கடலோர பாதுகாப்பு: ஜெ. புகாருக்கு டிஜிபி ஆதாரத்துடன் மறுப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக கடலோரப் பகுதிகளில் 12 கடல்சார் காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக டிஜிபி கே.பி. ஜெயின் ஆதாரத்துடன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் குற்றச்சாட்டை அவர் மறுத்துள்ளார்.

இதுதொடர்பாக டிஜிபி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நாட்டின் பாதுகாப்பிற்கு அல்-கொய்தா மற்றும் விடுதலைப் புலிகள் போன்ற பயங்கரவாத அமைப்புகள் கடல் வழியாக அச்சுறுத்தல்கள் ஏற்படுத்துவதை தடுக்கும் பொருட்டு, கடலோரப் பாதுகாப்பை பலப்படுத்த கடலோர பாதுகாப்புத் திட்டம்' என்ற பெயரில் ஒரு திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருவதாகவும், அத்திட்டத்தின் கீழ், மாநில அரசு அமைக்க வேண்டிய 12 கடல் சார் காவல் நிலையங்களை அமைக்கவில்லை என்றும்,

கடலோர பாதுகாப்பை பலப்படுத்துவதில் தமிழக அரசு மெத்தனம் காட்டி வருவதாகவும், அதனால் தமிழகம் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல்களை எதிர்நோக்கி வருகிறது என்றும் பத்திரிகைகளுக்கு விடுக்கப்பட்ட அறிக்கை (ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை) ஒன்று வெளிவந்துள்ளது. இச்செய்தி உண்மைக்கு மாறானது.

கடலோர பாதுகாப்பு நடவடிக்கைகளில், தமிழகம் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாகவும், உதாரணமாகவும் திகழ்ந்து வருகிறது. தமிழகத்தில், கடலோர பாதுகாப்பு குழுமம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை பிற மாநிலங்கள் பின்பற்றி வருகின்றன.

7 காவல் நிலையங்கள் தயார்:

கடலோர காவல் நிலையங்கள் அமைப்பது குறித்து 2005ம் ஆண்டு மத்திய அரசு ஆணையிட்டும், அது குறித்து (அப்போதைய ஜெயலலிதா அரசு) எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

2006ம் ஆண்டு மே மாதத்திற்குப் பிறகு, (திமுக அரசு ஆட்சிக்கு வந்த பின்) தமிழக அரசு உத்தரவிட்டதன்பேரில், காவல் நிலையங்களை அமைப்பதற்கு தகுந்த இடங்களை தேர்ந்தெடுத்து, காவல் நிலைய கட்டிடங்கள் கட்டும் பணிகள் தொடங்கி, ஏழு காவல் நிலையங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

எஞ்சிய 5 காவல் நிலையங்கள் கட்டும் பணி முடியும் தருவாயில் உள்ளன. கட்டி முடிக்கப்பட்ட ஏழு காவல் நிலையங்களில் பணி அமர்த்துவதற்காக, அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் கடல் நீச்சல், கப்பல் செலுத்துதல் போன்ற சிறப்பு பயிற்சிகள் முடிவுற உள்ளதால், கட்டி முடிக்கப்பட்ட ஏழு கடலோர காவல் நிலையங்களும் இன்னும் ஒரு வார காலத்திற்குள் இயங்கவுள்ளன.

ஆகஸ்ட் மாதத்திற்குள் பிற 5 காவல் நிலையங்களும் திறக்கப்பட்டு, அனைத்து காவல் நிலையங்களும் கடலோர பாதுகாப்பு பணியை மேற்கொள்ளும்.

மேலும், மாநில அரசின் வேண்டுகோளின்படி, மத்திய அரசு அனுப்பிய இரண்டு கடற்படை கப்பல்கள் மற்றும் ரோந்து படகுகள் ஆகியவற்றின் உதவியுடன், காவல் துறையினர், கடலோர காவல் படை மற்றும் இந்திய கடற்படை ஆகியோருடன் ஒருங்கிணைந்து இந்திய கடற்பகுதியில் தீவிர ரோந்து செய்து வருவதன் மூலம் இலங்கைக்கு பொருட்கள் கடத்துவதையும், தீவிரவாதிகள் தமிழகத்தில் நுழைவதையும் தடுத்து வருகின்றனர்.

இலங்கையிலிருந்து வரும் தமிழ் அகதிகளை தக்க முறையில் சோதனை செய்து, அகதிகள் என்ற போர்வையில் தீவிரவாதிகள் எவரும் தமிழ்நாட்டிற்குள் நுழையாதவாறு கண்காணித்தும் வருகின்றனர்.

45 பேருக்கு 'குண்டாஸ்':

கடந்த 2 ஆண்டுகளாக, காவல்துறையினர் மேற்கொண்ட கடத்தல் தடுப்பு நடவடிக்கைகளின் போது, மாநிலத்திலிருந்து இலங்கைக்கு வெடிபொருட்கள், மருந்துகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் போன்றவற்றை கடத்த முயன்ற மற்றும் அவர்களுக்கு உதவியாக இருந்த இலங்கைத் தமிழர்கள் 48 பேர் உட்பட மொத்தம் 139 நபர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களுள் 17 இலங்கைத் தமிழர்கள் உள்பட 45 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டனர்.

காவல்துறையினர், மாநிலத்தில் தீவிரவாத மற்றும் பயங்கரவாதச் செயல்கள் வேரூன்றாமல் இருக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். கடலோர பாதுகாப்பை பலப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எவ்வித தொய்வுமின்றி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று கூறியுள்ளார் டிஜிபி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+