நாடு திரும்ப விரும்பும் வளைகுடா இந்தியர்கள்
துபாய்: வளைகுடாவில் பணிபுரியும் இந்தியர்களில் 10ல் 7 பேர் வேலையை விட்டுவிட்டு நாடு திரும்பிவிடவே ஆர்வமாக இருப்பதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
வளைகுடாவில் பணியாற்றும் இந்தியத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை இந்திய அரசு நிர்ணயித்துள்ளது. அத்திட்டம் மார்ச் மாதம் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிலையில், வளைகுடா நாடுகளில் பணியாற்றும் இந்தியர்களில் 69 சதவீதம் பேர், போதும் வளைகுடா, போவோம் இந்தியா என்ற எண்ணத்தில் இருக்கிறார்களாம்.
ஆசியன்பிசினஸ்.காம் என்ற இணையதளம் நடத்திய கருத்துக் கணிப்பில்தான் இது தெரிய வந்துள்ளது. இந்தியாவைத் தவிர பாகிஸ்தானைச் சேர்ந்த தொழிலாளர்களும் கூட வளைகுடா வேலையில் ெபரும் அதிருப்தியுடன் உள்ளனராம்.
இவர்களில் 69 சதவீத இந்தியத் தொழிலாளர்கள் இந்த ஆண்டுக்குள் தாயகம் திரும்பி விடும் முடிவில் உள்ளனராம். 16 சதவீத இந்தியர்களும், 13 சதவீத பாகிஸ்தானியர்களும் மட்டுமே வேலையை விடாமல் தொடரும் எண்ணத்தில் உள்ளனராம்.
இந் நிலையில் லார்சன் அண்ட் டூப்ரோ உள்ளிட்ட பல நிறுவனங்கள், இந்தியர்களை இந்தியாவுக்குத் திரும்புமாறும், அங்கே அதிக சம்பளம் தருவதாகவும் விளம்பரம் செய்து ஆட்களை இழுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளன.
தற்போது வளைகுடா நாடுகளில் உள்ள மூன்றில் இரண்டு மடங்கு பேர் வேலையை விட்டு விடத் தீர்மானித்துள்ளதால், வளைகுடா நாடுகளில் இவர்களை நம்பி உள்ள வேலைகள் பெரும் பாதிப்பை சந்திக்கும் என்று கூறப்படுகிறது.
ஓமன், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் பணியாற்றுபவர்கள்தான் பெரும் அதிருப்தியுடன் உள்ளனர். இங்குதான் அதிகம் பேர் வேலையை விட்டு விடும் எண்ணத்தில் உள்ளனராம்.
ஓமனில் முக்கால்வாசிப் பேர் வேலையை விடப் போவதாக கூறியுள்ளனர். 11 சதவீதம் பேர்தான் பொறுத்துப் பார்த்து முடிவெடுக்கப் போவதாக கூறியுள்ளனர்.
சவூதியில் 69 சதவீத இந்தியர்கள் வேறு வேலை பார்க்கப் போவதாக கூறியுள்ளனர். ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இது 68 சதவீதமாக உள்ளது.
பஹ்ரைனில்தான் இந்த அளவு மிகவும் குறைவாக உள்ளது. அங்கு வேலை பார்ப்போரில் பாதி பேர் புதிய வேலைக்கு முயற்சிக்கவில்லை என்று கூறியுள்ளனர். இருப்பினும் வேறு நல்ல வேலையாக இருந்தால் பரிசீலிப்போம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
வளைகுடா நாடுளில் கடந்த இரு வருடங்களில் வாழிடச் செலவுகள் பல மடங்கு அதிகரித்து விட்டன. அமெரிக்க டாலரின் சரிவு காரணமாக நாடுகளின் கரன்சிகளும் சரிவு கண்டுள்ளன. ஆனால் சம்பளம் மட்டும் இன்னும் உயராமல் இருப்பதுதான் இந்தியத் தொழிலாளர்களின் இந்த அதிருப்திக்கு முக்கியக் காரணமாக கூறப்படுகிறது.
பணவீக்கம் வளைகுடா நாடுகளில் கொடி கட்டிப் பறக்கிறது. கடந்த ஆண்டு கத்தாரில் பண வீக்க விகிதம் 14 சதவீதமாகவும், ஓமனில் 7.6 சதவீதமும், குவைத்தில் 6.2 சதவீதமும், சவூதியில் 6 சதவீதமும், பஹ்ரைனில் 4.9 சதவீதமும் இருந்தது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 2006ம் ஆண்டு பண வீக்க விகிதம் 9.3 சதவீதம் இருந்தது. இது கடந்த 19 ஆண்டுகளில் அதிகமாகும். இது இந்த ஆண்டு 12 சதவீதமாக உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தனைக்கும் முக்கிய காரணம் டாலர் வீழ்ச்சிதான்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வேலை பார்க்கும் வெளிநாட்டவரிலேயே மிக மிக அதிருப்தியுடன் காணப்படுவது தென் ஆப்பிரிக்கர்கள்தான். 2வது இடம் இங்கிலாந்துக்காரர்களுக்குக் கிடைத்துள்ளது.
வளைகுடா நாடுகளில் பணியாற்றும் 7,000 தொழிலாளர்களிடம் இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.
இந்தியாவின் வழியில் ஆசிய நாடுகள்:
இதற்கிடையே, இந்தியாவைப் போலவே, தங்களது நாட்டுத் தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிக்க பல்வேறு ஆசிய நாடுகள் தீர்மானித்துள்ளன.
வளைகுடா நாடுகளில் வேலைக்கு செல்லும் அன் ஸ்கில்ட் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக 1,000 தினார்கள் நிர்ணயிக்கப்பட வேண்டும். அப்படி இல்லாவிட்டால் அவர்கள் வளைகுடா நாடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்த உத்தரவு பஹ்ரைனில் மார்ச் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த நிலையில் இந்தியாவைப் போலவே தங்களது நாட்டுத் தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிக்க பல்வேறு ஆசிய நாடுகள் தீர்மானித்துள்ளன.
இதுகுறித்து இலங்கை தூதர் வசந்த சேனநாயகே கூறுகையில், வீட்டு வேலைக்குச் செல்லும் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை இலங்கை அரசு நிர்ணயித்துள்ளது. இதுகுறித்து வளைகுடா நாடுகளின் நிர்வாகத்தோடு ஆலோசனை மேற்கொண்டுள்ளோம் என்றார்.
இதேபோல, பாகிஸ்தானும் முடிவெடுத்துள்ளது. அபுதாபியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரி ஒருவர் கூறுகையில், குறைந்தபட்ச ஊதியம் குறித்த முறையான திட்டம் எதுவும் தற்போதைக்கு இல்லை. இருப்பினும், இதுபோன்ற திட்டத்தை ஆதரிப்பது குறித்து பாகிஸ்தான் அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.
இதுதொடர்பாக இதுவரை கொள்கை முடிவு எதையும் பாகிஸ்தான் அரசு அறிவிக்கவில்லை. உரிய பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் இதுகுறித்து முடிவெடுக்கப்படும்.
கட்டுமானத் தொழிலில் வேலை பார்ப்போருக்கு குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிப்பது குறித்து பரிசீலித்து வருகிறோம் என்றார்.
இதேபோல வங்கதேசம், நேபாளம் ஆகிய நாடுகளும் இந்தியாவின் வழியைப் பின்பற்றி குறைந்தபட்ச ஊதிய முறையை கொண்டு வருவது குறித்து சிந்தித்து வருகின்றனவாம்.
பிலிப்பைன்ஸ் அரசு ஏற்கனவே குறைந்தபட்ச ஊதியத் திட்டத்ைத அமல்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அன் ஸ்கில்ட் பிலிப்பைன்ஸ் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக 400 அமெரிக்க டாலர்களை அந்நாட்டு அரசு நிர்ணயித்துள்ளது. வீட்டு வேலை பார்க்கும் பணியாளர்களுக்கும் இந்த ஊதியம் பொருந்தும் என்பது
குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications