கச்சத்தீவு அந்தோணியார் திருவிழா: மத்திய அரசுக்கு வைகோ கோரிக்கை
சென்னை: கச்சத்தீவில் நடைபெறவுள்ள புனித அந்தோணியார் திருவிழாவில் தமிழக மீனவர்கள் கலந்து கொள்வதற்கு திமுக அரசும், மத்திய அரசும் உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் பேராலய விழா இந்த மாத இறுதியில் வருகிறது. அந்த விழாவில் காலம் காலமாக தமிழக மீனவர்கள் கலந்து கொண்டு வருகின்றனர்.
கச்சத்தீவுக்குச் சென்று இந்த விழாவில் கலந்து கொள்ள ராமேஸ்வரம் மீனவர்களுக்கு முழு உரிமையும் உள்ளது. ஆனால் கடந்த 2002ம் ஆண்டு முதல் கச்சத்தீவுக்கு தமிழக மீனவர்கள் வருவதற்கு இலங்கை கடற்படை அனுமதி மறுத்து வருகிறது.
1974ம் ஆண்டு கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுத்த பின்னர், தமிழக மீனவர்கள் எண்ணற்ற சிரமங்களையும், துயரங்களையும் சந்தித்து வருகின்றனர். கச்சத்தீவுக்கு வர விடாமல் இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை தடுத்து வருகிறது.
கச்சத்தீவில் நமது மீனவர்கள் வலைகளை உலர்த்திக் கொள்ளவும், ஓய்வு எடுக்கவும் உரிமை உள்ளது என்ற போதிலும், அதை இலங்கை கடற்படை அனுமதிப்பது கிடையாது.
2002ம் ஆண்டு 60 மீனவர்களை மட்டுமே கச்சத்தீவு வருவதற்கு இலங்கை கடற்படை அனுமதித்தது. இது 2005ல் 11 ஆக குறைந்து விட்டது. நமது மீனவர்களுக்கு கச்சத்தீவில் முழு உரிமை உள்ளபோதிலும், பல்வேறு போராட்டங்களை நடத்தியும் கூட அந்த உரிமையை அனுபவிக்க முடியாமல் உள்ளனர்.
இந்த நிலையில் இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள புனித அந்தோணியார் திருவிழாவில் ராமேஸ்வரம் மீனவர்களும் கலந்து கொள்ள மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், நமது மீனவர்களுக்கு உதவ வேண்டும் என்று கூறியுள்ளார் வைகோ.












Click it and Unblock the Notifications