ஓபாமாவுக்கு இந்தியர்கள் ஆதரவு

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வேட்பாளர் வாக்கெடுப்பில் பாரக் ஓபாமாவுக்கு இந்திய- அமெரிக்கர்களிடையே செல்வாக்கு பெருகி வருவதாக தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பொதுவாக ஜனநாயகக் கட்சிக்கே பெரும்பாலும் ஆதரவாக இருப்பார்கள். இந்தத் தேர்தலிலும் ஜனநாயகக் கட்சிக்கே இந்தியர்களின் பெரும்பாலான வாக்குகள் செல்லும்.

ஆனால், பாரக் ஓபாமாவுக்கும், ஹில்லாரிக்கும் இடையே கடும் போட்டி நிலவி வரும் நிலையில் இவர்களில் யாருக்கு இந்தியர்கள் ஆதரவு தரப் போகிறார்கள் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதலில் ஹில்லாரிக்கு இந்தியர்களின் ஆதரவு இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது ஹில்லாரி படிப்படியாக செல்வாக்கை இழந்து வரும் நிலையில் ஓபாமாவுக்கு ஆதரவாக இந்திய சமுதாயம் திரும்பி வருவதாக கூறப்படுகிறது.

இந்திய சமுதாயத்தினரில் முக்கிய அந்தஸ்துகளில் இருப்பவர்கள் ஓபாமாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால், இந்திய சமுதாயத்தினர் ஓபாமாவை முழு அளவில் ஆதரிக்கத் தொடங்கியுள்ளது தெளிவாகியுள்ளது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹாலிவுட் நடிக்ர கல்பன் மோடி (கல் பென்), ஓபாமாவுக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். ஓபாமாவுக்கு பிரசாரம் செய்வதற்காக தனது நடிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளாராம். தீவிரமாக பிரசாரத்திலும் அவர் ஈடுபட்டுள்ளார்.

இந்தியர்களிடம் மட்டும் பிரசாரம் செய்யாமல், தெற்காசியர்களிடமும் அவர் பிரசாரம் செய்கிறார்.

இதேபோல இன்னொரு இந்திய பிரபலமான ஆன் லதா கலயில் என்பவரும் ஓபாமாவுக்காக தீவிரப் பிரசாரம் செய்து வருகிறாராம். இவர் ஓபாமாவின் நெருங்கிய தோழியும் ஆவார். ஓபாமாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் ஆசிய பசிபிக் அமெரிக்க கவுன்சிலின் இணைத் தலைவராகவும் லதா செயல்படுகிறார்.

இதேபோல கிளீவ்லாண்ட் முன்னாள் சட்ட அமைச்சர் சுபோத் சந்திராவும், ஓபாமாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகிறார். இவர் கடந்த 2006ம் ஆண்டு ஜனநாயகக் கட்சி வேட்பாளராக முயன்று தோல்வி அடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கான்சாஸ் மாகாணத்தில் ராஜ் கோயல் என்ற இன்னொரு இந்தியப் பிரபலமும் ஓபாமாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அவருக்காக நிதி திரட்டவும் செய்கிறார்.

இதேபோல மேரிலாண்ட் மாகாண சட்டசபை பெரும்பான்மை தலைவரான குமார் பார்வேயும் ஓபாமாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இவர் நீண்ட காலமாக எம்.பி பதவியை வகித்து வரும் ஒரே இந்திய - அமெரிக்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் கிட்டத்தட்ட 30 லட்சம் இந்திய - அமெரிக்கர்கள் உள்ளனர். இவர்களில் எத்தனை பேர் ஓபாமாவுக்கு வாக்களிக்கப் போகின்றனர் என்று தெரியவில்லை. ஆனால் ஓபாமாவுக்கு ஆதரவாக இந்தியர்கள் வேகமாக திரும்பி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹில்லாரியை விட ஓபாமாவுக்கு இந்தியர்களிடையே நல்ல ஆதரவு ஏற்பட்டிருப்பதும் தெரிகிறது.

நாளை ஓபாமா பிறந்த ஹவாய் மற்றும் விஸ்கான்சின் ஆகிய இரு மாகாணங்களில் வாக்கெடுப்பு நடக்கவுள்ளது. தொடர்ந்து எட்டு மாகாணங்களில் ஹில்லாரியைத் தோற்கடித்த ஓபாமா, கடந்த வாக்கெடுப்பில் நியூ மெக்சிகோவில் தோல்வியைச் சந்தித்தார். இருப்பினும் நாளைய வாக்கெடுப்பில் ஓபாமா வெல்லக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+