு போக்குவரத்து கழக பஸ் காலை 6.15 மணிக்கு நாகர்கோவில் வந்தது. அப்போது 3 வயது சிறுவன் ஒருவன் பரிதவித்துக் கொண்டிருந்தான். பெயர், ஊர், முகவரியை கூட அவனால் சொல்ல முடியவில்லை. கண்டக்டர் விசாரித்ததும் அழ ஆரம்பித்து விட்டான்.
பஸ்சில் சிறுவன் பரிதவிப்பது பற்றி பேருந்து நிலைய புறக்காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சிறுவனை மீட்டு அவனது தாய், தந்தை யார் என்பது பற்றி விசாரணை நடத்தினர்.
அதே சமயம் மார்த்தாண்டம் பஸ் நிலையத்தில் பேச்சிபாறை காந்தி நகரை சேர்ந்த வசந்தா குழந்தையை பஸ்சில் தவற விட்டதாக கூறி கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தார். விசாரித்ததில் நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் போலீசார் மீட்ட சிறுவனைத்தான் வசந்தா தவற விட்டது தெரிய வந்தது.
அந்த சிறுவனை வசந்தா தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளார். திருச்சியில் உள்ள தனது மகள் வீட்டுக்கு சிறுவனை அழைத்து சென்றுவிட்டு ஊர் திரும்பியுள்ளார். நாகர்கோவில் பஸ் நிலையம் வந்ததும் கழிவறைக்கு செல்ல வசந்தா மட்டும் தனியாக இறங்கியுள்ளார்.
அந்த நேரத்தில் பஸ்சை டிரைவர் இன்னொரு இடத்தில் கொண்டு போய் நிறுத்தி விட்டார். கழிவறைக்கு சென்றுவிட்டு திரும்பிய வசந்தா, பஸ் சென்றுவிட்டது என எண்ணி, தனது குழந்தையுடன் சென்ற பஸ்சை பிடிப்பதற்காக உடனே வேறொரு பஸ்சில் ஏறி மார்த்தாண்டம் சென்றுள்ளார்.
ஆனால் குழந்தை இருந்த பஸ் புறப்படாததால் குழந்தையை போலீசார் மீட்டு வைத்திருந்தனர். பின்பு நாகர்கோவில் வந்த வசந்தாவிடம் போலீசார் தீவிரமாக விசாரித்து பின்னர் சிறுவனை ஒப்படைத்தனர்.












Click it and Unblock the Notifications