வணிகர்களின் வரி நிலுவை ரூ. 98 கோடி தள்ளுபடி
சென்னை: நலிந்த வணிகர்களின் நலனை கருத்தில் கொண்டு, அரசுக்கு வணிகர்களிடமிருந்து வர வேண்டிய வரி நிலுவைத் தொகையான ரூ. 98.7 கோடியை தமிழக அரசு தள்ளுபடி செய்துள்ளது.
சட்டசபையில் வணிகவரித் துறை மானியக் கோரிக்கைகள் மீது நடந்த விவாதத்தின்போது வணிகவரித்துறை அமைச்சர் உபயதுல்லா இதைத் தெரிவித்தார்.
அவர் கூறுகையில்,
1951ம் ஆண்டில் இருந்து 2002ம் ஆண்டு வரை சுமார் 50 ஆண்டுகளுக்கு, வணிகர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவை வரி மற்றும் தண்டத் தொகையான ரூ. 2,810 கோடி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதில், 1952ம் ஆண்டிலிருந்து 1991ம் ஆண்டு வரை மட்டும் ரூ. 98.71 கோடி நிலுவையில் உள்ளது.
பல ஆண்டுகளாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டும் நொடிந்த நிலையில் உள்ள வணிகர்களிடமிருந்து நிலுவையை வசூல் செய்ய வாய்ப்பு இல்லை. இதனால் அத்தகையை நலிந்த வணிகர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த துறையில் இதுவரை எடுத்திராத முடிவாக,
தலைவர் கலைஞர் தலைமையில் நடக்கும் சமுதாயத்தின் அனைத்து பிரிவினரின் நலனில் அக்கறை காட்டும் அரசு, இந்த நிலுவைத் தொகையான ரூ.98.71 கோடியை தள்ளுபடி செய்திட முடிவு எடுத்துள்ளது.
மிளகாய் வத்தல், புளி, தனியா, மஞ்சள், பெருங்காயம் போன்ற பொருட்களுக்கு மதிப்புக்கூட்டு வரி சட்டத்தின் கீழ் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கடுகு, சோம்பு, வெந்தயம் ஆகியவற்றுக்கு 4 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. இதற்கும் வரிக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. அதை ஏற்று, கடுகு, சோம்பு, வெந்தயம் ஆகியவற்றுக்கு வரி விலக்கு அளிக்கப்படும் என்றார் உபயதுல்லா.












Click it and Unblock the Notifications