சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு.. தினமும் 80 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி
திருவனந்தபுரம்: மண்டல மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறக்கப்பட்டுள்ளது. உலக பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் மண்டல, மகர விளக்கு சீசனை ஒட்டி கார்த்திகை மாதம் 1 ஆம் தேதி நடை திறக்கப்படுவது வழக்கம். 60 நாட்கள் நடை திறந்து சிறப்பு பூஜைகள் நடைபெறும். 41 நாள் மண்டல பூஜை காலம் நாளை தொடங்கி டிசம்பர் 27 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
தந்திரி கண்டரரு பிரம்மதத்தன் முன்னிலையில் மேல்சாசந்தி நம்பூதிரி கோவில் நடையை திறந்து வைத்து தீபாரதனை நடத்தினார். இதையடுத்து 18 ஆம் படிக்கு கீழ் உள்ள கற்ஊர ஆழியில் தீ மூட்டப்பட்டது. தொடர்ந்து தந்திரி முன்னிலையில் அபிஷேகம் நடைபெற உள்ளது. வழக்கமான பூஜைகள் நடைபெற்ற பிறகு இரவு 11 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.

நாளை அதிகாலை 3 மணிக்கு நடை திறைக்கப்பட்டு பூஜை, வழிபாடு நடைபெற உள்ளது. பக்தர்கள் நாளை முதல் ஐயப்பனை தரிசனம் செய்யலாம். சபரிமலையில் ஆன்லைன் முன்பதிவு மற்றும் உடனடி முன்பதிவு மூலம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். தினமும் 80 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க திருவிதாங்கூர் தேவஸ்தானம் முடிவு செய்து உள்ளது. ஆன்லைன் முன்பதிவில் 66 ஆயிரம் பேரும், உடனடி முன்பதிவில் 14 ஆயிரம் பேரும் அனுமதிக்கப்பட உள்ளனர்.
முக்கிய நிகழ்வான மண்டல பூஜை அடுத்த மாதம் டிசம்பர் 27 ஆம் தேதி நடைபெறுகிறது. மண்டல பூஜை முடிந்த பிறகு கோயில் நடை அடைக்கப்படும். பின்னர் மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் 30 ஆம் தேதி மீண்டும் நடை திறக்கப்பட்டு ஜனவரி 14 ஆம் தேதி வரை நடை திறந்திருக்கும். சபரிமலையில் நடை திறக்கப்பட்டதை அடுத்து பக்தர்கள் நாளை முதல் சாமி தரிசனம் செய்ய உள்ளனர். தமிழகத்தில் இருந்தும் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவித்து, விரதம் இருந்து தினமும் ஐயப்பனை வழிபட தொடங்குவார்கள்.


Click it and Unblock the Notifications
