புழல் ஜெயிலில் அன்பில் மகேஷை சந்தித்த கனிமொழி.. 30 நிமிடம் மீட்டிங்கில் பேசியது என்ன?
சென்னை: சென்னையை அடுத்த புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். ஜாமீன் உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகள் குறித்து சுமார் 30 நிமிடங்கள் ஆலோசனை நடந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடி மோசடி செய்ததாக எழுந்த புகாரில் கைது செய்யப்பட்டு, புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை, திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி நேரில் சந்தித்துப் பேசினார்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் ஏற்கனவே மூன்று நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், மீண்டும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். அண்மையில் காணொளிக் காட்சி வாயிலாக ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு நீதிமன்றக் காவலும் நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில், புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அன்பில் மகேஷ் பொய்யாமொழியை திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி இன்று நேரில் சந்தித்தார். அப்போது அவருக்கு ஆறுதல் தெரிவித்ததுடன், தற்போதைய வழக்கின் நிலவரம், ஜாமீன் பெறுவதற்கான சட்ட நடவடிக்கைகள் மற்றும் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் குறித்து சுமார் 30 நிமிடங்கள் ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
ஏற்கனவே எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மூன்று முறை புழல் சிறைக்குச் சென்று அன்பில் மகேஷ் பொய்யாமொழியை நேரில் சந்தித்த நிலையில், தற்போது கனிமொழி கருணாநிதியும் சந்தித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது. இந்தச் சந்திப்பின்போது முன்னாள் அமைச்சர் சேகர்பாபு உடனிருந்தார். சந்திப்பை முடித்துக்கொண்ட கனிமொழி கருணாநிதி பின்னர் சிறை வளாகத்திலிருந்து புறப்பட்டுச் சென்றார்.
வழக்கில் அன்பில் மகேஷுக்கு தொடர்பு இருப்பதற்கான முதற்கட்ட ஆதாரங்கள் இருப்பதாக சென்னை சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் அன்பில் மகேஷ் தரப்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன்பு கடந்த நவம்பர் 17ம் தேதி ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தது. அப்போது அன்பில் மகேஷ் தரப்பில், காவல்துறை தாக்கல் செய்த பதில் மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் கோரப்பட்டிருந்தது. இதையடுத்து விசாரணையை நவம்பர் 24-ம் தேதிக்கு நீதிபதி லட்சுமிநாராயணன் ஒத்திவைத்தார். நாளைய விசாரணையில் அன்பில் மகேஷ் தரப்பு பதில் அளிக்கும். அத்துடன் காவல்துறை தரப்பிலும் வாதங்கள் வைக்கப்பட உள்ளன. நாளைதான் அன்பில் மகேஷ் ஜாமீன் பெறுவாரா இல்லை என்பது தெரியவர வாய்ப்பு உள்ளது.



Click it and Unblock the Notifications
