போலீஸை கடித்து தப்பிய கார் திருடன் சுட்டுப் பிடிப்பு!
சேலம்: சேலத்தில் மும்பை போலீஸார் தன்னைப் பிடிக்க வந்தபோது அவர்களை கடித்து விட்டு தப்ப முயன்ற கார் திருடனை, போலீஸார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மும்பையில் நடந்த பல்வேறு வாகனத் திருட்டுச் சம்பவத்தில் தமிழகத்தைச் சேர்ந்த இருவருக்குத் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸார் கடந்த 2 ஆண்டுகளாக தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதில் சமீபத்தில் ஒருவன் பிடிபட்டான்.
அவனிடம் நடத்திய விசாரணையில், சேலம், அயோத்தியாப்பட்டணத்தைச் சேர்ந்த வெள்ளாளகுண்டம் பழனிச்சாமி (55) என்பவர்தான் முக்கியப் புள்ளி என்று தெரிய வந்தது.
இதையடுத்து பழனிச்சாமியைப் பிடிக்க கெய்க்வாட் என்ற இன்ஸ்பெக்டரின் தலைமையில் தனிப்படை போலீஸார் சென்னை மற்றும் சேலத்தில் தேடுதல் வேட்டை நடத்தினர். ஆனால் பழனிச்சாமி கிடைக்கவில்லை.
இந்த நிலையில் சேலம் சின்ன திருப்பதியில் பழனிச்சாமி பதுங்கியிருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து சேலம் வந்த மும்பை போலீஸார் மாநகர காவல்துறை ஆணையர் கோபாலகிருஷ்ணனுக்குத் தகவல் தெரிவித்து விட்டு பழனிச்சாமியைக் கண்காணிக்க ஆரம்பித்தனர்.
நேற்று இரவு அஸ்தம்பட்டியில் உள்ள வழக்கறிஞர் ஒருவரின் வீட்டுக்கு பழனிச்சாமி வந்தார். அவருடன் அவரது மகனும் உடன் வந்தார். பின்னர் அங்கிருந்து கிளம்பி மத்திய சிறை அருகே உள்ள ஹோட்டலுக்குச் சென்றனர்.
அங்கு மும்பை போலீஸார் விரைந்து வந்து பழனிச்சாமியைப் பிடித்தனர். இதையடுத்து அவர்களுடன் பழனிச்சாமி வாக்குவாதம் செய்தார். ஆனால் போலீஸார் அவரை வளைத்துப் பிடித்னர். இதையடுத்து போலீஸாருடன் தரையில் புரண்டு சண்டை போட்டார் பழனிச்சாமி.
அப்போது இன்ஸ்பெக்டர் கெய்க்வாட்டின் தோளில் பலமாக கடித்தார் பழனிச்சாமி. பின்னர் தப்பித்து ஓட முயன்றார்.
மும்பை போலீஸார் சீருடையில் இல்லாததால், அங்கிருந்த பொதுமக்கள் பழனிச்சாமிக்கு ஆதரவாக வந்தனர். இதற்கு மேல் விட்டால் நமக்கு ஆபத்து என்று நினைத்த மும்பை போலீஸார் துப்பாக்கியை எடுத்து வானை நோக்கி சுட்டனர்.
இதையடுத்தே வந்திருப்பது போலீஸ் எனத் தெரிந்து பொதுமக்கள் சிதறி ஓடினார். ஓட முயன்ற பழனிச்சாமி அப்படியே தரையில் அமர்ந்து விட்டார்.
அவரை பிடித்து மடக்கி ஆட்டோவில் போட்டு அஸ்தம்பட்டி காவல் நிலையத்திற்கு மும்பை போலீஸார் கொண்டு சென்றனர். அங்கு விரைந்து வந்த காவல்துறை ஆணையர் கோபாலகிருஷ்ணன் பழனிச்சாமியிடம் விசாரணை நடத்தினார்.
பழனிச்சாமி மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். பிறகு அவரை போலீஸார் சிறையில் அடைத்தனர்.
கடிக் காயம் அடைந்த இன்ஸ்பெக்டர் கெய்க்வாட் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
கைதான பழனிச்சாமி மீது சேலம் மாநகர போலீஸ் நிலையங்களில் மட்டும் 2005-ம் ஆண்டில் 28 வாகனங்கள் திருட்டு வழக்கு இருந்தது. இதில் அவரை போலீசார் கைது செய்து திருட்டு போன வாகனங்களை மீட்டனர். அதன்பின்னர் மாயமான பழனிச்சாமி மும்பை சென்று டாரஸ், டிப்பர் போன்ற 22 கனரக வாகனங்களை கொள்ளையடித்துள்ளார்.
கொள்ளையடித்த வாகனங்களை சேலம் உள்பட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் விற்றுள்ளார். பின்னர் மும்பை செல்லாமல் இங்கேயே பதுங்கி விட்டார்.
பழனிச்சாக்கு 3 மகன்கள் உள்ளனர். அவர்களில் ஒருவர் என்ஜினீயரிங் படித்து வருகிறாராம். விரைவில் பழனிச்சாமியை மும்பைக்கு அழைத்துச் செல்ல மும்பை போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications