எதிர்க்கட்சி, ஆளும்கட்சி வேற்றுமை களையணும் -கருணாநிதி

திமுக ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டாண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி ஆளும் ஜனநாயக முற்போக்குக் கூட்டணி கட்சித் தலைவர்கள் ஜி.கே.மணி (பாமக), சி.கோவிந்தசாமி (மார்க்சிஸ்ட்), வி.சிவபுண்ணியம் (இந்திய கம்யூ.), ரவிக்குமார் (விடுதலை சிறுத்தைகள் கட்சி) ஆகியோர் சட்டசபையில் முதல்வர் கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவித்தனர். அப்போது, கருணாநிதி 100 ஆண்டுகள் வாழவேண்டும் என்றும் அவர்கள் வாழ்த்தினர்.
அதற்கு நன்றி தெரிவித்து 85 வயதை எட்டிப்பிடிக்கும் பழுத்த அரசியல்வாதியான கருணாநிதி பேசுகையில்,என்னை 100 ஆண்டுகள் வாழவேண்டும் என்று 'சபித்த' தோழர்களுக்கு எந்தவகையில் நன்றி சொல்லப்போகிறேன் என்று தெரியவில்லை.ஆனால் இயற்கை என்னை அனுமதிக்கும்வரை உயிர்வாழ்வதற்கு முயற்சி செய்வேன் என்று கூறிக்கொள்கிறேன்.
இங்குள்ள அரசியல் கட்சிகள் தங்களுக்குள் உள்ள மனக்கசப்புகளை நீக்கிவிட்டு, ஒருவருக்கொருவர் இணக்கமாக செயல்படவேண்டும் என்பது எனது வேண்டுகோளாகும். இந்த வேண்டுகோள், எனது கூட்டணிக்கட்சி நண்பர்களுக்கு மட்டுமல்ல, எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் சேர்த்துதான்.
ஆளும்கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் பரஸ்பரம் மரியாதையாக நடந்து கொண்டு மனிதநேயத்தை நிலைநாட்டவேண்டும்.
எனது வேண்டுகோளை நிறைவேற்றுவீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. இங்கு உறுப்பினர்கள் வாழ்த்தியதைப் போல ஒருவேளை என்னால் உயிரோடு இருக்கமுடியாது போனால், எனது இந்த வேண்டுகோளை உறுப்பினர்கள் சற்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். இது ஒரு வயதான கிழவனின் உத்தரவல்ல, சின்னஞ்சிறுவனாக தெரிவித்த ஆசை ஆகும்.
எனது இந்த அறிவுரையை ஏற்று பின்பற்றி தமிழ்நாட்டுக்கும் தமிழர்களின் மேன்மைக்காக நீங்கள் பாடுபடவேண்டும். நான் நீண்டகாலமாக மக்களுக்கு சேவை செய்துள்ளேன் என்று நீங்கள் நம்புகிறீர்கள் என்றால், இதுதான் நீங்கள் பதிலுக்கு எனக்கு ஆற்றும் நன்றி்க்கடனாகும்.
நான் 50 அல்லது 60 வயதை கடந்தபோதெல்லாம் இன்னும் நீண்டநாட்கள் வாழவேண்டும் என்ற விருப்பம் தோன்றியது. காரணம் மக்களுக்கு சேவையாற்றவேண்டும் என்ற நினைப்பு. ஒருவேளை எனது எஞ்சிய வாழ்நாட்கள் குறைவாக இருந்துவிட்டால், அதில் மக்களுக்கு பணியாற்றக்கூடிய நாட்கள் இன்னும் குறைவாக இருந்துவிடுமே என்று எண்ணி அஞ்சியிருக்கிறேன்.
இதுதான் நான் நீண்ட நாள் வாழ விரும்பியதன் நோக்கம்.
நான தினசரி காலை 5 மணிக்கெல்லாம் கண் விழித்து எழுந்து பணியாற்றுகிறேன். இதை எதற்காகச் சொல்கிறேனென்றால், இன்றைய இளைய சமுதாயத்தினர், நடுத்தர வயதினர் இந்த பழக்கத்தை பின்பற்றி உடல் ஆரோக்கியத்துடன் நீண்டநாள் வாழவேண்டும் என்பதற்காக.
ஆனால் இப்போதெல்லாம், என்னைச் சுற்றியுள்ளவர்களுடன் நட்புடன் பழகிய மனதிருப்தியோடு மக்களுக்கு சேவையாற்றிக் கொண்டிருக்கும்போதே எனது உயிர் பிரிந்துவிடவேண்டும் என நினைத்துவருகின்றேன் என்று உணர்ச்சிவசப்பட்டு பேசினார்.
இந்த உருக்கமான பேச்சை முடித்து அமர்ந்தபோது கருணாநிதி உணர்ச்சி வசத்தால் கண் கலங்கினர். இதைப்பார்த்த சட்டசபை உறுப்பினர்களும் நெகழ்ச்சியடைந்து கண்கலங்கினர். சில அமைச்சர்கள் தங்கள் கன்னத்தில் வழிந்த கண்ணீரை துடைத்தபடியே பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தனர்.
பிறந்தநாள் விழா வேண்டாம்:
இந்நிலையில், வரும் ஜூன் 3ம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என்று திமுகவினருக்கு தமிழக முதல்வரும் அக்கட்சியின் தலைவருமான கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது பற்றி கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில், ஜூன் முதல் வாரம் நான் சென்னையில் இருக்கப்போவதில்லை. உடல் மற்றும் மன உளைச்சல் காரணமாக எனது பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்க்க விரும்புகிறேன்.
எனது பிறந்தநாள் விழாவை கட்சியினர் கொண்டாட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறன் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications