பள்ளி மாணவர்கள் நலத்திட்ட உதவிகள் பெற ஜாதி விவரங்களை கல்வித்துறை இணையதளத்தில் பதிவு செய்ய உத்தரவு!
சென்னை: அரசுப் பள்ளி மாணவர்கள் நலத்திட்ட உதவிகளைப் பெற ஜாதி சான்றிதழ், மாணவர்களின் ஆதார் எண், வங்கிக் கணக்கு எண் ஆகிய விவரங்களை கல்வித்துறை இணையதளத்தில் பதிவு செய்ய அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
மாணவர்கள் கல்வி உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளைப் பெற மாணவர்களின் ஜாதி விவரங்களை கல்வித்துறை இணையதளத்தில் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் மட்டுமின்றி, தனியார் பள்ளிகளிலும் பயிலும் அனைத்து மாணவர்களின் சமூகப் பிரிவு மற்றும் சாதி சான்றிதழ் விவரங்களை கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு இணையதளத்தில் துல்லியமாகப் பதிவேற்றம் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
மாணவர்கள் சேர்க்கையின் போது சமர்ப்பித்த சாதிச் சான்றிதழ்களைக் கொண்டு, இந்த விவரங்கள் ஆன்லைனில் உள்ளீடு செய்யப்பட வேண்டும். தவறுகள் ஏதேனும் இருந்தால், அவற்றை உடனடியாகத் திருத்தம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சாதி ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்கவேண்டும் என்பதே சமத்துவ சமூகத்தை காணத் துடிக்கும் அனைவரின் விருப்பமும். பள்ளிகளிலேயே மாணவர்கள் மத்தியில் சாதி ஏற்றத்தாழ்வுகளும், மோதல்களும் நிலவும் சூழல் தமிழத்தில் உள்ளது. இதனைக் களைய அரசும், ஆசிரியர்களும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பள்ளி பெயர்களில் இருந்து சாதி பெயர்கள், விடுதி பெயர்களில் இருந்து சாதி பெயர்கள் அகற்றப்பட்டுள்ளன. எந்த சூழலிலும் மாணவர்களை நேரடியாகவோ, மறைமுகமாகவோ சாதி பெயர்களை குறிப்பிட்டு ஆசிரியர்கள் அழைக்கவோ, பேசவோ கூடாது என்ற கண்டிப்பான உத்தரவுகள் உள்ளன.
சாதியை அடையாளப்படுத்தும் வகையில் கைகளில் கயிறுகள், நெற்றியில் பொட்டு ஆகியவை அணியக் கூடாது. அவர்கள் பள்ளிக்கு வரும் சைக்கிள்களில் சாதி குறியீடுகள் இருக்கக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
இப்படியான சூழலில், அரசுப் பள்ளி மாணவர்கள் நலத்திட்ட உதவிகளைப் பெற ஜாதி சான்றிதழ் உள்ளிட்ட விவரங்களை கட்டாயம் கல்வித்துறை இணையதளத்தில் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் ஸ்மார்ட் அடையாள அட்டைகளில் சாதி விவரங்கள் இடம்பெறப் போவதாகச் தகவல்கள் வெளியாகி சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், "மாணவர்களின் அடையாள அட்டைகளில் எக்காரணம் கொண்டும் சாதி விவரங்கள் அச்சிடப்படாது. அது மாணவர்களிடையே பாகுபாட்டை உருவாக்கும்" என்று தமிழக அரசு திட்டவட்டமாக மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications