சமத்துவத்துக்கான வழிகளில் ஒன்று தான் இட ஒதுக்கீடு - தலைமை நீதிபதி

Subscribe to Oneindia Tamil

Supreme Court
டெல்லி: சமத்துவத்தை ஏற்படுத்துவதற்கான பல்வேறு வழிமுறைகளில் ஒன்று தான் இட ஒதுக்கீடு என பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

ஐஐடி, ஐஐஎம் உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களின் மாணவர் சேர்க்கையில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்தை கடந்த 2006ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்தது.

இதை எதிர்த்து சில அமைப்புகளும் குறிப்பிட்ட சில சமூக மாணவர்களும் நடத்திய போராட்டத்தை சில வட இந்திய மீடியாக்கள், குறிப்பாக சில டிவிக்கள், பெரிய அளவில் ஊதிவிட்டு நாடு முழுவதும் மாபெரும் போராட்டம் நடப்பது போல காட்டி மத்திய அரசை மாபெரும் வில்லன் போல சித்தரித்தன.

அதே நேரத்தில் இந்தப் போராட்டங்களுக்கு எதிராகவும், இட ஒதுக்கீட்டை ஆதரித்தும் நாடு முழுவதும் குறிப்பாக தென் இந்தியாவில் நடந்த பேரணிகள், கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை வெளியிலேயே சொல்லாமல் அப்படியே அமுக்கின இந்த மீடியாக்கள்.

இந் நிலையில் மத்திய அரசின் இந்த சட்டத்துக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. இதனால் 2007-2008 கல்வியாண்டில் 27 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த முடியாமல் போனது.

இதை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த அப்பீல் மனுவை தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான அரசியல் சட்ட பெஞ்ச் விசாரித்தது.

இந்த பெஞ்சில் நீதிபதிகள் அரிஜித் பசாயத், சி.கே.தாக்கர், ஆர்.வி.ரவீந்திரன், தல்வீர் பண்டாரி ஆகியோர் இடம் பெற்றனர். மத்திய அரசுக்கு ஆதரவாக திமுக, பாமக, லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதாதளம், ஐக்கிய ஜனதாதளம் ஆகிய கட்சிகளும் தங்களை இந்த வழக்கில் இணைத்துக் கொண்டு வாதாடின.

கிட்டத்தட்ட 3 மாதங்களாக இந்த வழக்கில் விசாரணை நடந்தது நேற்று பரபரப்பு தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில், 27 சதவீத இட ஒதுக்கீட்டு சட்டம் செல்லும் தீர்ப்பளிக்கப்பட்டது.

நீதிபதி தல்வீர் பண்டாரி தவிர இந்த பெஞ்சில் இடம் பெற்றிருந்த மற்ற 4 நீதிபதிகளும் இட ஒதுக்கீடு செல்லும் என தீர்ப்பளித்தனர்.

பெரும்பான்மை நீதிபதிகளின் தீர்ப்பு சாதகமாக இருந்ததால் மத்திய அரசின் இட ஒதுக்கீட்டு சட்டத் திருத்தம் செல்லும் என தலைமை நீதிபதி அறிவித்தார்.

500 பக்கங்கள் கொண்ட இந்தத் தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களின் மாணவர் சேர்க்கையில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் செல்லும். இச்சட்டத்துக்கு அடிப்படையாக இருந்த 93-வது அரசியல் சட்ட திருத்தமும் செல்லும். இந்த சட்டம், அரசியல் சட்டத்தின் அடிப்படை கட்டமைப்பை மீறவில்லை. ஆனால் பிற்படுத்தப்பட்டோரில் வசதி படைத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கக் கூடாது.

தாழ்த்தப்பட்ட, பழங்குடி இனத்தவரில் வசதி படைத்தோருக்கான இட ஒதுக்கீடு நீடிக்கும்.

முன்னாள், இந்நாள் ஜனாதிபதிகள், துணை ஜனாதிபதிகள், பிரதமர்கள், அமைச்சர்கள், முதல்வர்கள், எம்.பி, எம்.எல்.ஏக்கள், உச்ச நீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள், மத்திய அரசு அதிகாரிகள், ராணுவ அதிகாரிகள் ஆகியோர் வசதி படைத்தவர்களாக கருதப்படுவார்கள். அதனால் அவர்களின் வாரிசுகளுக்கு இட ஒதுக்கீடு அளிக்க கூடாது.

பிற்படுத்தப்பட்டோரை அடையாளம் கண்டறிய மத்திய அரசுக்கு உள்ள அதிகாரம் செல்லும். 1993ம் ஆண்டு செப்டம்பர் 8ம் தேதி மத்திய அரசு வெளியிட்ட அரசாணையில் நிர்ணயிக்கப்பட்ட அளவுகோல்களின்படி, வசதி படைத்தோரை அடையாளம் காண வேண்டும். சிறுபான்மையினர் தனிப் பிரிவினர் என்பதால், அவர்களின் கல்வி நிறுவனங்களில் இந்த இட ஒதுக்கீட்டை அமல்படுத்த மாட்டோம் என்ற மத்திய அரசின் நிலையை ஏற்றுக் கொள்கிறோம்.

இருப்பினும், 27 சதவீத இட ஒதுக்கீட்டை காலவரையின்றி தொடர்ந்து வழங்க மத்திய அரசு எடுத்துள்ள முடிவை ஏற்க முடியாது. இட ஒதுக்கீட்டை மேற்கொண்டு தொடருவது குறித்து 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

தனித்தனி தீர்ப்புகள்:

இந்த வழக்கில் ஒவ்வொரு நீதிபதியும் தனித்தனியே தீர்ப்புகளை எழுதியுள்ளனர். அதன் விவரம்:

தலைமை நீதிபதி:

தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தனியாக அளித்த தீர்ப்பில்,சமத்துவத்தை ஏற்படுத்துவதற்கான பல்வேறு வழிமுறைகளில் ஒன்று தான் இட ஒதுக்கீடு. இதன்மூலம் ஒடுக்கப்பட்ட சமூகங்களை முன்னுக்கு கொண்டு வர முடியும். ஓட்டுக்காகவே இட ஒதுக்கீடு கொண்டு வந்திருப்பதாக மனுதாரர்கள் கூறுவதை ஏற்க முடியாது. அதை நிராகரிக்கிறோம்.

சாதி அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோர் தேர்வு செய்யப்படுவதாகவும் மனுதாரர்கள் கூறுகிறார்கள். சாதி அடிப்படையில் மட்டுமே பிற்படுத்தப்பட்டோர் தேர்வு செய்யப்படுவது இல்லை. வறுமை, சமூகரீதியாக, பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலைமை போன்ற இதர அளவுகோல்களையும் பின்பற்றி, பிற்படுத்தப்பட்டோர் தேர்வு செய்யப்படுகிறார்கள். எனவே, இந்த காரணத்துக்காக இச்சட்டத்தை செல்லாது என கூற முடியாது.

இடஒதுக்கீட்டை தொடருவது குறித்து 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மறு ஆய்வு செய்ய வேண்டும்.

நீதிபதி அரிஜித் பசாயத்:

நீதிபதி அரிஜித் பசாயத் தனியாக அளித்த தீர்ப்பில், பிற்படுத்தப்பட்டோரை சரியாக அடையாளம் காணவேண்டும். மண்டல் கமிஷன் வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து அமைக்கப்பட்டஆணையம், திறமையாக செயல்பட வேண்டும்.

இட ஒதுக்கீட்டு பட்டியலில் சாதிகளை சேர்ப்பதையும், நீக்குவதையும் மட்டுமே வேலையாக கொண்டிருக்கக் கூடாது. வசதி படைத்தோரை நீக்குவதன் மூலம், பிற்படுத்தப்பட்டோரை எளிதாக அடையாளம் காணலாம்.

பிற்படுத்தப்பட்டோரை அடையாளம் காண மத்திய அரசு விதிமுறைகளை வகுக்கக்கூடாது என்றும், பாராளுமன்றம்தான் வகுக்க வேண்டும் என்றும் மனுதாரர்கள் கூறுவதை ஏற்க முடியாது.

கல்விரீதியாக பின்தங்கிய நிலைமையை அடையாளம் காண, சாதாரண பட்டப்படிப்பையோ, தொழிற்கல்வி படிப்பையோ அளவுகோலாக கொள்ள வேண்டும். பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டு இடங்களில் காலி இடங்கள் இருந்தால், அவற்றை பொதுப்பிரிவு மாணவர்களை கொண்டு நிரப்ப வேண்டும்.

இட ஒதுக்கீடு தவறு-நீதிபதி தல்வீர் பண்டாரி:

நீதிபதி தல்வீர் பண்டாரி தனியாக அளித்த தீர்ப்பிபல், சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு, அர்த்தமற்றது. சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு நீடிக்கும் வரை, சாதியற்ற சமுதாயத்தை அமைக்க முடியாது.

ஆரம்ப கல்வி பெறுவது அடிப்படை உரிமை என்று அரசியல் சட்டத்தின் 21(ஏ) பிரிவு கூறுவதால், 6 முதல் 14 வயது வரையுள்ள அனைத்து குழந்தைகளுக்கும் ஆரம்ப கல்வி அளிக்க வேண்டும். குழந்தைகளை வேலைக்கு அனுப்பும் பெற்றோரையும், குழந்தைகளை வேலைக்கு அமர்த்தும் நிறுவனத்தினரையும் சிறையில் அடைக்க சட்டம் கொண்டு வரலாம்.

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் வகையில், ஏழை பெற்றோருக்கு மத்திய அரசு நிதி உதவி வழங்க வேண்டும். முன்னாள் எம்.பி, எம்.எல்.ஏக்களின் வாரிசுகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது. பல்கலைக்கழகத்தில் ஒருவர் பட்டம் பெற்றிருந்தால், அவரை கல்வி ரீதியாக முன்னேறியவராக கருத வேண்டும். அதன்பிறகு அவர் பட்ட மேற்படிப்போ, இதர படிப்புகளோ படிக்க விசேஷ சலுகைகள் அளிக்கக் கூடாது என்று கூறியுள்ளார்.

மேலும் சுயநிதி கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதை எதிர்த்து, சுயநிதி கல்வி நிறுவனங்கள் எதுவும் உச்ச நீதிமன்றத்தை அணுகவில்லை. அதனால் அது தொடர்பாக, 4 நீதிபதிகள் எந்த முடிவுக்கும் வரவில்லை. ஆனால் நீதிபதி தல்வீர் பண்டாரி மட்டும், சுயநிதி கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டை திணிப்பது சட்ட விரோதம் என்றும், அது அரசியல் சட்டத்தின் அடிப்படை கட்டமைப்பை மீறுவதாக ஆகிவிடும் என்று கூறியுள்ளார்.

இந்தத் தீர்ப்பின் மூலம் உயர் கல்வி நிறுவனங்களில் மொத்தம் 49.5 சதவீத இடங்கள் இட ஒதுக்கீடு மூலம் நிரப்பப்படும். அதாவது தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு 15 சதவீதமும், பழங்குடியின மாணவர்களுக்கு 7.5 சதவீதமும், பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடும் வழங்கப்படும். இது மொத்தம் 49.5 சதவீதமாகும்.

மீதியுள்ள 50.5 சதவீத இடங்கள் மட்டும் பொதுப்போட்டி மூலம் நிரப்பப்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+