பிஸ்லெரி மட்டுமல்ல.. சிக்கும் பிரபல பிராண்டுகள்? எல்லா வாட்டர் பாட்டில்களையும் சோதனை செய்யும் FSSAI
டெல்லி: பிஸ்லெரி குடிநீர் தரம் தொடர்பான சர்ச்சை பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து பாட்டில் குடிநீர் பிராண்டுகளையும் உணவு பாதுகாப்பு ஆணையமான FSSAI தனது கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளது. பல்வேறு நிறுவனங்களின் குடிநீர் பாட்டில்களில் இருந்து ரேண்டமாக மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதன் முடிவுகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் பொதுமக்கள் வெளியே செல்லும்போது சுகாதாரமான குடிநீருக்காக பிளாஸ்டிக் பாட்டில்களையே நம்புகிறார்கள். பிளாஸ்டிக் ஆபத்தானது என்றாலும் கூட சுத்தமான குடிநீரை பெற இதுவே ஒரே வழியாக இருந்து வருகிறது. இந்த சூழலில் தான் சமீபத்தில் பிஸ்லெரி தண்ணீரில் நடத்தப்பட்ட ஆய்வு குறித்த ரிப்போர்ட் வெளியானது.

பிஸ்லெரி விவகாரம்
பிஸ்லெரி நிறுவனத்தின் குடிநீர் மாதிரியை ஆய்வு செய்ததில் அது பாதுகாப்பற்றது என கண்டறியப்பட்டதாகவும் இகையடுத்து அந்த நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடர FSSAI அனுமதி அளித்தது. பிஸ்லெரி வளாகத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட குடிநீர் மாதிரியில், அனுமதிக்கப்பட்ட அளவைவிட புரோமேட் அதிகமாக இருந்ததாகவும் இது உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பாதுகாப்பற்றது என கூறப்பட்டு இருந்தது.
இருப்பினும், இதை எதிர்த்து பிஸ்லெரி மேல்முறையீடு செய்தது. இதையடுத்து அந்த மாதிரி மேல்முறையீட்டு ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டது. அங்கும் அது பாதுகாப்பற்றது என அறிவிக்கப்பட்டதுடன், பாலிநியூக்ளியர் அரோமேட்டிக் ஹைட்ரோகார்பன்கள் இருப்பதும் கண்டறியப்பட்டதாக FSSAI தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை பிஸ்லெரி மறுத்துள்ளது.
விளக்கம்
கடந்த 2025 செப்டம்பர் மாதம் கோவாவில் உள்ள ஒரு குறிப்பிட்ட ஆலையில் எடுக்கப்பட்ட மாதிரி தொடர்பானது மட்டுமே என விளக்கமளித்தது. அப்போது FSSAI அதிகாரிகள் தங்கள் ஆலையில் இருந்து ஆறு மாதிரிகளை சேகரித்ததாக பிஸ்லெரி தெரிவித்துள்ளது. முதற்கட்ட ஆய்வில் ஐந்து மாதிரிகள் எந்தவொரு பிரச்சனையும் இல்லை. ஒரே ஒரு மாதிரியில் மட்டும் ஒரு லிட்டருக்கு 12 மைக்ரோகிராம் புரோமேட் பதிவானது. அனுமதிக்கப்பட்ட அளவு 10 மைக்ரோகிராம் ஆகும்.
இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்தபோது, அடுத்தகட்ட ஆய்வகத்தில் புரோமேட் அளவு அனுமதிக்கப்பட்ட வரம்புக்குள் இருந்ததாகவும், தனியாக PAHs இருப்பது சுட்டிக்காட்டப்பட்டதாகவும் பிஸ்லெரி நிறுவனம் கூறியுள்ளது. மேலும், இதுவரை மெயில் மூலமாகவோ நேரடியாகவோ தங்களுக்கு எந்த நோட்டீஸும் கிடைக்கவில்லை என்றும், FSSAI இணையதளத்திலும் அந்த நோட்டீஸை கண்டறிய முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
முடிந்துவிட்டது என நினைத்தோம்
தங்களது உற்பத்தி செயல்முறையில் 10 கட்டங்களாக 90க்கும் மேற்பட்ட தர பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் பிஸ்லெரி கூறியுள்ளது. அதே மாதிரியை FSSAI அங்கீகரித்த ஆய்வகத்திலும் சோதனை செய்ததாகவும், அங்கும் புரோமேட் அளவு அனுமதிக்கப்பட்ட வரம்புக்குள் இருந்ததாகவும் தெரிவித்துள்ளது. இந்த முடிவுகளை உணவு தர ஆய்வகத்தின் மண்டல அலுவலகத்தில் சமர்ப்பித்ததாகவும், அதன் பிறகு எந்தத் தகவலும் வராததால் விவகாரம் முடிவுக்கு வந்துவிட்டதாக தாங்கள் கருதியதாகவும் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
சோதனை
பிஸ்லெரி விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், தரமற்ற குடிநீர் விற்பனையைத் தடுக்க நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. பிஸ்லெரி போலவே மற்ற நிறுவனங்களின் பாட்டில்களையும் சோதனை நடத்த முடிவு செய்துள்ளது. மேலும், பிரபல குடிநீர் நிறுவனங்களின் பெயர்களையும் லேபிள்களையும் அப்படியே காப்பி அடித்து போலியாக தோற்றமளிக்கும் பெயர்களை பயன்படுத்தும் நிறுவனங்களையும் கண்காணித்து வருகிறது. நுகர்வோரை தவறாக வழிநடத்தும் வகையில் பெயர் அல்லது லேபிள்களை பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்


Click it and Unblock the Notifications
