சபரிமலை போகவே முடியாது.. 'தப்பி தவறி கூட அந்த தப்பு செஞ்சுடாதீங்க'.. பக்தர்களுக்கு திடீர் கட்டுப்பாடு
திருவனந்தபுரம்: சபரிமலை தரிசனத்துக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்து விட்டு சிலர் போகாமல் விடுகிறார்கள். அப்படி ஆன்லைனில் முன்பதிவு செய்துவிட்டு போகவில்லை என்றால், ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியாது என திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது. ஏன் இந்த கட்டுப்பாடு. இதன் பின்னணி என்ன என்பதை பார்போம்.
இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக சபரிமலையில் தரிசனம் விவகாரத்தில் நடந்து வருகிறது. சபரிமலை தரிசனத்துக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்களில் பாதி பேர் மட்டுமே தரிசனத்திற்கு வருகிறார்கள். சில சுற்றுலா நிறுவனங்கள் அல்லது முகவர்கள் மொத்தமாக முன்பதிவு செய்து விட்டு அவற்றை ரத்து செய்யாமல் விட்டு விடுகிறார்களா என்ற சந்தேகம் தேவஸ்தானத்திற்கு எழுந்துள்ளது.

இதுகுறித்து முறையாக விசாரணை நடத்த தேவஸ்தான தலைவர் ஜெயக்குமார், ஏ.டி.ஜி.பி. விஜயன் ஆகியோருக்கு தேவஸ்தானத்துறை அமைச்சர் முரளிதரன் உத்தரவிட்டிருந்தார். இந்தநிலையில் திருவிதாங்கூர் தேவஸ்தானம் ஆன்லைன் முன்பதிவில் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதுதொடர்பாக தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிபபல் கூறியிருப்பதாவது:- ஆன்லைன் முன்பதிவில் வருகிற 30-ந் தேதி வரை தினசரி எண்ணிக்கையில் கூடுதலாக 5 ஆயிரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
போலி முன்பதிவுகளைத் தடுக்கவும், மொத்தமாக முன்பதிவு செய்வதை தடுக்கவும் ஆதார் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணிற்கு வரும் ஓ.டி.பி.-ஐ உள்ளீடு செய்தால் மட்டுமே இனிமேல் முன்பதிவு செய்ய முடியும். ஆன்லைனில் முன்பதிவு செய்துவிட்டு, குறிப்பிட்ட நாளில் தரிசனத்திற்கு வராத பக்தர்கள் இந்த சீசனில் மீண்டும் ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியாது. ஆனால் இவர்கள் உடனடி தரிசன முன்பதிவு அடிப்படையில் தரிசனம் செய்யலாம்.
குறிப்பிட்ட நாளில் வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டால், தரிசன நாளுக்கு முன்பாகவே முன்பதிவை ரத்து செய்யவோ அல்லது தேதி மாற்றம் செய்யவோ வசதி செய்யப்பட்டுள்ளது. பம்பையில் செயல்பட்டு வந்த உடனடி தரிசன முன்பதிவு மையம் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பக்தர்கள் வருகை சரிவு
சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடப்பு மண்டல காலத்தின் முதல் 6 நாட்களில் பக்தர்கள் வருகை கடந்த ஆண்டை விட 46.7% சரிந்திருப்பதாக தேவஸ்தான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு 5,01,045 பேர் தரிசனம் செய்த நிலையில், விர்ச்சுவல் கியூ முன்பதிவு செய்த பலர் வராததால் இந்த ஆண்டு 2,71,827 பேர் மட்டுமே (2.29 லட்சம் பேர் குறைவு) தரிசனம் செய்துள்ளனர். இதனால் உண்டியல் மற்றும் பிரசாத விற்பனை மூலம் கோடிக்கணக்கில் வருவாய் குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.



Click it and Unblock the Notifications
