காரைக்குடியில் புதிய மின் இணைப்புக்கு லஞ்சம்.. கையும் களவுமாக சிக்கிய அதிகாரிகள்
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள மணக்குடி மின் பகிர்மான அலுவலகத்தில் புதிய வீட்டிற்கான மின் இணைப்பு வகையை மாற்றித் தருவதற்காக லஞ்சம் வாங்கியதாக இளநிலை பொறியாளர், லைன்மேன் ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள மணக்குடி மின் பகிர்மான அலுவலகத்தில் இளநிலை பொறியாளராக 48 வயதாகும் சையது முகமது பாஷா மற்றும் 36 வயதாகும் லைன்மேன் ஆக பஞ்சு ஆகியோர், வேலை பார்த்து வருகின்றனர். இவர்களில் லைன்மேன் பஞ்சு, தற்காலிக பணியாளர். புதிய வீட்டிற்கான மின் இணைப்பு வகையை மாற்றித் தருவதற்காக இவர்கள் இருவரும் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து பாதிக்கப்பட்ட நபர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி ராமச்சந்திரன் தலைமையிலான அதிகாரிகள் இருவரையும் மறைமுகமாக கண்காணித்தனர். இன்று மின் நுகர்வோர் ஒருவரிடமிருந்து ரூ.500 லஞ்சம் பெற்றதைக் கண்டு, இருவரையும் போலீஸார் அதிரடியாக கைது செய்தனர். இருவரிடமும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள்.
இதனிடையே விருதுநகர் மாவட்டத்தில் தாசில்தார் ஒருவரும் லஞ்ச வழக்கில் சிக்கியுள்ளார். விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் ஆண்டாள் தாசில்தாராக பணியாற்றி வருகிறார். இப்பகுதியில் கல்குவாரி உரிமம் புதுப்பித்தல், பட்டாசு கடைகளில் உரிமத்தை புதுப்பித்தல், பட்டா மாறுதல், சான்றிதழ்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு வருவாய்த்துறை பணிகளுக்கு முறையாகப் பணம் கைமாறுவதாக லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
அதனைத்தொடர்ந்து நேற்று லஞ்ச ஒழிப்புத்துறை துணைக்கண்காணிப்பாளர் பூமிநாதன் தலைமையில், இன்ஸ்பெக்டர் ஜாஸ்மின் மும்தாஜ் உள்ளிட்ட 6 பேர் கொண்ட குழுவினர் தாசில்தார் அலுவலகத்திற்குள் நுழைந்தனர். தாசில்தார் ஆண்டாள், துணைத் தாசில்தார்கள், வருவாய் அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். 4 மணி நேரம் சோதனை நடந்தது.
அப்போது எதிர்கோட்டையைச் சேர்ந்தவர்கள் சரவணகுமார் பட்டாசு கடை உரிமத்திற்காகக் கொண்டு வந்திருந்த ரூ. 90 ஆயிரம், பட்டா மாறுதலுக்காக வந்திருந்த மணிகண்டனிடம் ரூ. 21,500, பட்டாசு கடை உரிமத்தைப் புதுப்பிப்பதற்காக பாலகிருஷ்ணனிடமிருந்து ரூ. 14 ஆயிரம், வெம்பக்கோட்டை வருவாய் அலுவலர் நாகராஜிடம் ரூ. 6 ஆயிரம், கங்கரகோட்டை கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வியிடம் ரூ. 3 ஆயிரம் உட்பட ரூ. 1 லட்சத்து 40 ஆயிரத்து 500-ஐ லஞ்ச ஒழிப்புத்துறையினர் பறிமுதல் செய்தனர்.


Click it and Unblock the Notifications
