கதறி அழுதேன்: தலாய் லாமா
டெல்லி: லாசாவில் திபெத்தியர்கள் நடத்திய போராட்டத்தை ஒடுக்க சீன பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த திபெத்தியர்களின் நிலையைப் பார்த்து கதறி அழுதேன் என்று திபெத்திய மதத் தலைவர் தலாய் லாமா கூறியுள்ளார்.
நியூஸ்வீக் இதழுக்கு தலாய் லாமா பேட்டி அளித்துள்ளார். அதில் திபெத்திய போராட்டம் குறித்து பேசியுள்ளார்.
தலாய் லாமாவின் பேட்டியிலிருந்து சில முக்கிய அம்சங்கள்:
திபெத்தில் நடக்கும் போராட்டத்தை ஒடுக்க சீனா அடக்குமுறையைக் கையாளுகிறது. லாசாவில் நடந்த போராட்டத்தை ஒடுக்க சீனா நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்களையும், காயமடைந்தவர்களின் கோலத்தையும் டிவியில் பார்த்து நான் கதறி அழுதேன்.
ஒவ்வொரு நாள் இரவும் நான் பிரார்த்தனை செய்கிறபோது, சீனர்களின் சந்தேகத்தை எடுத்துக் கொள்கிறேன். பதிலுக்கு பொறுமையையும், நம்பிக்கையையும் அவர்களுக்காக விட்டுக் கொடுக்கிறேன்.
அவர்களின் எதிர்மறையான உணர்வுகளை எடுத்துக் கொண்டு, நல்லெண்ணைத்தை அவர்களுக்கு விட்டுக் கொடுக்கிறேன்.
இறந்தாலும் போராட்டம் தொடரும்:
திபெத்திய போராட்டம் ஒருபோதும் ஓயாது. எனது மரணத்திற்குப் பிறகும் அது தொடரும்.
எனக்குப் பிறகு திபெத்திய போராட்டம் ஓய்ந்து விடும் என சீனா நினைக்கிறது. அது தவறு. அதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். தலாய் லாமா இல்லாவிட்டாலும் திபெத்தியர்கள் தங்களது போராட்டத்தை தொடருவார்கள். தங்களது நம்பிக்கையை அவர்கள் விட்டு விட மாட்டார்கள்.
புதிய தலைமுறை திபெத்தியர்கள் மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வுடனும், தன்னம்பிக்கையுடனும், தைரியத்துடனும் உள்ளனர். இப்போது எழுந்துள்ள ஆவேசப் போராட்டத்திற்கு அதுவே காரணம். இந்த உணர்வு ஓயாது. மாறாக இன்னும் வீரியமடையும்.
என்னைப் போன்ற பழைய தலைமுறையினர் போனாலும் கூட புதிய தலைமுறையினர் பொறுப்பை தங்களது கையில் எடுத்துக் கொண்டு தொடர்ந்து போராடுவார்கள்.
வன்முறை மூளலாம்:
நான் உயிருடன் இருக்கும் வரை திபெத்தியர்களுக்கும், சீனர்களுக்கும் இடையே வன்முறை மூளாமல் காக்க பாடுபடுவேன். ஆனால் எனக்குப் பின்னர் திபெத்தியர்கள் வன்முறையில் இறங்குவார்களோ என்ற அச்சம் எனக்கு உள்ளது.
சீனாவே ஒரு புத்த மத நாடுதான். இதை அங்குள்ள தலைவர்கள் உணர வேண்டும். இதை சீன அதிபர் ஹூ ஜின்டாவோவும், பிரதமர் வென்ஜியாபோவும் ஒத்துக் கொள்ள முன்வர வேண்டும்.
இப்போது திபெத்தில் நடைபெற்று வரும் போராட்டங்களை நான்தான் தூண்டி விடுகிறேன் என்று கூறியுள்ள வென்ஜியாபோ அதை நிரூபிக்க முன்வர வேண்டும்.
திபெத்தியர்களின் போராட்டத்தை ஒடுக்க அங்கு செல்போன்கள் செயலிழக்க செய்யப்பட்டுள்ளன. இமெயில் அனுப்ப முடியவில்லை. டிஜிட்டல் புகைப்படங்களையும் எடுத்து அனுப்ப முடியவில்லை.
திபெத்திய போராட்டத்தை அடக்குமுறை மூலம் ஒடுக்க முயலுகிறது சீனா. ஆனால் அது கடினம் என்பதை அவர்கள் தயவு செய்து புரிந்து கொள்ள வேண்டும் என்றார் தலாய் லாமா.












Click it and Unblock the Notifications