திமுக எடுத்த அதே முடிவில் தவெக.. திருப்பரங்குன்றம் விவகாரம்.. உதயநிதி பாஜகவுக்கு வன்னி அரசு பதிலடி
சென்னை: திமுக ஆட்சியில் தொடங்கிய திருப்பரங்குன்றம் கோயில் மலை தீபம் விவகாரம், தவெக ஆட்சிக்கு வந்தும் ஓயவில்லை. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை திமுக, தவெக அமல்படுத்தவில்லை என்பது விமர்சனமானது. திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றி கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதை எதிர்த்து தவெக அரசு சீராய்வு மனுத்தாக்கல் செய்துள்ளது. இந்த விவகாரத்தில் தவெக மீது குற்றம் சாட்டிய உதயநிதி, பாஜகவுக்கு வன்னி அரசு பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னையில் அமைச்சர் வன்னி அரசு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "தமிழ்நாடு அரசு முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில், மதச்சார்பற்ற அரசு தான் நடந்து கொண்டிருக்கிறது. அதற்கு திருப்பரங்குன்றம் வழக்கில் சீராய்வு மனு தாக்கல் செய்தது ஓர் முன் உதாரணம். இதை விடுதலை சிறுத்தைகள் கட்சியும் வரவேற்றுள்ளது. மதுரையில் நடந்த அமைதி பேரணியில் எங்கள் கட்சி தலைவர் திருமாவளவனும் பங்கேற்கிறார்.

திமுக எடுத்த அதே முடிவில் தவெக
ஒரே ஒரு செய்தியை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். இந்துக்களின் மரபு, பக்தர்களின் மரபு என்பது காலம் காலமாக எங்கு தீபம் ஏற்றுகிறார்களோ அதுதான் தொடர வேண்டும். அதையே அரசு வலியுறுத்துகிறது. மக்களின் குரல் என்னவோ அதுவே அரசின் குரலாக இருக்கும். கடந்த அரசு என்ன நிலைப்பாட்டை எடுத்ததோ அதையே இந்த அரசும் எடுத்துள்ளது. அப்படியிருக்கும்போது, தமிழகம் 100 ஆண்டு பின்னோக்கி சென்றதாக எதிர்க்கட்சி தலைவர் சொல்வதை ஏற்க முடியாது.
எதிர்க்கட்சிகள் காழ்புணர்ச்சியில் அவதூறு பரப்புகிறார்கள். சபரிமலை ஐயப்பன் கோயில் தீர்ப்பை பாஜக ஏற்றுக் கொண்டதா.அவர்களுக்கு என்ன தேவையோ அதை மட்டும் பேசுகிறார்கள். மக்களுக்காக மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஒரு அரசு, மக்கள் உணர்வுகளை, இந்து பக்தர்களின் உணர்வுகளை புரிந்து கொள்வதே மதச்சார்பற்ற அரசு. இது மக்களால் நடத்தப்படும் அரசு. அதை நிலை நிறுத்தும் வகையில் செயல்படுகிறோம்.
சங்பரிவார் கும்பலின் வன்முறை திட்டம்
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் பேசுவது ஆச்சர்யமாக உள்ளது. வழக்கம் போல தீபத்தூணில் தீபம் ஏற்றுவதுதான் முறை. அதைவிடுத்து நில அளவை கல்லில் தீபம் ஏற்ற சொல்வது என்ன மாதிரியான முரண்பாடு. தீபம் ஏற்ற சொல்வது தீபத்தூணா அல்லது நில அளவை கல்லா என்பதுதான் பிரச்சனை. பாஜக, ஆர்எஸ்எஸ் சங்பரிவார் கும்பல் மதக்கலவரத்தை, பதற்றத்தை உருவாக்க முயற்சிக்கிறார்கள்.
தீபம் எங்கு வேண்டுமானால் ஏற்றலாமா. திருப்பரங்குன்றம் மலைக்கு பதிலாக கீழே தீபம் ஏற்ற முடியுமா. இது என்ன மனநிலை. பதற்றத்தை உருவாக்குகிற, வன்மத்தை உருவாக்குகிற, வன்முறையை உருவாக்குகிற போக்கு இது. இந்து பக்தர்களின், மக்களின் உணர்வை புண்படுத்தும் கும்பலாக இவர்கள் மாறியுள்ளனர். சாதாரண மக்களின் மனநிலை என்பது வேறு. பாஜக, ஆர்எஸ்எஸ் சங்பரிவார் கும்பலின் மனநிலை வேறு என்பதற்கு இந்த நில அளவை கல் விவகாரம் ஓர் உதாரணம்" என்றார்.


Click it and Unblock the Notifications
