வலையில் சிக்கிய விஜய்? "தூய சக்தி" பிம்பம் உடைக்கப்படுகிறதா? புட்டு புட்டு வைக்கும் பிரபலம்
சென்னை: தமிழக அரசியலில் விஸ்வரூபம் எடுத்துள்ள குதிரை பேரம் குறித்த புகார்கள், ஜனநாயகத்தின் மாண்பையே கேள்விக்குள்ளாக்கி வருகின்றன.. இது தொடர்பாக ஆளுநரின் தலையீடு மற்றும் எதிர்க்கட்சிகளின் சட்டப் போராட்டங்களுக்கு மத்தியில், "தூய்மையான சக்தி" என தன்னை முன்னிறுத்தும் விஜய்யின் அரசியல் பிம்பம் இப்போது சில நெருக்கடிகளை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.. இந்த சூழலில் மூத்த அரசியல் விமர்சகரான எஸ்.பி. லட்சுமணன் சில காட்டமான விமர்சனங்களை, தவெக அரசு மீது வைத்துள்ளார்.
Etamil News சேனலுக்கு பேட்டி தந்துள்ள எஸ்.பி. லட்சுமணன், "ஆளுநரிடம் புகார் அளிப்பது ஒரு சம்பிரதாயமாக மாறிவிட்டதா, அல்லது அவர் மத்திய அரசின் தூதுவராகச் செயல்படுகிறாரா என்ற சந்தேகம் எழுகிறது. டிடிவி தினகரன் அளித்த புகாரே குதிரை பேரம் குறித்த முதல் புகார்... ஆனால், அமமுக எம்எல்ஏக்கள் இழுக்கப்பட்ட விவகாரத்தில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டும், எந்த விசாரணையும் நடக்கவில்லை.

ஆளுநரிடம் புகார்
சனிக்கிழமைகளில் கட்சி இணைப்பு விழாக்கள் நடப்பதைப் போன்ற சூழல் தொடர்வதால், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கக் கோரி ஆளுநரை அணுகுவதையோ அல்லது சிபிஐ விசாரணை கோருவதையோ அரசியல் கட்சிகள் தவிர்க்க முடியாது. காரணம், இந்த விஷயத்தில் நீதிமன்றத்தை நாடவும் வாய்ப்புண்டு.
ஆட்சியைப் பாதுகாக்க விஜய் கையிலெடுக்கும் அதே ஆயுதத்தை எதிர்க்கட்சிகளும் நாளை பயன்படுத்தும். "நீங்கள் ராஜினாமா செய்துவிட்டு வாருங்கள், நான் பிரச்சாரம் செய்கிறேன்" என்று விஜய் சொல்கிறார் என்ன அர்த்தம்? அவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தருவதையே குறிக்கிறது. இது ஜனநாயகத்திற்கு மாறானது என்பதைவிட, அரசியல் தந்திரம் சார்ந்தது என்று சொல்லலாம்.
தவெகவுக்கு வரும் முன்னாள்கள்
ஆளும் கட்சி எம்எல்ஏக்களும் தவெகவுக்கு போனால் அமைச்சர் பதவி கிடைக்கலாம் என்ற நப்பாசையில்தான் வருகிறார்கள். இதைத் தடுக்கவே நீதிமன்றம் தற்காலிகத் தடை விதித்துள்ளது. இதனால் எம்.எல்.ஏ.க்கள் பதவி விலகுவதில் தயக்கம் ஏற்பட்டுள்ளது.
விஜய் தன்னை ஒரு'தூய்மையான சக்தி என்று முன்னிறுத்துவதால், ஜனநாயகத்தின் மாண்பைக் குறைக்காமல் காப்பதே அவருக்கு அழகு. அதைவிட்டுவிட்டு, அரசியல் ஆதாயத்திற்காக எம்எல்ஏக்களைத் தன் பக்கம் இழுப்பது, அவர் மீதான நேர்மை மற்றும் நம்பகத்தன்மை குறித்த பிம்பத்திற்குச் சிறிதும் நல்லதல்ல.
செந்தில் பாலாஜி விவகாரம்
எஸ்.காமராஜ் மற்றும் செந்தில் பாலாஜி ஆகியோரின் மீதான வழக்குகள் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டும் கிடப்பில் போடப்பட்டுள்ளன. ஆட்சி கையில் இருக்கும்போது எதிர்க்கட்சியினர் மீது வழக்குத் தொடுப்பதும், அதை நீர்த்துப்போகச் செய்வதும் அரசியல் விளையாட்டே. செந்தில் பாலாஜி விவகாரத்தில், எஃப்.ஐ.ஆரில் பெயரே இல்லாதவர்களைச் சாட்சிகள் மூலம் உள்ளே இழுக்க முயற்சி நடக்கிறது. இது ஒருவிதமான காமெடி போலத் தெரிந்தாலும், பாதிக்கப்பட்டவர்களுக்குத்தான் அதன் வலி தெரியும்.
விஜய் தனது நிர்வாகத்தில் காட்டும் வேகம், அவர் சொன்ன கொள்கைகளுக்கு நேர்மாறாக உள்ளது. அவர் தனது நிர்வாகச் செயல்பாடுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஆளுநர் மாநில நிர்வாகத்தில் தலையிடும்போது, அதற்கு விஜய் தலைமையிலான அமைச்சரவை சரியான பதிலடி கொடுக்க வேண்டும். சட்டப் போராட்டங்களைத் தாண்டி, அரசியல் ரீதியான பதிலடிகளும் நிர்வாகத் திறனும் மிக முக்கியம்.
பொறியில் சிக்கிய விஜய்?
விஜய்க்கு விஜய்க்கு வாக்களித்தவர்களில் ஒரு பகுதியினர், இப்போதைய மாற்றங்களைக் கண்டு "அவசரப்பட்டு வாக்களித்துவிட்டோமோ?" என்று யோசிக்கத் தொடங்கியுள்ளனர். விஜய் தனது ஆட்சிக்கு எதிராக உள்ள அதிருப்தியைப் புரிந்துகொள்ள வேண்டும். எம்எல்ஏக்கள் பணத்திற்காக சென்றார்களா அல்லது வேறு சலுகைகளுக்காக சென்றார்களா என்பது கேள்விக்குறி.
சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி போன்றோர் அதிருப்தியில் இருந்தாலும், அவர்கள் எடப்பாடியையே இன்னும் பொதுச்செயலாளராக ஏற்றுக்கொண்டுள்ளனர். நீதிமன்றத்தில் தடை உத்தரவு இருப்பதால், குறைந்தது ஜூலை 31-ம் தேதி வரை எந்த எம்.எல்.ஏ.வும் கட்சி மாற மாட்டார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.














Click it and Unblock the Notifications