குடியரசு தின விழா: தமிழகத்தில் கோலாகல கொண்டாட்டம்
சென்னை: சென்னையில் 59வது குடியரசு தின விழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. கடற்கரை காந்தி சிலை அருகே நடந்த விழாவில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் எஸ்.எஸ்.பர்னாலா ஏற்றுக் கொண்டார்.
நாடு முழுவதும் குடியரசு தின விழா இன்று உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் களை கட்டியிருந்தன.
சென்னை கடற்கரை காந்தி சிலை அருகே குடியரசு தின விழா தமிழக அரசு சார்பில் கொண்டாடப்பட்டது. இங்கு தேசியக் கொடியை ஆளுநர் பர்னாலா ஏற்றி வைத்தார். பின்னர் அணிவகுப்பு மரியாதையையும் அவர் பார்வையிட்டு ஏற்றுக் கொண்டார்.
முதலில் இந்திய விமானப்படை விமானங்கள் தாழ்வாக பறந்து வந்தன. அவற்றுக்கு பர்னாலா சல்யூட் அடித்து மரியாதையை ஏற்றார். பின்னர் இந்திய கடலோரக் காவல் படை ஹெலிகாப்டர்கள் தாழ்வாக பறந்து வந்து பூக்களை தூவின.
இதையடுத்து ராணுவம், கடற்படை, விமானப்படை, முன்னாள் ராணுவத்தினர், மத்திய ரிசர்வ் போலீஸ், மத்திய தொழிலக பாதுகாப்புப் படை, ரயில்வே பாதுகாப்புப் படை, தமிழக தீயணைப்புப் படை, ஊர்க்காவல் படை, என்சிசி, பாரத் ஸ்கவுட் உள்ளிட்டவற்றின் வீரர்கள் அணிவகுத்து வந்தனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் கருணாநிதி, 2008ம் ஆண்டுக்கான அண்ணா வீரப் பதக்கங்களை, இரண்டு அரசு ஊழியர்கள் உள்ளிட்ட 5 பேருக்கு வழங்கினார்.
கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது, காந்தி அடிகள் காவல் பதக்கம் ஆகியவையும் வழங்கப்பட்டன.
தென் மண்டல கலாச்சார மையத்தைச் சேர்ந்த கலைஞர்கள், மூன்று கல்லூரிகள் மற்றும் நான்கு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்ற கலை நிகழ்ச்சியும் நடைபெற்றன.
இதுதவிர 20 அரசுத் துறைகளைச் சேர்ந்த அலங்கார ஊர்திகளும் ஊர்வலத்தில் அணிவகுத்து வந்தன. அரசின் நலத் திட்டங்கள், சாதனைகளைப் பிரதிபலிக்கும் வகையில் அவை இருந்தன.
இன்று மாலை ஆளுநர் மாளிகையில் முதல்வர், சபாநாயகர், அமைச்சர்கள் உள்ளிட்டோருக்கு ஆளுநர் பர்னாலா தேநீர் விருந்து அளிக்கிறார்.
மதுரையில் ..
தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும் 59வது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
மதுரை ஆயுதப் படை மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜவஹர் கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
பின்னர் 305 பேருக்கு ரூ. 12.37 லட்சம் மதிப்புள்ள திட்ட உதவிகளை அவர் வழங்கினார்.
முன்னதாக ஆயுதப் படை போலீஸ், தமிழ்நாடு சிறப்புப் போலீஸ் மற்றும் என்.எஸ்.எஸ். உள்ளிட்டவற்றின் வீரர்கள் கலந்து கொண்ட அணிவகுப்பு மரியாதையையும் அவர் ஏற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் 200 சுதந்திரப் போராட்ட வீரர்கள் கெளரவிக்கப்பட்டனர். கலாச்சார நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
காவல்துறை, வருவாய் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 80 பேருக்கு பதக்கங்களையும் ஆட்சித் தலைவர் வழங்கினார்.
ராமநாதபுரத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிர்லோஷ் குமாரும், சிவகங்கையில் ஆட்சித் தலைவர் பங்கர் குமார் பன்சாலும், திண்டுக்கல்லில் ஆட்சித் தலைவர் வாசுகியும் தேசியக் கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றனர். நலத் திட்ட உதவிகளையும், பதக்கங்களையும் வழங்கினர்.
புதுச்சேரியில் ..
புதுச்சேரியில், இந்திரா காந்தி விளையாட்டு வளாகத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம் நடந்தது.
இதில் துணை நிலை ஆளுநர் முகுந்த் மித்தி கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
புதுச்சேரி ஆயுதப் படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையையும் அவர் ஏற்றுக் கொண்டார்.
அதைத் தொடர்ந்து பல்வேறு பிரிவினரின் அணிவகுப்பு நடந்தது.












Click it and Unblock the Notifications