கருணாவுக்கு 9 மாதம் சிறை - லண்டன் கோர்ட் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

karuna
லண்டன்: விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து போட்டிக் குழுவை நடத்தி வந்த கருணாவுக்கு லண்டன் கோர்ட்டில், போலி பாஸ்போர்ட் வழக்கில் 9 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் அதிபர் ராஜபக்சேவின் தம்பிதான் தனக்கு போலி பாஸ்போர்ட்டுக்கு ஏற்பாடு செய்ததாக நீதிமன்றத்தில் கருணா பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் முக்கிய தளபதிகளில் ஒருவராக இருந்தவர் கர்னல் கருணா அம்மான் என்கிற விநாயகமூர்த்தி முரளிதரன். கடந்த 2004ம் ஆண்டு பிரபாகரனுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினார் கருணா. பின்னர் அங்கிருந்து பிரிந்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்ற புதிய குழுவை உருவாக்கி செயல்பட்டு வந்தார்.

இலங்கை அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த கருணாவைப் பயன்படுத்தி இலங்கை படைகள், கிழக்கில் உள்ள பல பகுதிகளைப் பிடித்தன.

இந்த நிலையில் கடந்த ஆண்டு கருணா இலங்கையிலிருந்து தப்பி லண்டன் சென்றார். நவம்பர் மாதம் லண்டன் புறநகர்ப் பகுதியான கென்சிங்டனில் உள்ள தனது அலுவலகத்தில் கருணா இருந்தபோது அவரை போலீஸார் கைது செய்தனர்.

அவர் மீது மேற்கு லண்டனில் உள்ள ஐஸில்வொர்த் கிரவுன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு டிசம்பர் 24ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, தனது குற்றத்தை கருணா ஒப்புக் கொண்டார். விரிவான வாக்குமூலத்தையும் அளித்தார்.

இதையடுத்து சமீபத்தில் அவரைக் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்தது. நேற்று (வெள்ளிக்கிழமை) தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டது.

நீதிபதி மெக்டோவல் கருணாவுக்கு 9 மாத சிறைத் தண்டனை விதிப்பதாக அறிவித்தார். தீர்ப்பை முகத்தில் எந்தவித சலனமும் இல்லாமல் அமைதியாக கேட்டார் கருணா.

ஏற்கனவே அவர் சிறையில் இருந்த 32 நாட்கள் போக மீதி உள்ள காலத்தை அவர் சிறையில் கழிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

'போலி பாஸ்போர்ட் கொடுத்தவர் ராஜபக்சே தம்பி'

இதற்கிடையை நீதிமன்றத்தில் கருணா அளித்துள்ள வாக்குமூலத்தில், அதிபர் ராஜபக்சேவின் தம்பி கோத்தபயா ராஜபக்சேதான் தனக்கு போலி பாஸ்போர்ட் கொடுத்ததாக கூறியுள்ளார் கருணா.

அவர் கொடுத்த வாக்குமூலத்தை அரசு தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வாசித்தார். அதில் கருணா கூறியிருப்பதாவது:

நான் இங்கிலாந்துக்கு போலி பாஸ்போர்ட் மூலம் வர முக்கிய காரணம் கோத்தபயா ராஜபக்சேதான். நான் விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து வந்தது முதல் கோத்தபயாவை எனக்கு நன்கு தெரியும்.

நான் போலி பாஸ்போர்ட் மூலம் இங்கிலாந்துக்கு வந்தது இங்கிலாந்து சட்டத்தின்படி தவறுதான். இருப்பினும் இந்த பாஸ்போர்ட்டுக்கு ஏற்பாடு செய்தது இலங்கை அரசுதான். அதுதான் எனக்கு பாஸ்போர்ட் எடுத்துக் கொடுத்து இங்கிலாந்துக்கு அனுப்பியது.

நான் விமானத்தில் ஏறிய பிறகுதான் என்னிடம் பாஸ்போர்ட்டே வழங்கப்பட்டது.

நான் அரசு அதிகாரி இல்லை என்ற போதிலும் எனக்கு இலங்கை அரசு முழு பாதுகாப்பு கொடுத்து காத்து வந்தது என்று கூறியுள்ளார் கருணா.

கருணாவின் இந்த பரபரப்பு வாக்குமூலத்தை இலங்கை அரசு மறுத்துள்ளது. இதுகுறித்து வெளியுறவு அமைச்சர் ரோஹித பொகல்லகாமா கூறுகையில், கருணா இங்கிலாந்து செல்ல இலங்கை அரசு எந்த வகையிலும் உதவவில்லை. பாஸ்போர்ட் எடுத்துத் தரவும் இல்லை என்றார் அவர்.

புகலிடம் கோருவாரா கருணா?

இதற்கிடையே தண்டனைக் காலம் முடிந்த பின்னர் அரசியல் புகலிடம் கோரி கருணா இங்கிலாந்து அரசிடம் விண்ணப்பிக்கக் கூடும் என அவரது வழக்கறிஞர் டேவிட் பிலிப்ஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், இதுவரை புகலிடம் கோரி கருணா விண்ணப்பிக்கவில்லை. தண்டனைக் காலம் முடிந்ததும் அவர் விண்ணப்பிக்கக் கூடும். இப்போது அவர் விண்ணப்பித்தாலும் கூட அதை யாரும் பரிசீலிக்க மாட்டார்கள். காரணம் தற்போது அவர் கிரிமினல் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்டுள்ள ஒரு கைதி.

கருணாவின் மனைவி மற்றும் 3 குழந்தைகள் ஏற்கனவே இங்கிலாந்தில்தான் வசித்து வருகின்றனர். எனவே அவர் இங்குதான் வசிக்க விரும்புவார் என்றார் பிலிப்ஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+